election2021

img

11 முறை... களத்தில்....

தமிழகத்தில் 16-வது சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து அதிக முறை தேர்தலில் போட்டியிடுவோர்  பற்றிய குறிப்பு இது:அண்ணா மறைவுக்குப் பிறகு நடந்த 1971 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில்
தொடங்கிக் கருணாநிதி மறைவுக்குப் பின் நடக்கும் 2021 ஆம் ஆண்டு வரையில் நடந்தஎல்லாத் தேர்தல்களிலும் களம் கண்டு வரும் ஒரே தலைவராக உள்ளார், திமுகவின் பொதுச்செயலாளரும் தற்போதைய காட்பாடி தொகுதியின் வேட்பாளருமான துரைமுருகன். 11 முறை தேர்தல் களம் கண்டுள்ள துரைமுருகன் இரண்டு முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளார். 9 முறை காட்பாடி தொகுதியிலும், 2 முறை ராணிப்பேட்டை தொகுதியிலும் போட்டியிட்டுள்ள துரைமுருகன் 12-வது முறையாக மீண்டும் காட்பாடி தொகுதியில் களமிறங்கி உள்ளார்.

துரைமுருகனுக்கு அடுத்தபடியாக அதிமுகவின் கே.ஏ.செங்கோட்டையன், சபாநாயகர் தனபால், முன்பு அதிமுகவில் இருந்து தற்போது திமுக வேட்பாளர்களாக உள்ள முன்னாள் அமைச்சர்கள் ஈரோடு முத்துசாமி மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் அதிமுக முதன்முதலில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்த 1977 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர்.கே.ஏ.செங்கோட்டையன் 2001 ஆம் ஆண்டு நடந்த தேர்தலைத் தவிர்த்து மற்ற எல்லாத் தேர்தல்களிலும் சத்தியமங்கலம் மற்றும் கோபிசெட்டிப்பாளையம் தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். 1996ஆம் ஆண்டு தவிர மற்ற எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார் செங்கோட்டையன்.ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளராகக் களமிறங்கி உள்ள முத்துசாமி அதிமுகவில் 1977, 1980, 1984, 1991 ஆம் ஆண்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானவர். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். கடந்த 2011 ஆம் ஆண்டு திமுக சார்பில் ஈரோடு கிழக்குத் தொகுதியிலும் 2016 ஆம் ஆண்டு ஈரோடு மேற்குத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த முத்துசாமி, தற்போது மீண்டும் ஈரோடு மேற்குத் தொகுதியில் களமிறங்கி உள்ளார்.

தமிழகச் சட்டப்பேரவையின் தற்போதைய சபாநாயகரான தனபால், அவிநாசி (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக முதன்முதலாக ஆட்சியமைத்த 1977 தேர்தல் தொடங்கி 1984 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தல்களிலும், 2001 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானர். 2011 ஆம் ஆண்டு ராசிபுரம் தொகுதியிலும் 2016 ஆம் ஆண்டு அவிநாசி தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ள தனபால் தற்போது மீண்டும் அவிநாசி தொகுதி அதிமுக வேட்பாளராகக் களமிறங்கி உள்ளார்.

அருப்புக்கோட்டை தொகுதியின் திமுக வேட்பாளராகக் களமிறங்கி உள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி ஆகியோரின் இருவரது அமைச்சரவையிலும் இடம்பெற்றவர். இதுவரை 10 சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட்டுள்ள இவர்,இரண்டில் மட்டுமே தோல்வியடைந்துள் ளார். அதிகபட்சமாக சாத்தூர் தொகுதியில் இருந்து மட்டும் 6 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

;