வடமாநில தொழிலாளர்களுக்கு வழிகாட்டும் அமைப்பு உருவாக்குக: ஜவாஹிருல்லா
பாபநாசம் பிப் 21 மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூரில், சொந்த ஊருக்குத் திரும்புவதற்காகக் காத்திருந்த ஒடிசாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் குழந்தை கண் எதிரில், 3 பேர் கொண்ட கும்பலால் கத்தி முனையில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. குற்றச்செயலில் ஈடுபட்ட மூன்று பேரும், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த வன்செயலில் ஈடுபட்டவர்கள், சட்ட ரீதியாக கடும் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை, உறுதிசெய்ய வேண்டியது அவசியம். திருப்பூரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வேலை தேடி வரும் தொழிலாளர்களுக்குத் தமிழ்நாடு அரசே வழிகாட்டும் நிலையங்களை உருவாக்கித் தந்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தென்னை சாகுபடி சாகுபடிக்கு பிந்தைய தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம்
திருச்சிராப்பள்ளி, பிப்.20- திருச்சிராப்பள்ளி கலையரங்கில் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறையின் சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி மற்றும் சாகுபடிக்குப் பிந்தைய தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் வியாழனன்று நடைபெற்றது. கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர், தோட்டக் கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டு, தென்னை சாகுபடி மற்றும் சாகுபடிக்குப் பிந்தைய தொழில்நுட்பம் குறித்த கையேட்டினை வெளியிட்டார். இந்நிகழ்வில் வேளாண்மை துறை இணை இயக்குநர் வசந்தா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சரண்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயராணி. வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கந்தசாமி, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள். விவசாய பெருங்குடி மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் மீதேவழக்கு குன்னம் காவல் நிலையத்துக்கு சிபிஎம் கண்டனம்
பெரம்பலூர், பிப்.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டக் குழுக் கூட்டம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசி தலைமையில் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ரமேஷ் அறிக்கை சமர்ப்பித்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சாமி. நடராஜன் கலந்து கொண்டு, மாநில குழு முடிவுகள் குறித்து உரையாற்றினார். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அல்லிநகரம் அருகில் குன்னம் வட்டம் காடுர் கிராமம் பட்டியல் வகுப்பை சார்ந்த பி.எஸ்.பி பொறுப்பாளர் கண்ணதாசனை வழி மறித்து, சாதி பெயரை இழிவாகச் சொல்லி திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சாதி வெறியர்களை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. குன்னம் காவல்துறை, சாதி வெறியர்கள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவின் கீழ், வழக்குப் பதிவு செய்யாமல் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கண்ணதாசன் மீதே, பொய் வழக்கு போட்ட குன்னம் காவல் நிலையத்தை வன்மையாக கண்டிப்பதுடன், கண்ணதாசன் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறவேண்டும், கண்ணதாசனை தாக்கிய சாதி வெறியர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சையில் இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம்
தஞ்சாவூர், பிப்.20- தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக பிப்.21 காலை 10 மணியளவில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில், தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில், 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுயவிவர அறிக்கை, கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
108 ஆம்புலன்ஸ் வாகனங்களை பராமரிக்க நடவடிக்கை தேவை
அரியலூர், பிப்.20- தமிழகம் முழுவதும் பல்வேறு குறைபாடுகளுன் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை பராமரிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில், குளறுபடிகளுடன் இயங்கி வரும் ஆம்புலன்ஸ் குறித்து புகார் அளிக்கும் தொழிலாளர்களை பயிற்சி அல்லது விசாரணை என்று கூறி திருச்சிக்கு அழைத்துச் சென்று மிரட்டும் அரியலூர் மாவட்ட திட்ட மேலாளர், மாவட்ட வாகன பராமரிப்பு மேலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை, மூடி மறைப்பதற்காக, தொழிலாளர்கள் உரிய நேரத்தில் வேலைக்கு வரவில்லை என்று பொய் கரணம் காட்டி அவர்களது ஊதியத்தை பிடித்தம் செய்து வரும், இ.எம்.ஆர்.ஐ. ஜிஎச்எஸ் நிர்வாகத்தை கண்டிப்பது என்பன என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, போராட்டங்கள் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டுக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெள்ளிவேல் தலைமை வகித்தார். அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் தங்க.சண்முகசுந்தரம், திருவள்ளுவர் ஞானமன்ற நிறுவனர் இராவணன் மற்றும் சங்க மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில், மாவட்டத் தலைவராக செந்தில்குமார், துணைத் தலைவர்களாக கொளஞ்சியப்பன், கலியசாமி, செயலாளராக வெங்கடேசன, துணைச் செயலாளர்களாக வீரமணிகண்டன், இளையப்பெருமாள், பொருளாளராக எழிலரசி உள்ளிட்டோர் தேர்தெடுக்கப்பட்டனர்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக இ நாம் ஏலம்
பாபநாசம், பிப்.20- பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி மற்றும் வேளாண் அலுவலர்கள் முன்னிலையில் மறைமுக இ நாம் ஏலம் நடந்தது. கருப்பு கவுணி 15 மெட்ரிக் டன்னின் மதிப்பு ரூ.8,50,000 ஆகும். கருப்பு கவுணி நெல் அதிகப் பட்சமாக கிலோ ஒன்றிற்கு ரூ.57க்கும், குறைந்த பட்சம் கிலோ ஒன்றிற்கு ரூ.50 க்கும், சராசரி ரூ.55 க்கும் விற்பனையானது. மைசூர் மல்லி (240 கிலோ) மதிப்பு ரூ.7200. கிலோ ஒன்றிற்கு அதிக பட்சம் ரூ.30 க்கும் விற்பனையானது. மறைமுக ஏலத்தில் 7 விவசாயிகள் மற்றும் 5 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சிவாய் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
மயிலாடுதுறை, பிப்.20- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம், காஞ்சிவாய் கிராமத்தில் தமிழக முதல்வர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக ரூ.62 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடத்தை திறந்து வைத்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் கோபிநாத், குத்தாலம் வட்டாட்சியர் சத்யபாமா, குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷோபனா, புவனேஸ்வரி மற்றும் விவசாயிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.