court

img

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி இல்லை... வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது...

புதுதில்லி:
ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. 

மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொன்றனர். இதன்பின்னரே ஸ்டெர்லைட் ஆலையைதமிழக அரசு மூடி சீல் வைத்தது. இதை எதிர்த்துதேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எவ்வித 
பாதிப்பும் இல்லை என்று மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதிதருண் அகர்வால் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், ஆலையை மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பித்தது. 

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆலையை மீண்டும் திறக்க இடைக்காலதடை விதித்தது. இந்த வழக்கை விசாரிக்கதேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது. 

வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை   மீண்டும் திறக்கஅனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணி காரணமாக தற்காலிகமாக திறக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்தது. ஆனால் வேதாந்தா நிறுவன கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

;