cinema

img

திரைப்பட விமர்சனம் : கர்ணன்....

கர்ணன் திரைப்படத்தின் களம், நெல்லை மாவட்டத்தில் ஒரு கிராமம். கரு, சாதிக் கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்து எழுதல். நிஜமும், புனைவும் இணைந்த கலவைதான் இந்தத் திரைப்படம்.புனையப்பட்டுள்ள காட்சிகளும், வாழ்வியலை ஒட்டியவையாகவே உள்ளன.

ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் வாழக்கூடிய பொடியன்குளம் என்ற கிராமத்தில் பேருந்து நிறுத்தம் கூட இல்லை. இதனால், அந்த கிராமத்தை விட்டு வெளியூர் செல்கிறவர்களும், வீடு திரும்புகிறவர்களும் அருகேயுள்ள மேலூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிதான் நடந்து வர வேண்டும். கர்ப்பிணிப் பெண்ணாக இருந்தாலும், இந்த அவலத்தை எதிர்கொண்டே ஆகவேண்டிய சூழல் நிலவுகிறது.தலித் அல்லாத மக்கள் வாழக்கூடிய மேலூர் கிராமம், பொடியன் குளம் மக்கள் மீது பல்வேறு சிரமங்களை சுமத்துகிறது. இதற்கு சாதி ஆதிக்க உணர்வு காரணமாக இருக்கிறது. பேருந்துக்காக காத்திருந்த கர்ப்பிணி பெண்ணிற்காக எந்த பேருந்தும் நிற்கவில்லை. இந்த சூழலில் கர்ணன் தலைமையில் சில இளைஞர்கள் பேருந்தை மறித்து தாக்குதல் நடத்துகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அந்த கிராமத்திற்கு காவல்துறை வருகிறது. பேருந்து உரிமையாளர் வலியுறுத்த விரும்பாததால்  வழக்கு கைவிடப்பட்டாலும், காவல்நிலையத்திற்கு அழைக்கப்படும் ஊர் பெரியவர்கள் கடுமையாக தாக்கப்படுகின்றனர். இதனை அடுத்து, காவல் நிலையத்தை பொடியன் குளம் மக்கள் சூறையாடுகின்றனர். இதனால், மூர்க்கத்தனமாக எதிர்வினையாற்றும் காவல் அதிகாரி, மொத்த கிராமத்தையும் அழித்தொழிக்க முடிவு செய்கிறார்.தலித் மக்களுடைய உழைப்பு தேவைப்படுகிற போதிலும், அந்த மக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை மறுப்பதற்கான காரணமாக சாதிய வன்மமே பின்னணியாக இருக்கிறது. மேலும், பொடியன்குளம் மக்களை விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரி, ‘மாடசாமி மகன் எப்படி துரியோதனனாக முடியும்?’ என்று கேட்பதோடு  தலையில் கட்டியிருந்த முண்டாசையும் பிரச்சனையாக்குகிறார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள உத்தப்புரம் கிராமத்தில், தலித் மக்கள் வசிக்கக் கூடிய பகுதியில், சமீப காலம்வரை பேருந்து நிழற்குடை கட்ட சாதி ஆதிக்க உணர்வு கொண்டோர் அனுமதிக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடிய பிறகுதான், அங்கே பேருந்து நிழற்குடையே அமைக்க முடிந்தது. இப்படி இன்னும் ஏராளமான கிராமங்களை உதாரணமாக சுட்டிக்காட்ட முடியும்.தலித் மக்களின் பெயர் எப்படி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்டு சாதி ஆதிக்க மனம் படைத்தோருக்கு உறுத்தல் எழுவதும் நடைமுறையில் காண்பதே ஆகும். இவ்வாறான சாதி ஆதிக்க செயல்பாடுகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுகிறபோது, காவல்துறையின் தலையீடு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே இருப்பதை பல  நேரங்களில் பார்த்திருக்கிறோம். இதே அணுகுமுறைதான் சிறுபான்மை மக்களை நோக்கிய காவல்துறையின் பார்வையாகவும் உள்ளது.

இக்கதையில், பொடியன் குளம் என்ற கிராமத்தில், காவலர்கள் முன்னெடுக்கும் வன்முறையாக காட்டப்படும் நிகழ்வுகள், உண்மையில் கொடியன்குளம் என்ற கிராமத்தில், தலித் மக்களின் வீடுகள் அழித்தொழிக்கப்பட்ட நிகழ்வுகளை நினைவூட்டுவதாக உள்ளன.இப்படியொரு திரைப்படத்தில் சிறப்பாக நடித்துள்ள நடிகர் தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள், ஒளிப்பதிவு செய்திருக்கும் தேனி ஈஸ்வர், இசையமைத்துள்ள சந்தோஷ் நாராயணன், பாடல் ஆசிரியர் யுகபாரதி மற்றும் சிறப்பாக இயக்கியுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

இப்படத்தில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கே. சாமுவேல் ராஜ் ஒரு கதாபாத்திரமாக இடம்பெற்றிருப்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.பரியேறும் பெருமாள் திரைப்படத்தில், சாதி மறுப்புத் திருமணத்திற்கு, சாதீய கண்ணோட்டத்தோடு வரக்கூடிய எதிர்ப்பு கருவாக அமைந்தது. கர்ணன் திரைப்படம், சாதி ஆதிக்கத்திற்கு எதிராக கிளர்ந்து எழுவதைப் பற்றி பேசுகிறது. அவ்வாறான கதையில், பேருந்து நிறுத்தம் மற்றும் பெயர் போன்ற விசயங்களை தாண்டி, சாதிக் கொடுமையின் பிற அம்சங்களையும் கொண்டுவந்திருக்கலாம்.

தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு ஆளாகும் மக்கள், கலகம் செய்வதும் கிளர்ச்சி செய்வதும் இயல்பானதே. இத்தகைய கிளர்ச்சிகளோடு,  சாதியக் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவர நிலவுடைமை - பொருளாதார சுரண்டலுக்கு எதிரான ஒன்றுபட்ட கிளர்ச்சி  மற்றும் ஒருங்கிணைந்த அரசியல் செயல்பாடு போன்ற அடிப்படையான அம்சங்களையும் திரைக்கதையில் கொண்டு வந்திருக்கலாம்.தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமே சாதிக் கொடுமைகள் நீடித்து வரும் சூழலில், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான கருவோடு கர்ணன் திரைப்படம் வந்திருப்பதும், அது அதிக மக்களை சென்று சேர்ந்திருப்பதும் பாராட்டுக்குரியது. வரவேற்கத்தக்கது.

கட்டுரையாளர் : ஜி.ராமகிருஷ்ணன், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

;