இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-ஆவது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலத்தின் முக்கிய நகரான விசாகப்பட்டினத்தில் வெள்ளியன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கிய நிலையில், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மிடில் ஆர்டர் வீரர்கள் திணறினர். ஆனால் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் தனி ஒருவராக போராடி அசத்தலான ஆட்டத்துடன் விசாகப்பட்டினத்தில் நங்கூரம் அமைத்து சதமடித்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் (179) - அஸ்வின் (5) ஆகியோர் களத்தில் இருந்த நிலையில், சனியன்று தொடர்ந்து 2-ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து அசத்தினார். இது அவருக்கு முதல் இரட்டை சதம் என்ற நிலையில், ஜெய்ஸ்வால் (209) ஆட்டமிழந்த பின்பு இந்திய அணியின் முதல் இன்னிங்ஸும் முடிவுக்கு வந்தது.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 112 ஓவர்களில் 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஆண்டர்சன், சோயப் பசீர், ரெஹான் அகமத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
திணறல்
தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நிலையில், பும்ரா (3) வேகத்தையும், குலதீப் யாதவின் (2) சுழலையும் சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறினர்.
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 55.5 ஓவர்களில் 253 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கிராவ்லி 76 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இன்று 3-ஆம் நாள் ஆட்டம்
இந்தியா - இங்கிலாந்து
நேரம் : காலை 9:30 மணி
இடம் : ஒய்எஸ்ஆர் மைதானம், விசாகப்பட்டினம், ஆந்திரா
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)
உ.பி.யில் கொண்டாட்டம்
ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்ததை நாடு முழுவதும் நெட்டிசன்கள் மீம்ஸ்களுடன் கொண்டாடி வரும்நிலையில், ஜெய்ஸ்வாலின் சொந்த ஊரான சூர்யவனில் (உத்தரப்பிரதேசம்) உள்ளூர்வாசிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.