election-2019

img

தேர்தல் அறிக்கை ;இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தமிழ்நாடு மாநிலக்குழு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக்குழுவின் தேர்தல் அறிக்கையை மார்ச் 30 அன்று பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், சுபாஷினி அலி மற்றும் நிலோத்பல் பாசு, ஹன்னன் முல்லா ஆகியோர் வெளியிட்டனர்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழுவின் தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 5 அன்று மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், அ.சவுந்தரராசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுகநயினார், க.உதயகுமார் ஆகியோர் வெளியிட்டனர்.


விடுதலைப் போராட்ட களத்தில் உருவான இந்திய கம்யூனிச இயக்கம் தேச விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒடுக்குமுறை, சிறைவாசம், சித்ரவதை அனைத்தையும் நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டது. விடுதலைக்குப் பிறகும், 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது முதல் இன்று வரை மக்கள் நலன் என்ற மைய புள்ளியிலிருந்து வழுவாமல் செயலாற்றி வருகிறது. எண்ணற்ற தோழர்களின் தியாகம், அர்ப்பணிப்பு, நேர்மையான அரசியல் நெறிகள், மனித குல விடுதலைக்கான மார்க்சிய தத்துவம், இந்திய முன்னேற்றத்துக்கான மாற்றுத் திட்டத்தோடு, இந்திய அரசியலில் இருள் அகற்றும் ஒளி விளக்குகளாக சுடர்விட்டு வருகிறது. இடதுசாரிகளின் வலிமையைப் பொறுத்தே இந்திய அரசியலின் திசை வழி தீர்மானிக்கப்படும். வலதுசாரிகளின் வல்லாதிக்கத்தால், இந்திய மக்கள் அனைவரது வாழ்வும் சின்னாபின்னமாக சிதைக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது அவசியமாகிறது. காலத்தின் குரலாகவும், களப்பணியின் நாயகர்களாகவும் செயல்பட்டு வருகிற கம்யூனிஸ்ட்டுகள் சட்டங்களை உருவாக்குகிற மன்றங்களில் கணிசமாக இருப்பதன் மூலமே தேசத்தை பாதுகாக்க முடியும். 17வது நாடாளுமன்ற தேர்தலை நாடு சந்திக்க உள்ளது. தேசத்தை இருண்ட காலம் நோக்கி அழைத்துச் செல்லும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணியைத் தோற்கடித்து, மதச்சார்பற்ற மாற்று அரசாங்கத்தை ஆட்சியில் அமர வைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சூளுரைத்துள்ளது. இத்தேர்தலில் நாடு முழுவதும் 71 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழமைக் கட்சிகளுடன் இணைந்து களம் காணுகிறது. 


தேர்தலின் இரண்டாவது கட்டமான ஏப்ரல் 18ம் தேதி, தமிழகமும், புதுவையும் தேசத்தின் திசைவழியை தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றப் போகின்றன. கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியின் வேதனைகளை எண்ணிப் பார்த்து, தமிழகத்தை அவர்கள் தொடர்ந்து வஞ்சித்த வரலாற்றை நெஞ்சில் நிறுத்தி, மாற்றத்தை நோக்கி அடி எடுத்து வைக்க கிடைத்திட்ட வாய்ப்பாக இந்தத் தேர்தலை பயன்படுத்திட வேண்டும்.தமிழக ஆட்சி அதிகாரத்தில் நூலிழையில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதிமுக, அதற்கு விலையாக மாநில உரிமைகளையும், மக்கள் நலன்களையும் காவு கொடுத்து, மத்திய ஆட்சியாளர்களிடம் சரணாகதி அடைந்து கிடக்கிறது. அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக என்ற இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியை முறியடித்து, மத்தியில் மதச்சார்பற்ற அரசாங்கத்தை நிறுவி, இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்த உயரிய நோக்கோடும், தமிழக நலன் காக்கவும், திமுக, இடதுசாரிகள், மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியாக கம்பீரமாக உருவெடுத்து தேர்தல் களத்தில் மக்களின் ஆதரவு கோரி நிற்கின்றன.மத்திய பாஜக அரசு கடந்த தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம், விலைவாசியைக் குறைப்போம், கருப்புப் பணத்தை கண்டுபிடித்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம், வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு தருவோம் என அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் தண்ணீர் மேல் கோலமாக தடம் அழிந்து விட்டன. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி போன்ற நடவடிக்கைகள் மூலம் முறைசாரா துறை, சிறு குறு நடுத்தர தொழில்கள் அனைத்தும் நொறுங்கியுள்ளன.


தலித்துகள், இசுலாமியர் மீதான கொலை வெறித்தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை அதிர்ச்சியளிக்கும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பெருமளவில் விவசாய நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்படுகின்றன. விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர். அனைவருக்கும் கல்வியும், ஆரோக்கியமும் என்பது வெற்று வார்த்தைகளாக நிறமிழந்து நிற்கின்றன. ரஃபேல் போர் விமான ஊழல் சந்தி சிரிக்கிறது. மொத்தத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைத் தேர்தல் ஜூம்லா என்று கூச்சமில்லாமல் கூறி திரிகிறார்கள். ராணுவ வீரர்களின் தியாகத்தையும், விஞ்ஞானிகளின் சாதனைகளையும் வாக்குகளாக்கும் மோசமான நடைமுறையைப் பின்பற்றுகின்றனர்.தமிழகத்தில் நீட் தேர்வை திணித்ததன் மூலம், மாணவர்களின் மருத்துவ கனவுக்கு உலை வைத்தனர். வர்தா, ஒக்கி, கஜா புயல் நிவாரணமாக கேட்ட தொகையில் 5 சதவீதம் கூட கொடுக்க மறுத்தனர். தமிழகத்துக்குத் தர வேண்டிய பல நிதிகள் நிலுவையில் நிற்கின்றன. பின்னலாடை, கைத்தறி, விசைத்தறி முதல் பட்டாசு, தீப்பெட்டி தொழில் வரை மத்திய அரசின் கொள்கைகளால், பாராமுகத்தால் நலிந்து கொண்டிருக்கின்றன. தொழிலாளர்களும், சிறு தொழில் முனைவோரும் கடும் பாதிப்புக்குள்ளாகி தத்தளிக்கின்றனர். நடுத்தர மக்களும் கூட சங்கடங்களை சந்திக்க வேண்டியுள்ளது. காவிரி பாசனப் பகுதியை பாலைவனமாக்க திட்டமிட்ட சதி வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.2004ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில், இடதுசாரி கட்சிகளின் சார்பில் 61 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். குறைந்தபட்ச பொது திட்டத்தின் அடிப்படையில் வெளியிலிருந்து இடதுசாரிகள் அளித்த ஆதரவுடன்தான் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது, இந்த வாய்ப்பை மக்களுக்கு சாதகமான சட்டங்களை இயற்ற பயன்படுத்தினர் இடதுசாரிகள் என்பது நேற்றைய நிஜமாகும். கிராமப்புற வேலை உறுதிச்சட்டம், வனஉரிமைச்சட்டம் 2006, தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க தனது பலத்தைக் கம்யூனிஸ்டுகள் பயன்படுத்தியது நினைவு கூரத்தக்கது.



;