திங்கள், மார்ச் 1, 2021

economics

img

பிப்ரவரி 1 முதல் செஸ் உள்ளிட்ட புதிய வரிகள் விதிப்பு..? நிதி நெருக்கடியிலிருந்து தப்பிக்க மக்கள் மீது மேலும் மேலும் சுமையை ஏற்றுகிறது மோடி அரசு

புதுதில்லி:
2014 முதல் கடந்த 6 ஆண்டுகளில், மோடி அரசு தனது தவறான பொருளாதாரக் கொள்கைகளால் இந்தியப் பொருளாதாரத்தை மிகமோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

2016-இல் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கம், 2017-இல் அமல் படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவை இந்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துவங்கி அனைத்து தொழில்களிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதால், நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் பெரும் அடி வாங்கியது. ஜிஎஸ்டி 4.5 சதவிகிதம் என்ற அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்தது. கொரோனா பொதுமுடக்கம் இதனை மேலும் சிக்கலாக்கியதால், தற்போது இந்தியப் பொருளாதாரமானது மைனஸ் 7.5 சதவிகிதம் என்று அதலபாதாளத்தில் சரிந்துள்ளது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக ஜிஎஸ்டி மைனஸில் செல்வதன் காரணமாக, வரலாற்றிலேயே முதன் முறையாக இந்தியப் பொருளாதாரம் மந்தநிலைக்குள் நுழைந்துள்ளது.

நிதிப் பற்றாக்குறை ஏற்கெனவே 10 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது. நிதி உட்செலுத்தலில் முக்கியப் பங்கு வகிக்கும் வங்கிகளும் மோசமான நிதிநிலையில் உள்ளது. இந்த சூழலில் கொரோனா தடுப்பூசி தவிர்க்க முடியாத செலவினமாக முன்னுக்கு வந்துள்ளது. 130 கோடி மக்களுக்குச் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு (covishield) கொரோனா தடுப்பு மருத்தை வழங்க 57 ஆயிரத்து 200 கோடி ரூபாய் தேவை என்று மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. அதாவது, 3 டாலர் செலவில் ஒருவருக்கு தலா 2 முறை கொரோனா தடுப்பு மருந்துக்கு செலவிட நிதி தேவைப்படுகிறது. இது மருந்துக்கான செலவு மட்டுமே. உள்கட்டமைப்பு, போக்குவரத்து, ஊழியர்கள் சம்பளம், ஊழியர்களின் பாதுகாப்புத் தேவைகள் இதில் அடங்காது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவர, ஏற்கெனவே சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான ஊக்கத் திட்டங்களை மத்திய அரசுஅறிவித்த நிலையில், கணிப்புகளுக்கு ஏற்ற வளர்ச்சியை அடையவில்லை. டிசம்பர் மாதம் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையும் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் 8.84 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.இந்தச் சூழ்நிலையில்தான் மத்திய அரசு 2020-ஆம் ஆண்டில் சந்தித்த வரி வருவாய் பற்றாக்குறையைச் சரிக்கட்டவும், கொரோனா தடுப்பு மருந்துக்கான நிதியைத் திரட்டவும் புதிய திட்டத்தை வகுத்துள்ளதாகவும், அதற்கான ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனேகமாக பிப்ரவரி 1-இல் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் அறிக்கையிலோ, அதற்கு முன்னதாகவோ கூட இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட கூடுதல் செலவுகள், வரி வருமான இழப்பு மற்றும் தடுப்பு மருந்துக்கான நிதித் தேவையைச் சமாளிக்கத் தேவையான அளவிற்கு இந்த வரி விதிப்பு ‘கொரோனா வைரஸ்செஸ்’ அல்லது ‘கூடுதல் வரிகள்’ இருக்கும் என்று ‘எக்னாமிக் டைம்ஸ்’ உள்ளிட்ட ஆங்கில ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.வேலையின்மை, ஊதியக் குறைப்பு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால்ஏற்கெனவே மக்கள் கஷ்டத்தில் இருந்துவரும் நிலையில், மோடி அரசின் புதிய வரி விதிப்பு யோசனையானது, அவர்களை மேலும் துயரத்தில் தள்ளும் என்று சமூகப் பொருளாதார ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

;