மயிலாடுதுறை, பிப்.20- வயதிலேயே அடக்குமுறைக்கு ஆளாகி சிறைக்கு சென்றவரான தியாகி வள்ளியம்மையின் நினைவாக தில்லையாடி கிராமத்திலுள்ள அவரது நினைவு மண்டபம் பழுதடைந்து எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது. மண்டபத்தை இடித்துவிட்டு புதிய மணிமண்டபத்தை கட்டித்தர வேண்டுமென பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கைகளை முன் வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையுமின்றி கேட்பாரற்று கிடக்கிறது. வருகிற பிப்ரவரி-22 அன்று தியாகி.வள்ளியம்மையின் நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளநிலையில் பாழடைந்து காணப்படும் அவரது நினைவு மண்டபத்தை விரைவில் சீரமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் தரங்கம்பாடி ஒன்றியக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. தில்லையாடியில், வள்ளியம்மையின் நினைவைப் போற்றும் வகையில், 1969 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர், நினைவு மண்டபத்தை அமைத்தார். தியாகி வள்ளியம்மையின் பெருமையை அனைவரும் அறிந்துக்கொள்ளும் விதமாக அந்த மண்டபத்தில் வள்ளியம்மை குறித்த அரிய தகவல்கள், காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞர் நணி செய்தது, இந்தியர்களின் போராட்டத்தில் எவ்வாறு பங்கெடுத்தார், காந்தி தமிழில் எழுதிய கடிதங்கள், நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் என பல்வேறு வரலாற்று சுவடுகளை காட்சிப்படுத்தியும், பிரமாண்டமான ஓவியங்களும் மண்டபம் முழுக்க நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில், தற்போது மணிமண்டபம் மிக மோசமான நிலையில் பழுதடைந்து மேற்கூரை பெயர்ந்து விழுகிறது. கதவுகள், ஜன்னல்கள் கரையான் அரித்தும், சுவர்களில் மரங்கள் முளைத்தும் காணப்படுகிறது. பழமையான காந்தியடிகளின் ஓவியங்கள் சிதிலமடைந்து உடைந்து ஓரமாக கிடக்கிறது. மண்டபத்தின் பின்புறம உள்ள சுற்றுச்சுவர் முற்றிலும் உடைந்து மணி மண்டபம் முற்றிலும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. சுற்றிலும் காடுகளாகவும், புதர் மண்டியும் காணப்படுகிறது. கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு மணி மண்டபத்தை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து விரைவில் புனரமைக்கப்பேவதாக கூறப்பட்ட நிலையில், அது குறித்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் தில்லையாடி எம்.கணேசன் குற்றஞ்சாட்டுகிறார். 85 லட்சத்தில் மண்டபத்தை புனரமைக்க திட்டவரைவை தயார் செய்து நிதிக்குழு அனுமதிக்கு அனுப்பி பல ஆண்டுகளாகிறது. என கூறப்படுகிறது. ஆனால் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் இல்லை. பிப்ரவரி -22 ல் தியாகி வள்ளியம்மையின் 111 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில் கேட்பாரற்று கிடக்கும் நினைவு மண்டபத்தை சுத்தம் செய்து வர்ணங்களையாவது அடிக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் தரங்கம்பாடி ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.