districts

மீஞ்சூர் சாலையில் புதிதாக 2 சுங்க சாவடிகள்

சென்னை,ஜன.31- நிர்வாக பராமரிப்பு வசதிக்காக வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 2 சுங்க சாவடிகளை அமைக்க நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை 60 கி.மீ. தூரத்துக்கு வெளி வட்டச் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை வண்டலூரில் இருந்து நெமிலிச்சேரி வழியாக திருவொற்றியூர், பொன்னேரி, பஞ்செட்டி சாலை, மீஞ்சூர் ஆகியவற்றுடன் இணைக்கிறது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான வெளிவட்ட சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் முதல் மாநில நெடுஞ்சாலை இதுவாகும். வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 2 சுங்கச் சாவடிகளை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வரதராஜபுரம், கொளப்பஞ்சேரி, பழவேடு, சின்ன முல்லைவாயல் ஆகிய 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இதில் சுங்க சாவடி அமைகிறது. இப்பகுதிகளில் வசிப்பவர்களின் வணிகம் அல்லாத வாகனங்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.