சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சீசனுக்கான ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஞாயிறன்று முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் களமாடின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ருதுராஜ் – கான்வே இணை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர். ஆனால், கான்வே 5 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய மொயின் அலி 17 பந்துகளின் 21 ரன்கள் எடுத்து சாய் கிஷோர் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய ஜெகதீசன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ருதுராஜ் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய ஷிவம் டூபே (0), தோனி (7) ஆகியோர் சொற்ப ரன்களிலேயே வெளியேறினார். ஜெகதீசன் 39 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் சென்னை அணி 20 ஓவர்களுக்கு 133 ரன்கள் சேர்த்தது.
இதைத்தொடர்ந்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் விர்திமான் சாஹா, ஷூப்மான் கில் ஆகியோர் ஆரம்பம் முதல் அதிரடி காட்ட துவங்கினர். அதிரடியாக ஆடிய கில், மதீஷா வீசிய பந்தில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்த மேத்தீவ் வேட் 20 ரன்கள் எடுத்து மொயின் அலி பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஆனாலும் தனது அதிரடிய விட்டுக்கொடுக்காமல் ஆடிய விர்திமான் சாஹா, ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து தனது அரை சதத்தை கடந்து, 67 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து குஐராத் அணி வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதல் வெற்றிகளை குவித்து வருகிறது. ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற குஜராத் அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து வருகிறது.