districts

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

பெரம்பலூர், பிப்.26 - பெரம்பலூர் மாவட்டத்தில் 27.2.2022 (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளுக்காக அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் ஆகிய இடங்களில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அருகாமையிலுள்ள மாவட்டங்களின் குடிசை பகுதிகள், நரிக்குறவர்கள் பகுதிகள், பணி நிமித்தமாக இடம்பெயர் மக்கள் வாழும் பகுதிகள் என மாவட்டம் முழுவதும் 387 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. முகாம் ஒன்றுக்கு 4 நபர்கள் வீதம் பல்வேறு துறைகளை சார்ந்த 1548 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்த விதமான பின்விளைவுகளும் ஏற்படாது. எனவே, பெற்றோர்கள் தங்களின் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், போலியோ சொட்டு மருந்து முகாம் நாளான ஞாயிறன்று காலை 7 முதல் மாலை 5 மணி வரை முகாம்களுக்கு குழந்தைகளை அழைத்து சென்று போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

;