districts

img

ஈஷா யோகா மையமா! மர்ம தேசமா? மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

ஈஷா யோகா மையம் சம்பந்தமாக அடுத்தடுத்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவருகிறது. ஆனால், பாஜகவின் தேசிய தலைவர் நட்டா வருகிறார். ஒன்றிய அமைச்சர்கள், தலைவர்கள் வந்து செல்கின்றனர் என்பதால் தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது  என்பதை போல ஈஷா மையம் செயல்படுகிறது. சுபஸ்ரீ மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், மாநில அரசு விசாரணைக்குழு அமைத்து இச்சம்பவம் குறித்து வெளிக்கொண்டு வரவேண்டும் என மார்க்சிஸ்ட்கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தினார்.

கோவை ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சிக்காக வந்த பெண் சுபஸ்ரீ, ஈஷாவில் இருந்து வெளியேறி தலைதெறிக்க சாலையில் ஓடி சந்தேகத்திற்கு இடமான வகையில் மீண்டும ஈஷா மையம் உள்ள பகுதியில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி கோவையில் மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்பினர்  சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் ரவிக்குமார், தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் ஆறுச்சாமி, . திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் சுதா உள்ளிட்டோர் உரையாற்றினர் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், ஏராளமானோர் பங்கேற்று ஈஷா மையத்தில் நடைபெரும் மர்மங்களை வெளிக்கொணர வேண்டும். சுபஸ்ரீ மரணத்தில் நீதி வேண்டும். போலிச்சாமியர் ஜக்கி வாசுதேவை கைது செய்ய வேண்டும் என ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக, பி.ஆர்.நடராஜன் எம்பி இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்ற  சுபஸ்ரீ  டிசம்பர் 18 ம் தேதியில் இருந்து காணவில்லை. சிசிடிவி காட்சிகளில்  யோகா உடையோடு இருட்டுபள்ளம் பகுதியில் ஓடுவது பதிவாகி உள்ளது. அந்த பெண் யாருக்கு பயந்து ஒடினார். இந்த ஒரு வார காலத்தில் அந்த மையத்தில் நடந்தது என்ன? 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், ஞாயிற்றுக் கிழமை சடலமாக  மீட்கப்பட்டுள்ளார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில், அவரது உடல் உடனடியாக உடற்கூறு ஆய்வு செய்து, அவர்களின் குடும்ப வழக்கத்திற்கு மாறாக எரியுட்டப்பட்டு இருக்கின்றது. இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணை துரத்தியது யார்?  அவர்  ஓட வேண்டும் அவசியம் என்ன? தமிழக காவல் துறை இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இதறகு தனியாக விசாரணை நடத்த விசாரணைக்குழுவை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். ஈஷா மையத்தில் இது போன்ற நிகழ்வுகள் தொடர்கின்றதால் அந்த பகுதி மக்களிடம் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பாஜக தலைவர் நட்டா அங்கு வந்து தங்கி செல்கின்றார். தொடர்ந்து ஒன்றிய அரசின் அமைச்சர்கள், பாஜகவின் தலைவர்கள் வந்து செல்வதால் தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என ஈஷா மையத்தின் நிர்வாகம் நினைக்கிறது. தமிழ்நாட்டின் காவல் துறையை, இந்திய நாட்டின் சட்டங்களை மதிக்காமல் ஈஷா நிர்வாகம் செயல்படுகின்றது. உண்மை வெளிக்கொணராமல் இருக்க கோவை காவல் துறைக்கு  ஈஷா மையம்  அழுத்தம் கொடுக்கின்றது என குற்றம்சாட்டினார்.