நாகப்பட்டினம், ஜூன் 6 - பெண்களுக்கு எதிரான வன்கொடுமை புகார்களில் அலட்சியம் காட்டும் நாகப்பட்டினம் மகளிர் காவல் நிலையத்தை கண்டித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஜனநாயக மாதர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டினம் கடைசல்காரத் தெருவைச் சேர்ந்தவர் சபிதாபேகம். தனது கணவர் உமர்பாரூக் என்பவர் சமூக வலைதளத்தில் போலி கணக்கு தொடங்கி, மற்றொரு நபர் புகைப்படத்துடன் சபிதா பேகம் புகைப்படத்தை இணைத்து வெளியிட்டது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் உதவியோடு நாகை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு சைபர் கிரைம் குற்றத்தின் கீழ் வருவதால், இவ்வழக்கை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். பாதிக்கப்பட்ட பெண் பலமுறை காவல் நிலையம் சென்று புகார் குறித்து கேட்ட நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2021 ஏப்ரல் 26 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்ட நிலையில், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புகார் அளித்தவரையே மிரட்டியுள்ளனர். இதில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், நாகப்பட்டினம் மகளிர் காவல் நிலையத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை புகார்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் காவல்துறையை கண்டித்தும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் நாகப்பட்டினம் நாகூர் நெடுஞ்சாலையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி மாதர் சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சமாதானம் அடைந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.லதா, மாவட்டத் தலைவர் ஏ.சுபாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.