புதுதில்லி:
மத்திய அரசு பிறப்பித்த தீர்ப்பாயங்கள் திருத்த அவசர சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி குடியரசுத்தலைவர் பிறப்பித்துள்ள தீர்ப்பாயங்கள் திருத்த அவசரச் சட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-ல் தீர்ப்பாயங்கள் தொடர்பாக மத்திய அரசு வகுத்த விதிகள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. 2020-ல் மீண்டும் மத்திய அரசு வகுத்த விதிகளும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவே உள்ளன என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 2020-ல் மத்திய அரசு பிறப்பித்த விதிகளை எதிர்த்து சென்னை பார் அசோஷியேஷன் வழக்கு தொடர்ந்துள்ளது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 2020-ல் மத்திய அரசு பிறப்பித்த விதிகளில் பல தவறானவை என்று சுட்டிக்காட்டியது. 2020-ல் பிறப்பித்த விதிகளை மாற்றி அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி மீண்டும் 2021-ல் தீர்ப்பாயங்கள் திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். சென்னை பார் அசோஷியேஷனின் இந்த மனுவை வெள்ளிக்கிழமை(ஏப்.23) விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.