election-2019

கரூர் காங்கிரஸ் வேட்பாளருக்கு திண்டுக்கல்லில் வாக்கு கேட்ட பிரேமலதா

திண்டுக்கல், ஏப்.6-

கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு திண்டுக்கல் தொகுதியில் பிரேமலதா வாக்கு சேகரித்தார். இதனால் பாமகவினர் தலையை பிய்த்துக் கொண்டனர்.திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியின் சார்பாக பாமக வேட்பாளர் ஜோதிமுத்து போட்டியிடுகிறார். ஆனால் துவக்கம் முதலே இவருக்கு வாக்கு சேகரிப்பவர்கள் நிதானமில்லாமல் குழப்பத்திலேயே வாக்கு சேகரித்து வரு கிறார்கள். முதல் நாளில் பாஜக தலைவர் போஸ் எடுத்த எடுப்பிலேயே தாமரைக்கு வாக்கு சேகரித்தார். கன்னிவாடியில் வாக்கு சேகரித்த அமைச்சர் சீனிவாசன் மாம் பழத்திற்கு பதிலாக ஆப்பிளுக்கு வாக்குச் சேகரித்தார். அதிமுக அணியினரின் வாக்குச் சேகரிப்பு நிகழச்சிகள் நகைச்சுவையாக சென்றுகொண்டிருக்கிறது.இந்நிலையில் வெள்ளியன்று திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்கு சேகரித்த தேமுதிக நிர்வாகி பிரேம லதா வேட்பாளர் ஜோதிமுத்து என்பதற்கு பதிலாக கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணிக்கு வாக்களியுங்கள் என்று 4 முறை கூறினார். இதனால் பாமகவினர் தலையெழுத்துடா என்று தலையில் அடித்துக்கொண்டனர். நத்தத்தில் வாக்கு சேகரிக்கும் போது தேமுதிகவின் சின்னமான முரசு சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றும் பிரேமலதா உளறிக்கொட்டினார். 

சீனிவாசனை கலாய்த்த பிரேமலதா

அண்ணன் சீனிவாசன் கேப்டன் மாதிரி மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார். அவரிடம் அரை மணி நேரம் பேசினால் மனக்கவலை எல்லாம் ஓடிவிடும் என்று கலாய்த்தார். பின்னர் ஜெயலலிதா பாணியில் வெற்றி தருவீர்களா? வெற்றி பெற வைப்பீர்களா? என்று கேட்டார். 

பொங்கலுக்கு போனஸ் ரூ.1500 

பொங்கல் பண்டிகை போனசாக அதிமுக அரசு ரூ.1000 தான் கொடுத்தது. ஆனால் ரேசன் கடைகளில் என்ன நடக்கிறது, நாட்டு நடப்பு என்ன என்பது கூட தெரியாதவராக ரூ.1500 கொடுத்ததாக மக்கள் மத்தியில் பிரேமலதா அளந்து விட்டார். அருகிலிருந்த அதிமுக மகளிரணியைச் சேர்ந்த பெண்மணிகள் ஏங்க்கா நமக்கெல்லாம் ரூ.1000 தான கொடுத்தாங்க. இந்த ரேசன் கடைக்காரன பாரேன் ரூ.500-ஐ அமுக்கிட்டான் என்று பேசிக் கொண்டார்கள்.(ந.நி)




;