articles

img

ராஜாராம் மோகன்ராய் 250ஆவது பிறந்த தினம்

இன்று (மே 22), 19ஆம் நூற்றாண்டின் சமூக மற்றும் மத சீர்திருத்தவாதிகளில் மிகவும் செல்வாக்கானவர்களில் ஒருவரான ராஜாராம் மோகன் ராய் அவர்களின் 250ஆம் பிறந்த நாளாகும். அவர் 1772 மே 22 அன்று வங்க மாகாணத்தின் ராதாநகர் ஹூக்ளி மாவட்டத்தில் பிறந்தார்.
இந்தியாவின் பல மாநிலங்கள் இப்போது மதவெறியர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகிக்கொண்டிருக்கையில், ராஜாராம் மோகன் ராய், பெண்களின் விடுதலைக்காகவும், கல்வியை நவீனமயப்படுத்துவதற்காகவும், மதச் சடங்குகளில் எண்ணற்ற மாற்றங்களுக்காக நடவடிக்கைகள் மேற்கொண்டமை அனைத்தும் இன்றைக்கு மிகவும் பொருத்தமுடையதாக மாறி இருக்கின்றன.   
“இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவிவந்த பத்தாம்பசலித்தனமான சமூகப் பழக்க வழக்கங்கள், நவீனத்துவ முன்னேற்றங்களுக்கு சவாலாக விளங்குகின்றன என்று முதன்முதல் குரல் எழுப்பியவர் ராஜாராம் மோகன்ராய்,” என்று இப்போதுள்ள இந்தியக் குடியரசின் ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் எழுதியவர்களும் செயல்பட்டவர்கள் குறித்து நவீன இந்தியாவின் சிற்பிகள் (பென்குவின் பதிப்பகம்,2010) என்னும் புத்தகத்தில் அதன் ஆசிரியரும், வரலாற்றியலாளருமான ராமச்சந்திர குஹா குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய புரட்சிகரமான சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் அவருடைய உற்றார், உறவினர்களாலோ, சாதியினராலோ அல்லது மதத்தினராலோ எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
இளம் பருவ வாழ்க்கை
ஒரு வளமான பிராமணக் குடும்பத்தில் பிறந்த, ராஜாராம் மோகன் ராய், அவர் காலத்தில் நிலவிவந்த சனாதன சாதி சடங்குகள் மற்றும் நடைமுறைகளுக்கிடையேதான் வளர்ந்து வந்தார். அதாவது குழந்தைத் திருமணம், பலதாரத் திருமணம், வரதட்சணை முதலானவை உயர்சாதியினர் மத்தியில் நிலவிவந்தன. அவருக்கே அவர் குழந்தையாக இருந்தபோதே ஒரு தடவைக்கும் மேல் திருமணம் நடந்திருக்கிறது. குடும்பத்தினரின் செல்வாக்கின் காரணமாக அவருக்கு சிறந்த கல்வியும் அளிக்கப்பட்டது.
ராஜாராம் மோகன்ராய்க்கு வங்கமொழி மட்டுமல்லாமல், பாரசீகம், அரபி, சமஸ்கிருதம் முதலான மொழிகளும் தெரியும். பின்னர் ஆங்கிலமும் கற்றுக்கொண்டார். இம்மொழிகள் ஒவ்வொன்றில் இலக்கியமும் மற்றும் கலாச்சாரமும் அவரிடம் பால்யகாலத்திலிருந்து வந்த மதச் சடங்குகள் மற்றும் சமூகப் பிடிப்புகளிலிருந்து விடுபட உதவின.  குறிப்பாக, கணவர் இறந்தால் மனைவி தீயில் விழுந்து இறக்க வேண்டும் என்கிற பெண்கள் உடன்கட்டை ஏறும் ‘சதி’த் திட்டத்திற்கு எதிராக அவருடைய உள்ளம் கொதித்துக்கொண்டிருந்தது. அவருடைய அண்ணன் ஒருவர் இறந்தபின்பு, அவருடைய அண்ணியாரை அவ்வாறு கொன்றது அவருடைய உள்ளத்தில் ஆறாத தழும்பாக இருந்து வந்தது.
18ஆம் நூற்றாண்டின் முடிவில் வங்கத்தில் முகலாயர்களின் ஆட்சி மறைந்து, ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியார் ஆட்சி அரும்பத் தொடங்கியிருந்த சமயத்தில் ராய் மெல்ல மெல்ல அரசியல் மற்றும் சமூக இயக்கங்களுக்குள் வந்து கொண்டிருந்தார். அவர் கற்ற கல்வி காரணமாக அவருக்கு தத்துவ இயல் மற்றும் இறையியல் ஆகியவற்றைக் கற்க வேண்டும் என்ற பசி அதிகமாக இருந்தது. வேதங்களையும், உபநிஷதங்களையும் ஆழ்ந்த படித்தார். அதேபோன்றே இஸ்லாம் மற்றும் கிறித்தவ மத நூல்களையும் படித்தார்.    
ராஜாராம் மோகன்ராய் குறித்து ரவீந்திரநாத் தாகூர், “அவர் பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை மற்றும் வாழ்க்கையின் அனைத்து வடிவங்களுக்கும் மதிப்பு அளித்தல் என அனைத்து உணர்வுகளுடனும் வாழ்ந்து வந்தார்” என்று கூறினார்.  
பிரிட்டிஷார் இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அந்த சமயத்தில் துளிர்விடத் தொடங்கியிருந்தபோதிலும், அது வேகமாக வளர்ந்துவிடும் என்பதை ராய் முன்கூட்டியே உணர்ந்திருந்தார். ராய், பல்வேறு மொழிகளையும், அவற்றின் கலாச்சாரங்களையும் கற்றறிந்திருந்ததால், அவற்றில் காணப்பட்ட நல்ல அம்சங்கள் அனைத்தையும் பற்றிக்கொண்டிருந்தார். இதன் காரணமாக அப்போதிருந்த தாராளவாத மனப்பான்மை உடையவர்களில் அவர் முதலாவதாக விளங்கினார். (Roy was among India’s first liberals).
அவர் ஒரு கல்வியாளர் என்ற முறையில் மட்டும் அனைத்தையும் அவர் படித்திடவில்லை. மாறாக மனிதகுலத்திற்கு மகிழ்ச்சியை அளிப்பதற்கும், அவர்களுக்கு சுதந்திரத்தை அளிப்பதற்கும் நடைமுறையில் என்ன செய்ய வேண்டும் என்கிற அடிப்படையிலேயே அவர் படித்தார். 1814இல் ‘நண்பர்களின் கழகம்’ (Atimiya Sabha-Society of Friends) என்னும் அமைப்பைத் தொடங்கினார். இதன்கீழ் அவர் உருவவழிபாடு, சாதியம், குழந்தைத் திருமணம் மற்றும் இதர சமூக இழிவுகளுக்கு எதிராகப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்த அமைப்புதான், பின்னர் ரவீந்திர நாத் தாகூரின் தந்தை தேவேந்திரநாத் தாகூரால் 1828இல் பிரம்மோ சபா அமைத்திட வழிவகுத்தது.

‘சதி‘ (‘Sati’) ஒழிப்பு, கல்வி மற்றும் மத சீர்திருத்தங்கள்

ராஜாராம் மோகன் ராய் கல்கத்தாவிலிருந்த 15 ஆண்டு காலத்தில் ஒரு பிரபலமான அறிவுஜீவியாக விளங்கினார். கல்வியில் சீர்திருத்தம் கொண்டுவர பிரச்சாரம் மேற்கொண்டார். குறிப்பாக, மேற்கத்திய கல்விமுறையை அறிமுகப்படுத்துவதில் ஆர்வத்துடன் இருந்தார். நகரத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களையும் தொடங்கினார். 1817இல் ஸ்காட்டிஷ் பரோபகாரர் டேவிட் ஹரே என்பவருடன் கூட்டாக, இந்து கல்லூரியை (இப்போது அது பிரசிடெண்சி பல்கலைக்கழகமாக இருக்கிறது) அமைத்தார். இதன்பின்னர் 1822இல் ஆங்கிலோ-இந்தி பள்ளியை 1830இல் தொடங்கினார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியாக மாறிய ஜெனரல் அசம்ப்ளி நிறுவனத்தை அலெக்சாண்டர் டஃப் என்பவர் துவங்கிட உதவினார்.
இவரும், இவருடன் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் போன்றவர்களும் இணைந்துதான் பெண்களை தீக்கு இரையாக்கும், உடன்கட்டை ஏறும் ‘சதி’த் திட்டத்தை 1829இல் வில்லியம் பெண்டின்க் என்பவர் ஆளுநராக இருந்த சமயத்தில் ஒழித்துக்கட்டினார்கள். மேலும் பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும் என்பதற்காகவும் பிரிட்டிஷாரிடம் வாதாடினார். பத்திரிகை சுதந்திரத்திற்காகவும் பிரிட்டிஷாரிடம் 1829 மற்றும் 1830களில் அவர் மனு கொடுத்தார்.  
இவருடைய பிரம்மோ சபா, பின்னர் பிரம்ம சமாஜமாக மாறியது. இது சமூகப் பழக்க வழக்கங்களில் உயர்சாதியினர் பிடி இருப்பதற்கு எதிராக செயல்பட்டது. வங்க மறுமலர்ச்சி இயக்க காலத்தில், பல்வேறு சமூக மாற்றங்களை வலியுறுத்தியது. இந்துயிசத்தை சீர்திருத்தி, இவர்கள் கொண்டுவந்த பிரம்மோ மதம் என்பது அனைத்து சாதியினரும் சமம் என்று கூறியது.  
ராம் மோகன் ராய்க்கு ராஜா பட்டம், முகலாய சக்கரவர்த்தி இரண்டாம் அக்பரால் வழங்கப்பட்டதாகும். கிரேட் பிரிட்டனிலும்,  அமெரிக்காவிலும் அங்கீகரிக்கப்பட்ட முதல் இந்தியர், ராஜா ராம் மோகன் ராய் ஆவார். எனினும் 21ஆம் நூற்றாண்டிலும்கூட அவரை விமர்சிப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். சமீபத்தில் பாயல் ரோஹாட்கி (Payal Rohatgi) என்னும் நடிகர், அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ராஜாராம் மோகன் ராய் உடன்கட்டை ஏறும் ‘சதி’த் திட்டத்தை ஒழித்ததன் மூலம் பிரிட்டிஷாருக்கு வாலாக இருந்தார் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
கொண்டாட்டங்கள்
ராஜாராம் மோகன் ராயின் 250ஆவது பிறந்த தினம் நாடு முழுதும் பல்வேறு பாகங்களில் ஆண்டு முழுதும் கொண்டாட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். மேற்கு வங்கத்தில், சால்ட் லேக் பகுதியில் உள்ள ராஜா ராம் மோகன் ராய் நூலக ஃபவுண்டேசனிட்ல கலாச்சாரத்துறை அமைச்சரால் சிலை திறக்கப்பட இருக்கிறது. ராதாநகரில் உள்ள  ராஜாராம் மோகன் ராய் அவர்களின் பூர்வீக  வீட்டைப் புதுப்பித்து, ‘பாரம்பர்ய அந்தஸ்து’ (‘heritage status’) அளித்திட மேற்கு வங்க மாநில அரசு முன்வந்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள சதாரன் பிரம்ம சமாஜத்தில் மே 22 முதல் 24 வரையிலும் கல்வியாளர்கள் பலர் பங்கேற்கும் கருத்தரங்கங்கள் நடைபெறவுள்ளன.
(நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்)
(தமிழில்: ச.வீரமணி)
 

;