தஞ்சாவூர், பிப்.20– ஒன்றிய அரசு, அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாமல், மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை குறைத்தால், நெருக்கடி ஏற்படும் என்ற நிலையை உருவாக்கி வருகிறது என இரா.முத்தரசன் தெரிவித்தார். தஞ்சாவூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க 27 ஆவது மாநில மாநாட்டில், கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் விவசாயிகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்போது, வேளாண் விளை பொருட்களுக்கு விலை நிர்ணய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று கொடுத்த வாக்குறுதியை, ஒன்றிய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. சர்வாதிகாரச் செயல் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 1,555 கோடி ரூபாய் பேரிடர் நிதியில் இருந்து ஓதுக்கீடு செய்யப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பெஞ்சல் புயல், கேரள வயநாடு நிலச்சரிவுகளில் பாதிக்கப்பட்டு நிதியை கேட்ட போதும், ஒரு பைசா கூட தமிழகத்திற்கும், கேளராவிற்கும் ஒன்றிய அரசு நிதியை ஓதுக்கீடு செய்யவில்லை. தங்களை அரசியல் ரீதியாக எதிர்க்கும் கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு நிதி கொடுக்க மாட்டோம் என ஒன்றிய அரசு கூறுவது சர்வாதிகார செயலாகும். 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி மற்றும் பயனாளிகள் எண்ணிக்கையை ஒன்றிய அரசு குறைத்து விட்டது. நூறு நாள் வேலை திட்டத்திற்காக, தமிழகத்திற்கு 2,208.74 கோடி ரூபாய் நிதியை மூன்று மாதமாக வழங்காமல் உள்ளது. இப்படியாக கல்வி நிதி, பேரிடர் நிதி என எதையும் வழங்காமல் புறக்கணிப்பது நாட்டில் கலகத்தை தூண்டுவதாகும். ஒன்றிய அரசை தமிழக முதல்வர் அரசியல் ரீதியாக எதிர்த்து போராடி வருகிறார். ஆனால், ஒன்றிய அரசு அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாமல், மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை குறைத்தால்,மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்ற நிலையை உருவாக்கி வருகிறது. இதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். நவோதயா பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லை தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தினால், 75 சதவீத மாணவர்கள் கல்வியை விட்டு சென்று விடுவார்கள். ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்திற்கான 2,152 கோடி ரூபாய் நிதியை தர மாட்டோம் என ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் கூறி இருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம். இதை எதிர்த்து தான் போராடுகிறோம். தமிழகத்தில், ஒன்றிய அரசு நடத்தும் 49 நவோதயா பள்ளியில் ஒன்றில் கூட தமிழ் ஆசிரியர்கள் இல்லை. மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம் என பா.ஜ.க கூறும் நிலையில், மாணவர்கள் கேட்கும் மொழிக்கு எல்லாம் ஆசிரியர் நியமித்து சொல்லிக் கொடுப்பது சாத்தியம் இல்லை. இது இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் செய்கிற போக்கு” இவ்வாறு அவர் கூறினார்.