court

img

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வீர்களா? - திடுக்கிட வைக்கும் உச்சநீதிமன்றத்தின் கேள்வி

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வீர்களா என்று குற்றம் சாட்டப்பட்டவரிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது திடுக்கிட வைத்துள்ளது. 
மகாராஷ்டிர மாநிலத்தின் மின்துறையில் பணியில் இருப்பவர் மோஹித் சுபாஷ் சவான். இவர் பள்ளிச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து மோஹத் சுபாஷ் சவான்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளி மோஹித், தன்னை ஜாமீனில் விடுவிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டேவின் தலைமையின் கீழ் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் முடிவில், “நீங்கள் ஒரு பெண்ணைப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி உள்ளீர்கள். அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வீர்களா? அவ்வாறு திருமணம் செய்து கொண்டால்  நாங்கள் உதவுகிறோம். இல்லை என்றால் நீங்கள் உங்கள் பணியை இழக்க நேரிடும். சிறையிலும் அடைக்கப்படுவீர். நாங்கள் உங்களைத் திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், நாங்கள் உங்கள் பதிலைத் தெரிந்துகொள்ள வேண்டும் ” என்று நீதிபதி பாப்டே தெரிவித்தார்.
இதற்கு மோஹித் தரப்பில், “அப்பெண் காவல் நிலையத்தை அணுகும்போதே திருமணம் தொடர்பாகப் பேசினோம். ஆனால், அப்பெண் அதற்குச் சம்மதிக்கவில்லை. மேலும், அப்பெண் 18 வயதைக் கடந்த பிறகுதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார்கள். அவருக்கு 18 வயதைக் கடந்த பிறகு திருமணத்துக்குச் சம்மதித்தார். நான் மறுத்துவிட்டேன். இதனைத் தொடர்ந்தே அவர் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
முதலில் நான் அப்பெண்னைத் திருமணம் செய்துகொள்ளவே எண்ணினேன். ஆனால், தற்போது எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. நான் ஒரு அரசு ஊழியர். நான் கைது செய்யப்பட்டால் என் வேலை பறிபோகிவிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியில், "நான்கு வாரங்களுக்கு மோஹித்தின் கைதை நிறுத்தி வைப்பதாகவும், பின்னர் மோஹித் ஜாமீன் வேண்டி விண்ணப்பிக்கலாம்” என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த தீர்ப்புக்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாலியல் வழக்கில் நீதிமன்றத்தின் இதுபோன்ற கேள்விகள் பெண்களுக்கு மேலும் பாதுகாப்பற்ற சூழலையே நாட்டில் உருவாக்கும் என்று மகளிர் உரிமை ஆர்வலர் குற்றம் சாட்டி உள்ளனர்.
 

;