மதுரை:
கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மாவட்டத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் கோரி போராட்டம் நடத்தியவர்கள்மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்துசென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரில் பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக கடந்த 2017- ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ஒரு போக விவசாயம் செய்ய போதிய நீர் திறந்துவிட வலியுறுத்தி மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தின.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அடக்கிவீரணன், கரு.கதிரேசன், வாலிபர் சங்க மதுரை மாவட்டமுன்னாள் தலைவர் எம்.கண்ணன் மட்டுமல்லாது பல்வேறு விவசாய அமைப்புகள், விவசாயிகளும் தன்னெழுச்சிப் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியது தவறு எனக்கூறி மதுரை மாவட்டம் மேலூர் காவல்துறையினர் விவசாயிகள் சங்க செயலாளர் முருகன், வழக்கறிஞர்கள் ஸ்டாலின், அமலன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையும் தாக்கல் செய்து வழக்கு விசாரணை நடந்து வந்தது.இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அமலன் வழக்குத் தொடர்ந்திருந்தார் இந்த வழக்கு நீண்டவிசாரணைக்குப் பின் சனிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில் விவசாயிகள் தாங்கள் விவசாயம் செய்வதற்கான தண்ணீர் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து அதன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்தப் போராட்டம் சட்டவிரோதமான போராட்டம் என்று கூற முடியாது..விவசாயிகள் போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற் கான எந்த ஆதாரங்களும் வழக்கில் காட்டப்படவில்லை.எனவே விவசாயத்திற்கு தண்ணீர் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீதுபோடப்பட்ட வழக்குகளை ரத்து செய்துஉத்தரவிடுகிறேன் என்று அந்த தீர்ப்பில்கூறியுள்ளார்.