districts

img

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

கோவை, ஜன.28- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 2021-2022ஆம் ஆண்டிற்கான பட்டம் மற்றும் இளமறிவியல் பாடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்தாண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதனிடையே 2021-2022 கல்வியாண்டிற்கான தரவரிசைப் பட்டியல்  இணையதளத்தில் வெளியிடப்பட்டது. செயல் துணை வேந்தர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பல்கலைக்கழக அதிகாரிகள் இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டனர்.

இப்பட்டியலில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி பூர்வஸ்ரீ 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். 199 மதிப்பெண்களுடன் நாமக்கல் மாவட்ட மாணவி புஷ்கலா இரண்டாமிடமும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் சஜின் 3வது இடத்தையும் பிடித்தனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாணவி செல்வி பவித்ரா 193.33 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் திண்டுக்கல் மாணவி அனுஜா முதலிடமும், புதுக்கோட்டை மாணவர் ஜெரால்ட் எடிசன் இரண்டாமிடமும், நாமக்கல் மாணவர் ராம்பிரசாத் மூன்றாமிடமும் பிடித்தனர்.

இதே போல் பொறியியல் பட்டயப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கன்னியாகுமரி மாணவி அனுபா முதலிடமும், திண்டுக்கல் மாணவி அனுஜா இரண்டாமிடமும், புதுக்கோட்டை மாணவர் கைலாஷ் மூன்றாமிடமும் பிடித்துள்ளனர். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நேரடியாகவும், பொதுக்கலந்தாய்வு 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 3 நாட்கள் இணையவழியிலும் நடைபெறும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வருகிற மார்ச் மாதம் 24ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.