50 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை: மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்
சென்னை, மே 7- திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேரள மாநிலம் கஞ்சிக்கோட்டில் ஐநாக்சில் இருந்து 50 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை தமிழகத்துக்கு உடனடி யாகத் தவறாமல் அடுத்த ஐந்து நாட்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரிடம் தொலைப்பேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார். திருப்பெரும்புதூர் ஐநாக்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு வழங்கப்படும் மருத்துவ ஆக்சிஜனில் 25 மெட்ரிக் டன்னை தமிழகம் பயன்படுத்தும் வகையில் பிற மாநிலங்களுக்கு வழங்கிடாமல் தவிர்த்திட வேண்டும் என்றும் அப்போது கேட்டுக்கொண்டார்.
காலமானார்
திருவள்ளூர், மே 7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீஞ்சூர் பகுதி மூத்த தோழரும் மீஞ்சூர் டவுன் கிளைச் செயலாளருமான தோழர் ஏழுமலை (85) வெள்ளியன்று (மே-7) காலை காலமானார். மறைந்த தோழர் ஏழுமலை ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி யாக இருந்த போதிலிருந்து கட்சிப் பணியாற்றி வந்தவர். பல் வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர். தனது இறுதிமூச்சு வரை கட்சியின் வளர்ச்சிக்காக பாடு பட்டவர். அவரது உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜி.வினாயகமூர்த்தி, பி. கதிர்வேல் உட்பட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி னர். அவரது உடல் வெள்ளியன்று மாலை அதே பகுதியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
மணிமுத்தாறு நதியின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு
சென்னை, மே 7- மணிமுத்தாறு நதியின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றியதை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பெருந்துறை கிராமத்தில் மணி முத்தாறு நதியின் குறுக்கே தடுப்பணை கட்ட முடிவெடுக்கப் பட்டது. இந்நிலையில் திடீரென பெருந்துறைக்கு பதிலாக பெரியகோட்டுமுளை எனும் கிராமத்தில் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டது. இதை எதிர்த்தும், பெருந்துறையிலேயே தடுப்பணை கட்ட உத்தரவிடக் கோரியும், அப்பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ஆதிகேச வலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்க னவே தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை கட்டினால் பல கிரா மங்கள் பாசன வசதி பெறும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு விளக்கமளிக்கும்படி, கடலூர் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை பொறியாளர், விருத் தாச்சலம் செய்ற்பொறியாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மே 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
புதுவையில் 1000த்தை நெருங்கும் கொரோனா மரணம்
புதுச்சேரி, மே.6- புதுச்சேரியில் கொரோனா தொற்றின் 2ஆவது அலையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை புதிதாக 1,746 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 920 ஆக உயர்ந்துள்ளது என்று புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.