election-2019

img

மோடி ஆட்சியில் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட சிறு தொழில்துறை

#மீண்டும்_ஏன்__கூடாது_பாஜக_அரசு? (8)


ஒழுங்கமைக்கப்பட்ட வரி வலைக்குள் வராத தொழில்களைத்தான் நாம் ‘இன்ஃபார்மல் துறைகள்’ (informal sector) என்கிறோம். சிறிய தொழில்கள், தெரு வணிகர்கள் முதலானோரைத்தான் இப்படிக் குறிக்கிறோம்.

இவர்களில் பலருக்கு வங்கிக் கணக்கு கூட இருக்காது. மோடிக்கு மிகவும் பிடித்த இந்தப் “பணமில்லாப் பரிவர்த்தனை” என்பதெல்லாம் இவர்கள் மத்தியில் சாத்தியமே இல்லை. இந்த மாதிரி வங்கிக் கணக்குகள், கிரெடிட் கார்டுகள், பணமில்லாப் பரிவர்த்தன ஆகியவற்றின் பயன்பாடுகள் பெரிய அளவில் வளர்ந்துள்ள மேலை நாடுகளில் கூட இன்று வரை இப்படி வரிவலைக்குள் வராத துறைகளை முற்றாக ஒழித்துவிட இயலவில்லை.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் மொத்த உள்ளக உற்பத்தியில் (GDP) 23 சதம் வரை இந்தத் துறைகள்தான் பங்கு வகிக்கின்றன. இந்தியாவைப் பொருத்தமட்டில் சுமார் 40 சதம் முதல் 50 சதம் வரை உள்நாட்டு உற்பத்தியில், அதாவது GDP யில் இந்தத் துறைகள் பங்களிக்கின்றன.

நரேந்திரமோடி அரசின் இரண்டு நடவடிக்கைகள் இப்போது இந்த வரிவலைக்குள் வராத, பணமில்லாப் பரிவர்த்தனைக்குப் பழக்கப்படாத துறைகளைக் கற்பனை செய்து பார்க்க இயலாத அளவிற்கு பாதித்துள்ளன. அவை: 1. 500 மற்றும் 1000 ரூ நோட்டுக்களைச் செல்லாமலாக்கிய இரக்கமற்ற செயல் 2. பொருள் மற்றும் சேவை வரியை (GST) அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாக்கியது.

இவை மிகப் பெரிய அளவில் இந்தத்துறையையும் ஒரு குறிப்பிட்ட அளவு வரிவலைக்குள் வந்துள்ள ஃபார்மல் செக்டாரையும் பாதித்துள்ளது. ஆம். ஏதோ ஒரு வகையில் இந்தியா போன்ற நாடுகளில் ஃபார்மல் செக்டாரும் இந்த இன்ஃபார்மல் செக்டாருடன் தொடர்புடையதாகவும் உள்ளது. அந்த வகையில் ஃபார்மல் செக்டாரிலும் பாதிப்பு ஏற்படுள்ளது.

பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட போதே மன்மோகன் சிங், இது இந்த ஆண்டே GDP யில் இரண்டு சத வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றார். அடுத்த சில மாதங்களில் அது நம் கண்முன் நடந்தது. பெரிய அளவில் வேலை இழப்புகள் இன்று நாடெங்கிலும் ஏற்பட்டு்ளளன. கும்பகோணம், சூரத், திருப்பூர் முதலான தறி நெசவு செய்யும் இடங்களில் இன்று பாதிக்கும் மேற்பட்ட தறிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. ஒன்றைக் குறிப்பிட மறந்து போனேன். இந்தியாவில் 80 சதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் இந்தத் துறைகளில்தான் உள்ளனர் !

சல்மான் அனீஸ் சோஸ் இன்னொரு அம்சத்தின் மீது நம் கவனத்தை ஈர்க்கிறார். மோடி, ஜேட்லி, அமித் ஷா ஆகியோர் எத்தனை கல்நெஞ்ச்த்துடன், சற்றும் இரக்கமின்றி இந்த இன்ஃபார்மல் செக்டாரையும் அதில் செயல்படும் எளிய மக்களையும் தூற்றிப் பேசினர். இந்தியப் பொருளாதார வளர்ச்சியை உறிஞ்சிக் குடிக்கும் அட்டைகள் போல் எத்தனை வெறுப்புடன் அவர்களை நோக்கி முகம் சுளித்தனர். இந்தத் தொழில்களைத் தீண்டத் தகாதவையாய், களை எடுக்கப்பட வேண்டிய தொற்று நோய்களாய் அல்லவா சித்திரித்தனர், நாம் X “அவர்கள்” என ஒரு இருமையைக் கட்டமைத்து இந்தியப் பொருளாதாரத்தின் ஒரு “மற்றமை”யாக (other) அல்லவா அவர்களை அருவருப்புடன் சுட்டிக் காட்டினர். அவர்களை ஒழுங்குக்குள், வரிவலைக்குள் கொண்டு வரவேண்டும் என்றெல்லாம் எத்தனை எகத்தாளமாகப் பேசினர்.

இப்போதெல்லாம் சிறு நகரங்களில் வங்கிகளுக்குள் நாம் போகும்போது பணம் எடுக்கும் சீட்டுக்களை (withdrawal slips) வைத்துகொண்டு அவற்றை நிரப்பத் தெரியாமல் நிற்கும் நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளிகள் எத்தனை பேர்களை நாம் பார்க்கிறோம்.

எல்லாவற்றிற்கும் ஆட்சியாளர்கள் அன்று திமிருடன் சொன்ன காரணங்களும் இன்று அசடு வழியச் சொல்லிக் கொண்டிருக்கும் சமாதானங்களும் இரண்டுதான். 1. கருப்புப் பணத்தை வெளிக் கொணர்கிறோம் 2. பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம். இரண்டும் ஒரு மயிரளவு கூடக் குறையவில்லை

Marx Anthonisamy


;