court

img

புதிய தலைமை நீதிபதி பதவியேற்றபின் புத்துயிர்ப்புடன் திகழும் உச்சநீதிமன்றம்.....

புதுதில்லி:
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நீதியரசர் என்.வி. ரமணா பதவியேற்று ஒருவாரகாலத்திற்குள்ளேயே, அடுத்தடுத்து எடுக்கப்பட்டுவரும் முடிவுகள், உச்சநீதிமன்றம் மீண்டும் புத்துயிர்ப்புடன் செயல்படத் துவங்கியிருப்பதைக் காட்டுகின்றன.

இதுதொடர்பாக புதன்கழமை (மே 5) ‘தி இந்து’ நாளிதழில் வந்துள்ள செய்திக் கட்டுரை வருமாறு:

உச்சநீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக, நீதியரசர் என்.வி. ரமணா பொறுப்பேற்றபின்பு, கடந்த ஒரு வார காலத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள், அது மீண்டும் சாமானிய மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திடும் பங்களிப்பினை சுறுசுறுப்பாக மேற்கொண்டிருப்பதை நன்கு வெளிப்படுத்துகிறது.இது, இதழாளர் சித்திக் கப்பான் அவர்களை மருத்துவ சிகிச்சைக்காக தில்லிக்கு அனுப்பிட உத்தரப்பிரதேச அரசு தயக்கம் காட்டியது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில் நன்கு வெளிப்பட்டிருக்கிறது. இவ்வாறு உத்தரவுபிறப்பிக்கும்போது கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தலைநகர் தில்லியில் மதிப்புமிக்க உயிர்கள்பல பலியாகியிருப்பதையும் இதற்கு மத்தியஅரசு இரண்டாவது அலையை எதிர்கொள்வதில் ஏற்படுத்தியுள்ள தோல்விகளே காரணம் என்பதையும் நேரடியாகவே சுட்டிக்காட்டி இருக்கிறது. மேலும் தேசத்துரோகக் குற்றப்பிரிவு குறித்தும் அதன் சட்டப்பூர்வமான தன்மை குறித்தும் ஆய்வு செய்திடவும் தீர்மானித்திருக்கிறது.

அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துக் கூறும் மனித உரிமைப் போராளிகள், வழக்குரைஞர்கள், மாணவர்கள், இதழாளர்கள் அனைவரையும் தேசத்துரோகக் குற்றப்பிரிவின்கீழ் சிறையில் அடைத்திருக்கும் பின்னணியில் இவ்வாறு உச்சநீதிமன்றம் ஆய்வு செய்திடமுன்வந்திருக்கிறது. இதே பிரச்சனையில் மூன்று மாதங்களுக்கு முன் சில வழக்குரைஞர்கள் கொண்டவந்த மனுக்கள் இதே நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய நீதிபதி பொறுப்பேற்றபின் இவ்வாறு உச்சநீதிமன்றம் ஆய்வு செய்திட முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கப்பான் வழக்கில், தலைமை நீதிபதி நீதியரசர் ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வாயம், கப்பானுக்கு சிறப்பு சிகிச்சை எதுவும் தேவையில்லை என  உத்தரப்பிரதேச மாநில அரசு அளித்திட்ட மனுவைத் தள்ளுபடி செய்தது.  “மிகவும் மதிப்புமிக்க அடிப்படை உரிமையாக விளங்கும்  ‘வாழ்வதற்கான உரிமை’, ஒரு விசாரணைக் கைதிக்கும் நிபந்தனையற்ற விதத்தில் உண்டு” என்று அமர்வாயம் தீர்முடிவினைப் பிறப்பித்துள்ளது.  கப்பான் குறித்து உத்தரப்பிரதேசம் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கைகளை மிகவும்விரிவான அளவில் நீதிமன்றம் பதிவு செய்திருக்கிறது. உத்தரப்பிரதேசம் அளித்த முந்தைய மருத்துவ அறிக்கைகளில் கப்பான்,சர்க்கரை நோய், இதயப் பிரச்சனை, ரத்தஅழுத்தம் மற்றும் உடம்பில் காயம் உட்பட பலவற்றைப் பெற்றிருக்கிறார் எனக் காட்டுகிறது. ஆனால் இப்போது உத்தரப்பிரதேச அரசாங்கத்தால்  அளிக்கப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையானது அவர் பரிசோதனைசெய்யப்பட்டதில் அவருக்கு கோவிட்-19 தொற்றுஇல்லை என்பது போல் கூறப்பட்டிருக்கிறது.  

தலைமை நீதிபதி ரமணா தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக்கொள்ளும் ஏப்ரல் 24க்கு முன்பு, வழக்கறிஞர்கள் மத்தியில் உரையாற்றுகையில், வழக்குரைஞர்கள், நீதிபதிகள் அடங்கிய சட்ட சமூகம், சமூக விரோத சக்திகள் அல்லது அரசால் கட்டவிழ்த்துவிடப்படும் மனித உரிமை அட்டூழியங்களிலிருந்து வடுப்படத்தக்க நிலையில், உள்ள பிரிவினரைப் பாதுகாத்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.    (ந.நி.)

;