election2021

img

மக்களிடம் அனுதாபம் பெற மம்தா நாடகம் போடுகிறார்... காங். தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றச்சாட்டு

கொல்கத்தா:
நந்திகிராம் தொகுதி வேட்புமனு தாக்கலின்போது, நான்கைந்து பேர் சேர்ந்து தன்னை தள்ளிவிட்டதாகவும், இதில் தனக்கு காலில் அடிபட்டுள்ளதாகவும் மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்ந்துள்ளார். தன்மீதான நந்திகிராம் தாக்குதல் திட்டமிட்ட சதி என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், சம்பவத்தை நேரில்பார்த்தவர்கள் “மம்தா தாக்கப்படவில்லை. அது ஒரு அசம்பாவிதம்” என்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். மம்தா வந்த காரின் கதவு, தூண் ஒன்றில் மோதிவிட்டது; அதில்தான் மம்தாவுக்கு அடிபட்டது என்றும் தெரிவித்தனர். இந்நிலையில், தேர்தலுக்காக மம்தா தாக்குதல் நாடகம் ஆடுவதாக, மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சித்துள்ளார். நந்திகிராமில் போட்டியிடுவது கடினம் என தெரிந்தவுடன் மம்தா நாடகம் போடுகிறார். இதன்மூலம் மக்களிடம் அவர் அனுதாபம் தேடப் பார்க்கிறார் என்று ஆதிர் ரஞ்சன் கூறியுள்ளார்.“இளைஞர்கள் சிலர், ஒரு முதல்வரை தள்ளி விட்டனர் என்பதை நம்பமுடியவில்லை. மாநிலத்தின் முதல்வர் என்பதுடன், காவல்துறையையும் தன்கையில் வைத்திருப்பவர் மம்தா. அப்படிப்பட்டவருடன் போலீசார் யாரும் இல்லை என்பதும் நம்பும்படியாக இல்லை. ஒருவேளை தாக்கப்பட்டார் என்று வைத்துக் கொண்டாலும், மேற்குவங்கத்தில் ஒரு முதல்வருக்கே இதுதான் நிலை என்றால், சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பு எந்த அளவில் இருக்கும்? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.இது மம்தா பலவீனமடைந்து உள்ளார் என்பதையே காட்டுகிறது. அவர் நாடகம் போடுகிறார். மக்களின் உணர்வுகளுடன் விளையாட முயற்சிக்கிறார்” என்றும் சவுத்ரி குறிப்பிட் டுள்ளார்.

                                   ************

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம் அளித்துள்ள பேட்டியில், “இந்த விவகாரத்தில், ஒருதலைப்பட்சமற்ற முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனென்றால், இது ஒன்றும் முதன்முறையல்ல. கடந்த காலங்களிலும் கூட, இது போன்ற பல்வேறு கதைகளை மம்தா உருவாக்கினார். அவரை மக்கள் நம்பக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

;