சிதம்பரம், மார்ச் 24- கடலூர் அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். கடலூர் சி.என். பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவர் சிதம்பரம் அருகே உள்ள பண்ணப்பட்டு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் பாபு, அவரது தம்பியின் நிலத்தை பட்டா மாற்றம் செய்வதற்கு விண்ணப்பித்துள்ளார். இதற்கு கிராம நிர்வாக அலுவலர் ரூ. 5 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பட்டா மாற்றம் செய்ய முடியும் எனக்கூறி கடந்த 3 மாதமாக அலைக்கழித்துள்ளார். இது குறித்து சுரேஷ்பாபு, லஞ்ச ஒழிப்பு துறையிடம் தகவல் அளித்தார். அப்போது, அவர்கள் கொடுத்த ரூ. 5 ஆயிரம் ரசாயனம் தடவிய நோட்டை வெள்ளியன்று(மார்ச் 245) விஏஓ புகழேந்தியிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைகூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான 5-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மறைந்திருந்து கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் லஞ்சம் கேட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர்.