விழுப்புரம், ஜூலை 7-
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்திற்குட்பட்ட ஆனைப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் (34). அவர் டைல்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த 29 ஆம் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்ட நபர், பகுதி நேர வேலையாக புகைப்படங்களை அனுப்பி அதற்கு மதிப்பீடு செய்து கொடுத்தால் குறிப்பிட்ட தொகை தரப்படும் எனக் கூறினார்.
அதன்படி அருண்குமார் செய்து ரூ.210-ஐ பெற்றுள்ளார். பின்னர் வெவ்வேறு டெலிகிராம் ஐ.டி.களில் இருந்து அருண்குமாரை தொடர்பு கொண்டு பேசிய நபர்கள், சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளனர்.
இதை நம்பிய அருண்குமார், கடந்த 30 ஆம் தேதி ரூ.1,000 செலுத்தி ரூ.1,410-யும், ரூ.3 ஆயிரம் செலுத்தி ரூ.3,810 ஆகவும் திரும்பப் பெற்றுள்ளார். அதன் பிறகு அவர், தான் கணக்கு வைத்திருக்கும் வங்கி கணக்குடன் இணைக்க பட்ட கூகுள் பே மூலம், மொபைல் ஆப் மூலமாகவும் அந்த நபர் அனுப்பச் சொன்ன வங்கிகளின் கணக்கிற்கு ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 4 தவணைகளாக அனுப்பியுள்ளார். ஆனால் டாஸ்க் முடித்த பிறகும் அருண்குமாருக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பித் தராமல் அந்த நபர் ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது.
பின்னர், இதுகுறித்து அருண்குமார் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு காவல் துறையிடம் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து, ஆன்லைன் மூலம் நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.