சிஐடியு கோவை மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்திய மோடி அரசின் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து திட்டங்களும் கார்ப்பரேட் நலனுக்கானவையாகவே இருந்துள்ளது. இதில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் கோவை மட்டுமல்லநாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த சிறுகுறு தொழில்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் மோடியின் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் சிறுகுறு தொழில்கள் நிலைகுலைந்து போயுள்ளது. இந்நிலையில் சட்டவிரோதமாக தொழில்செய்கிறவர்கள்தான் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் என்று பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் சொல்லியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல். மேலும், கோவையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் இவருக்கு கோவையில் இன்றுள்ளதொழில்கள் குறித்தும் தெரியவில்லை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழில்கள் குறித்தும் தெரியவில்லை என்றே நாம் கருதவேண்டியிருக்கிறது. மேலும், தங்களது இயலாமையை மறைக்க திசைதிருப்பும் நடவடிக்கையாகவே இதுபோன்ற வார்த்தைகளை சி.பி.ராதாகிருஷ்ணன் வெளிப்படுத்துகிறார். ஏனெனில், மோடி அரசின் ஐந்தாண்டு கால ஆட்சியின்சாதனை என்று ஏதும் சொல்ல முடியாத நிலையில், நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களில் உள்ள கோளாறை சரிசெய்வதற்கு மாறாக சட்டவிரோதமாக தொழில் செய்தவர்கள் என்று ஒட்டு மொத்த தொழில்துறையினரை கொச்சைப்படுத்தும் சி.பி.ராதாகிருஷ்ணனின் செயல் கண்டிக்கத்தக்கது. ஆகவே, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சிஐடியு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.