அறுவடைக்கு தயாராகும் மஞ்சள்
கள்ளக்குறிச்சி,டிச.6- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கலையொட்டி அறுவடை செய்யும் வகையில் ஜூலை மாதம் மஞ்சள் விதைக்கப்படுகிறது. இந்த மஞ்சள் ஜனவரி மாதம் பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அறுவடை செய்யப்படுகிறது. தற்போது பல்வேறு பகுதிகளில் மஞ்சள் கொத்துகள் விளைந்து அனைத்து பகுதிகளிலும் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் உள்ளது.
மோர்தானா அணையில் மீன் குஞ்சுகள்
குடியாத்தம்,டிச.6- வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான குடியாத்தம் மோர்தானா அணையில் மீன்வளத் துறை சார்பில் மீன்கள் விடப்படும் அந்த மீன்களை மீனவர்கள் பிடித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. குடியாத்தம் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் நலன் கருதியும், மீனவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காகவும் அரசு மூலம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு வந்தன. கடந்த 2 ஆண்டுகளாக அதிக மழை பொழிவு காரணமாக சரிவர மீன்பிடிக்க முடியாமல் அரசுக்கே திரும்ப ஒப்படைத்து விட்டனர். இந்நிலையில் மீண்டும் மீன் வளர்ப்பு மையத்தில் வளர்க்கப்பட்ட ரோகு, சாதாகெண்டை விரலிகள் உள்ளிட்ட 7 ஆயிரம் மீன்கள் மோர்தானா அணையில் விடப்பட்டன. இதன் மதிப்பு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாகும்.
ரூ. 2 கோடி நிலம் அபகரிப்பு: புகார்
விழுப்புரம்,டிச.6- விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் வட்டம், அவ்வைநடுக்குப்பத்தை சேர்ந்தவர் இளையமுருகன் (வயது 43). விவசாயியான இவர் தனது குடும்பத்தினருடன் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் வானூர் வட்டம், சேமங்கலம் மதுரா ராமநாதபுரம் கிராமத்தில் எங்களது குடும்பத்துக்கு சொந்தமாக 1 ஏக்கர் 84 சென்ட் நிலம் உள்ளது. இதில் பாகப்பிரிவினை மூலம் எனக்கு கிடைத்த 92 சென்ட் நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் அபகரித்துக்கொண்டு அங்கு தனியார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்காக, விளைநிலங்களுக்கு செல்ல வேண்டிய தண்ணீரை ஆழ்துளை கிணறு அமைத்து உறிஞ்சி வருகிறார். இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அபகரிக்கப்பட்ட அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.2 கோடி இருக்கும். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற ஆட்சியர் மோகன், இதுகுறித்து விசாரிப்பதாக கூறினார்.
கோவில் பூட்டை உடைத்து கொள்ளை
ஆற்காடு, டிச. 6- ஆற்காடு அடுத்த மாங்காடு பகுதியில் நாக நாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவி லுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். வழக்கம் போல் திங்கட்கிழமை இரவு கோயிலை பூட்டிவிட்டு பூசாரி வீட்டிற்கு சென்றார். செவ்வாய்க்கிழமை காலை அந்த வழியாக சென்ற வர்கள் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கிராம நிர்வாக அலு வலருக்கு, ஆற்காடு தாலுகா காவல் நிலை யத்திற்கும் தகவல் அளித்த னர். சம்பவ இடத்திற்கு வந்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின், உண்டியலை உடைத்து அதிலிருந்து பணம் மற்றும் கோவிலில் இருந்த பித்தளை பொருட்களை கொள்ளை அடிக்கப்பட்டி ருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புயல் சின்னம்: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
காரைக்கால், டிச. 6- வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் காரைக்கால் பகுதியை சேர்ந்த 11 கிராமங்களில் உள்ள மீனவர்களுக்கு யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து காரைக்கால் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இந்த பகுதியில் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசை படகுகள் அனைத்தும் துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பைபர் படகுகளை அரசலாற்றங்கரை மற்றும் துறைமுக பகுதியில் நிறுத்தியுள்ளனர். காரைக்காலில் வழக்கத்தை விட செவ்வாயன்று (டிச. 6) கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. எனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
துரைமுருகனின் அண்ணன் மகள் தற்கொலை
வேலூர்,டிச.6- தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவரது மகள் பாரதி (55) இவர் தனது கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருடன் காட்பாடி காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஞாயிறன்று லத்தேரி அருகே பாரதி ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் விசாரணையில் பாரதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.