பரிசுத்தொகை
சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸுக்கு
2.6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.20 கோடி)
2-ஆம் இடம் பெற்ற ரூத்திற்கு
1.6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.10 கோடி)
பாரம்பரியமிக்க அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 142-வது சீசன் இளம் வீரர் - வீராங்கனைகளின் அதிரடியால் கடந்த காலங்களை விட நடப்பு சீசன் தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்றது. மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து நாட்டின் ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்ற நிலை யில், தொடரின் இறுதி நிகழ்வான ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அதிரடி வீரர் அல்காரஸ் (19 - ஸ்பெயின்), தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் நார்வேயின் ரூத்தை (23) எதிர்கொண்டார். இந்திய நேரப்படி திங்களன்று அதிகாலை நடை பெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-4, 2-6, 7-6 (7-1), 6-3 என்ற செட் கணக்கில் ரூத்தை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று 19 வயதில் கிராண்ட்ஸ்லாம் வரலாறுடன் இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் இணைந்தார்.
அனுபவம் இல்லா சாதனை
டென்னிஸ் உலகில் முதன்மையானது, முக்கியமானது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். இதனை ஒரு முறையாவது வென்று விட வேண்டும் என்பதே டென்னிஸ் வீரர்களின் - வீராங்கனைகளின் மிகப்பெரிய கனவாகும். இந்த கனவில் ஒட்டுமொத்த டென்னிஸ் உலகமே மூழ்கியிருப்பதால் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒவ்வொரு ஆட்டமும் அனல் பறக்கும். முக்கியமாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்பவர்கள் வயதிலும், ஆட்டத்திறனிலும் போதுமான அனுபவம் பெற்றிருப்பார்கள். இதுதான் கிராண்ட்ஸ்லாம் வரலாறு. தற்போது அமெரிக்க ஓபனை வென்றுள்ள அல்காரஸ் வயதில் நடால், பீட் சாம்ரஸ் ஆகியோர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருந்தாலும் அவர்கள் அதற்கு முன் போதுமான அனுபவத்துடன் களமிறங்கி பட்டம் வென்றனர். ஆனால் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் சர்வதேச டென்னிஸ் தொடரில் (ரியோ ஓபன் - பிரேசில்) காலடி வைத்தார். சர்வதேச களத்திற்கு வந்து 3 வருட இடைவெளி கூட இல்லை. அதற்குள் கடின மான டென்னிஸ் தளம் கொண்ட அமெரிக்க ஓபனை அதிரடி ஆட்டத்துடன் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளார் என்பதே மிகப்பெரிய சாதனை.
அனல் பறந்த அல்காரஸின் அதிரடி
கிராண்ட்ஸ்லாம் இறுதி போட்டிகளில் கண்டிப்பாக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக வீரர் - வீராங்கனைகள் போதுமான அளவு நிதானத்துடன், பொறுமையாக புள்ளிகளை குவிப்பார்கள். இதுதான் காலம் கடந்த வழக்கம். ஆனால் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்றொரு பதற்ற சூழ்நிலையை பற்றி கண்டுகொள்ளாமல் தனது அனல் பறக்கும் ஆட்டத்தால் நார்வே நாட்டின் ரூத்தை புரட்டியெடுத்தார். சர்வீஸ் முதல் ரிவர்ஸ் வரை அனைத்து ஷாட்களும் மிரட்டல் அடி தான்.