games

img

விளையாட்டு செய்திகள்

 ஆனந்த கண்ணீரில் நனைந்த ஆப்கானிஸ்தான் அணி

உலகக்கோப்பையில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்

9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செவ்வா யன்று நடைபெற்ற கடைசி “சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் (குரூப் 1) அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய  வங்கதேசம் அணி தொடக்கத்திலேயே கடுமையாக திணறி யது. அதாவது 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் என எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அதன் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கிய போது 19 ஓவரில் 114 ரன்கள் எடுக்க வேண்டும் என டக்வொர்த் லிவிஸ் விதி மூலம் வெற்றி இலக்கு மாற்றப்பட்டது.

மழை... விக்கெட் சரிவு...

டக் வொர்த் லிவிஸ் விதியின் இலக்கும் எட்டக்கூடியது தான் என்பதால் வங்கதேச அணி நிதானமாக ரன் குவித்தது. ஆனால் மழையால் மைதானத்தின் தன்மை மாறுபட்ட நிலையாலும், ஆப்கானிஸ்தான் வீரர்களின் அசத்தலான பந்துவீச்சாலும் வங்கதேச அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 18ஆவது ஓவரில் அந்த அணிக்கு 2 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் இருந்த நிலையில், 12 பந்துகளுக்கு 12 ரன்கள் என்று எடுக்க  வேண்டிய இக்கட்டான சூழலில் வங்கதேசம் தவித்தது. தொடக்க வீரர் லிட்டன் தாஸ் களத்தில் இருந்ததால் அவர்  வங்கதேச அணியை வெற்றி பெற வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின்  நட்சத்திர பந்துவீச்சாளர் நவீன் அடுத்தடுத்து 2 விக்கெட்டு களை வீழ்த்தி வங்கதேச அணியை பந்தாடினார். இறுதியில் வங்கதேச அணி 17.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டி-20 உலகக்கோப்பையில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி தனக்கென்று ஒரு வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான் அணி. மேலும் “சூப்பர் 8” சுற்றின் “குரூப் 1” ஆப்கானிஸ்தான் அணியோடு இந்திய அணியும் புள்ளிப்பட்டியலில் முதலிட அந்தஸ்தோடு  அரை யிறுதிக்கு முன்னேறியது. அதிகம் எதிர்பார்த்த அதிரடிக்கு பெயர் பெற்ற ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.

ஆப்கானிஸ்தானில் உற்சாகக் கொண்டாட்டம்

உலகக்கோப்பையில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியதை ஆப்கானிஸ்தான் வீரர்கள் மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் மைதானத்தில் குவிந்து இருந்த அந்நாட்டு ரசிகர்கள் ஆனந்த கண்ணீருடன் கொண்டாடினர். இதனால் போட்டி நடைபெற்ற வின்சன்ட் மைதானம் உற்சாகக் கடலில் நனைந்தது. இதேபோல ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ரசிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆனந்த கண்ணீர் மல்க கொண்டாடினர். உலகக்கோப்பை வென்ற ஒரு  நாடு இவ்வாறு கொண்டாடியதில்லை என்று கூறும் அளவிற்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள், ரசிகர்கள் வெற்றி கொண்டாட்டங்களை வெளிப்படுத்திய நிலையில், இந்த  கொண்டாட்ட நிகழ்வுகள் சமூகவலைத்தளங்களில் டாப் ஆர்டரில் வைரலாகி வருகின்றன.

இன்றைய அரையிறுதி ஆட்டம்

தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான்

இடம் : பார்படாஸ், மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : காலை 6:00 மணி