districts

சென்னை துறைமுகத்தில் தொழிற்சங்க தலைவர்கள் மீது தாக்குதல்: சிஐடியு கண்டனம்

சென்னை, ஏப். 30- சென்னை துறைமுகத்தில் சிஐடியு தொழிற்சங்க தலைவர்கள், இந்திய துறைமுகங்களின் அகில இந்திய வாட்டர் டிரான்ஸ் போர்ட் பொதுச்செயலாளர் தோழர் டி.நரேந்திரராவ் மற்றும் சென்னை துறைமுக சிஐடியு பொதுச்செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை தாக்கியதோடு துறைமுகத்திற்குள் சாதிய துவேசத்தை தூண்டிவிடும் வகையில் வலைதளத்தில் போஸ்டர் போட்டுள்ள ஆர்.பாஸ்கரின் செயலுக்கு மத்திய சென்னை சிஐடியு மாவட்டத் தலைவர் சந்திரன், செயலாளர் சி.திருவேட்டை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர் ஒற்றுமையை காத்திட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கின்ற அமைப்பு, சாதி, மதம், மொழி கடந்து தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதில் முதன்மையாய் விளங்கும் அமைப்பு, தன்னலம் பாராமல் அர்பணிப்பு உணர்வோடு, சுய ஒழுக்கம், நேர்மை, தியாகம் என நற்பண்புகளை கொண்டவர்களே இதன் தலைவர்கள். சிஐடியு, தொழிலாளர்களின் உரிமைக்காக பாடுபடுவதோடு, சமூக தீங்கான தீண்டாமையை ஒழித்திட தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒரு அங்கமாக செயல்படும் அமைப்பு, மத வெறி, சாதிவெறி, இனவெறி, போன்ற தொழிலாளர்களை பிளவுபடுத்தும் சக்திகளுக்கெதிராக தொழிலாளர்களை ஒன்றுபடுத்தும் இயக்கங்களை நடத்துகின்ற அமைப்பு. சமூக மாற்றத்திற்கு தனிநபர் சாகச நடவடிக்கைகள் பயன்தராது என நம்புகிற உயிரோட்டமான சனநாயக நடைமுறையை அடிப்படையாக கொண்ட அமைப்பு. சென்னைத் துறைமுகத்தில் மேற்சொன்ன தொழிலாளர் நலன் மற்றும் சமூக நல இயக்கங்களை நடத்தி தொழிலாளர்களின் நன்மதிப்பைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது பெரிய சங்கமாக சிஐடியு உள்ளது. எங்கள் அமைப்பின் தமிழ்நாடு மாநில குழு உறுப்பினர்களாக ஏ.கிருஷ்ணமூர்த்தி, டி.நரேந்திரராவ் உள்ளனர். இந்திய துறைமுகங்களில் உள்ள சிஐடியு அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளராக டி.நரேந்திரராவ் உள்ளார்.

சென்னை துறைமுகத்தின் சிஐடியு பொதுச்செயலாளராகவும், மத்திய சென்னை மாவட்டத் தலைவர்களில் ஓருவராகவும் ஏ.கிருஷ்ணமூர்தி உள்ளார். கடந்த 21ஆம் தேதி பிஎம்எஸ் சங்கத்தைச் சேர்ந்த ஆர்.பாஸ்கர் முன்விரோதம் மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் அமைப்பின் தலைவர்கள் ஏ.கிருஷ்ணமூர்த்தி, டி.நரேந்திரராவ் ஆகியோரை தாக்கியதோடு அவர்கள் தாக்கியதாக பொய்யான புகாரும் கொடுத்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் விசாரனை நடை பெற்றுக் கொண்டிருக்கையில் சாதி வன்மத்தை தூண்டும் வகையில் பொய்யாக இட்டுக்கட்டி வலைதளத்தில் (வாட்ஸ்-அப்) விடுதலை சிறுத்தைகள் என்ற பெயரிலும், பிஎம்எஸ் என்ற பெயரிலும் பேனர் வெளியிட்டு உள்ளார்.

இது தொழிலாளர்கள் ஒற்றுமையை சீர்குலைக்கவும், தொழில் அமைதியை கெடுக்கவும், சிஐடியு சங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் திட்டமிட்டு நடத்தப்படும் சதி வேலையாகும். மேற்கண்ட ஆர்.பாஸ்கர் தனது டிப்பார்ட்மென்டில் தன் சக பெண் ஊழியரை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் சிஐடியு அதில் தலையீடு செய்தது. ஆர்.டி.ஐ. என்பதை பயன்படுத்தி அதிகாரிகளை மிரட்டி பணியவைப்பதும், அதன் மூலம் வருமானம் பார்ப்பதும் தான் இவர் வேலை. தனக்கு பிரதமர் அலுவலகம், சனாதிபதி மாளிகை, தலைமை கண்கானிப்பு அதிகாரி, கப்பல்துறை செயலாளர் அலுவலகம் என தனக்கு செல்வாக்கு உள்ளது என சொல்லி தனது சட்ட விரோதமான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்பவர். இவர் குறித்து பல புகார்கள் இவர் வசிக்கின்ற பகுதியிலும், சென்னை துறைமுகத்திலும் உள்ளது. இவரை சிஐடியுவுக்கெதிரான கருவியாக பயன்படுத்த பிஜேபி கட்சியின் பரதீய மஸ்தூர் சங்கம் முயலுவதாக தெரிகிறது. ஒற்றுமையை சீர்குலைக்கும் இத்தகைய நபர் மீது காவல் துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழிலாளர்கள் இதுபோன்ற நபர்களை அடையாளம் கண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;