தருமபுரி:
குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக களத்தில் உறுதியோடு போராடி வரும் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு தான் எங்கள் வாக்கு, என அரூர் சட்டமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஏ.குமாருக்குஅப்பகுதி பெண்கள் ஏகோபித்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்இந்தியாவையே உலுக்கியது. தமிழகத்தின் கண்ணியம் கப்பலேறியது. இக்கொடூர செயல்களில் ஈடுபட்ட ஆளுங்கட்சி பிரமுகர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிமுக திசை திருப்பமுயற்சித்து தோல்வி அடைந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களால், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் மந்திரிகள் முதல் வார்டு நிர்வாகிகள் வரை பெண்களின் மீது வன்கொடுமைகளில் ஈடுபட்ட செய்திகள் வெளியாகி அதிர்ச்சியடைய வைக்கிறது. இந்நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்று வெற்று விளம்பரம் செய்து எடப்பாடி அரசு மக்களைஏமாற்ற முயற்சிக்கிறது. இதனை அம்பலப்படுத்தியும், குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க அயராது பாடுபடுவேன் என அரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.குமார் உறுதியளித்து வருகிறார்.இதனை செவிமடுக்கும் பெண் வாக்காளர்கள் “கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். ஏழைகள், பெண்களுக்கு ஆதரவான கட்சி அது. எனவே, எங்கள் வாக்குகள் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திற்குதான்” என உறுதி கூறினர். முன்னதாக இந்த தேர்தல் பிரச்சாரத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத்தலைவர் ஏ.ஜெயா, செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, துணைத்தலைவர் கே.பூபதி, கே.சுசீலா, தமிழ்மணி, மீனாட்சி, மங்கை, ரங்கநாயகி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.