சென்னை,பிப்,26 சென்னையில் 1,647 மையங்களில் 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் சனிக்கிழமை (27-ந்தேதி) நடைபெறவுள்ளது. இந்தநிலையில், பெரு நகர சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுப்பதற்கு 1,647 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டுமருந்து முறையாக கொடுத்திருந்தாலும் 27-ந்தேதி நடைபெறும் தீவிர போலியோ சொட்டுமருந்து முகாமில் குழந்தைகளுக்கு அவசியம் சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும். இது ஒரு கூடுதல் தவணையாகும். இதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், பள்ளி கள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரயில்வே நிலை யங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மெரினா கடற்கரை, கோயம் பேடு புறநகர் பேருந்து நிலையங்களில் நடமாடும் சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலியோ சொட்டுமருந்து முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி, இடைவெளியின்றி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.