articles

img

கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத்தில் பேரழிவிற்கு இட்டுச்செல்லும் பிரிவினை....

ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகம், மாநில அரசாங்கங்களிடம் மகாத்மாகாந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத்திற்கு, சாதிஅடிப்படையில் தரவுகளைக் கேட்டிருக்கிறது. இதில் பணியாற்றும் தொழிலாளர்களின் பட்டியல் சாதி (SC), பட்டியல் பழங்குடிப் பிரிவு (ST), விவரங்களைத் தனித்தனியே குறிப்பிட வேண்டும் எனக் கோரியிருக்கிறது. 2006இல் இந்தத் திட்டம் உருவானதிலிருந்து, ஒன்றிய அரசாங்கத்திடமிருந்து மாநில அரசாங்கங்களுக்கு இதுபோன்ற சுற்றறிக்கை எதுவும் இதற்கு முன் வந்ததில்லை. 

இப்போதுதான் இந்தத்திட்டத்தின்கீழ் முதன்முறையாக சாதி அடிப்படையில் தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி, விவரங்களைக் கோரியிருக்கிறது. இது, பாஜக அரசாங்கத்தின்உண்மையான நிகழ்ச்சிநிரலை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு உதவுவதற்காகத்தான் இவ்வாறு கோரப்படுவதாக நாடகமாடினாலும், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் நலன்களைக் கீழ்ப்படுத்தி, வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தினை பலவீனப்படுத்துவதற்கான கபடத்தனமான திட்டமே இதுவாகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

வறுமையைப் போக்கவே...
மகாத்மாகாந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டம் சில சமரசம் செய்துகொள்ளப்பட முடியாத பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. இந்தச் சட்டத்தின்கீழ் நாட்டின்கிராமப்புறங்களில் உள்ள வயது வந்த ஒவ்வொருவருக்கும் அவருடைய மதம் மற்றும் சாதியைப்பற்றிப் பொருட்படுத்தாது குறைந்தபட்சம் ஓராண்டிற்கு 100 நாட்கள் வேலை அளித்திட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது. ஒருவேளை அவர்களுக்கு வேலை அளிக்காவிட்டால், வேலையின்மைக்கான உதவித்தொகை  அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இதுபோன்று முன்னெப்போதும் இருந்ததில்லை.

மேலும், இந்தச் சட்டமானது ஒப்பந்ததாரர்களை ஒழித்துக்கட்டுகிறது, அதேபோன்று இயந்திரங்கள் பயன்படுத்துவதையும் தடை செய்கிறது. வேலை செய்யும் இடங்களில் அனைத்துவிதமான வசதிகளும் தொழிலாளர்களுக்குச் செய்துதரப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. குழந்தைப் பாதுகாப்பு மையங்களும் நிறுவப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஊதியங்கள் கொடுக்கப்படுவது வாராந்திர அடிப்படையில் அமைந்திட வேண்டும். இந்தச்சட்டத்தின் பிரதான குறிக்கோள், கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்பதே. கிராமப்புற வறுமையைப் போக்குவதற்காகவே இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

நீதிமன்றங்கள் தலையிட்டும் பயனில்லை
நாட்டில் கிராமப்புறங்களில் மொத்தம் உள்ள 29 கோடியே 42 லட்சம் தொழிலாளர்களில், அரசாங்கம் 14 கோடியே 31 லட்சம் தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை அளித்துக் கொண்டிருக்கிறது. கேரளாவைத் தவிர, வேறெந்த மாநிலங்களிலும் வேலை உத்தரவாதஅட்டைகள் (job card holders) வழங்கிய அனைவருக்கும்முழுமையாக நூறு நாட்களுக்கு வேலைகள் கொடுக்கப்படுவதில்லை. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவேலைகளுக்காக விண்ணப்பித்திருக்கிறார்கள். ஆனாலும் இவர்களுக்கு வேலைகள் அளிக்கப்படவில்லை.  நீதிமன்றங்கள் தலையிட்டும்கூட பெரிய அளவிற்குப் பயனேதும் ஏற்படவில்லை.இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், 2020-21ஆம் நிதியாண்டில், மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ்,  389 கோடியே 32 லட்சம் மனித வேலைநாட்களுக்குத்தான் வேலைஅளிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றை சமாளித்துக்கொண்டே, தொழிலாளர்கள் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

வலுப்படுத்துவதற்குப் பதில் மறுதலிக்க... 
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி என்பது எதிர்மறையில் இருந்த அதே சமயத்தில், விவசாயத்துறையில் மட்டும் 4 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு, கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் வயல்களில் வேலை செய்ததே காரணமாகும். எனவே, இதற்கான மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பாஜக அரசாங்கமோ இதுவரை இதன்மூலம் கிடைக்கப்பட்ட ஆதாயங்களையெல்லாம் மறுதலித்திடும் விதத்தில் இத்தகு ஆலோசனைகள் மூலம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

பாஜக அரசாங்கம், வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக பட்டியலின சாதிகள் மற்றும் பழங்குடியினரின் தரவுகளை சேகரித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், அவர்களை முன்னேற்றுவதற்கான துணைத் திட்டத்தின்கீழ் நிதிகளை ஒதுக்குவதற்காகத்தான் என்கிற பொய்ப்பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறது. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் சென்ற ஆண்டு வேலை அளிக்கப்பட்ட மனிதநாட்களில், பட்டியலின சாதியினர் 19.86 சதவீதத்தினரும், பழங்குடியினர் 17.9 சதவீதத்தினரும் பயன் அடைந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தத்தில் 37.76 சதவீதத்தினர், அதாவது 140 கோடி மனித நாட்கள் பயன் அடைந்திருக்கிறார்கள். நம் நாட்டில், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மக்கள்தொகை 24.4 சதவீதமாகும். அவர்களின் பங்கேற்பு இவ்வாறு அவர்களின் மக்கள்தொகை சதவீதத்தைவிட 13 சதவீதம் அதிகமாகும்.கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் வேலைகள் என்பது தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் உயிர்நாடியாகும். பட்ஜெட்டில் தலித்துகள், பழங்குடியினரின் மக்கள்தொகை விகிதாச்சாரத்திற்கேற்பத்தான் துணைத் திட்டங்களுக்குப் பணம் ஒதுக்கப்படுகிறது. இதேபோன்றே மகாத்மாகாந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழும் பணம் ஒதுக்கப்படும் என்றால், பட்டியலின சாதியினருக்கும், பழங்குடியினருக்கும் வெறும் 24.4 சதவீதம்தான் பணம் ஒதுக்கப்படும். எனவே மீதமுள்ள 13 சதவீத மனிதநாட்கள் வேலைக்கான பணத்தினை எப்படிப் பெறுவது?
பல மாநிலங்களில் தலித்துகளும், பழங்குடியினரும் 40-60 சதவீத வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். பஞ்சாப்பில் 60 சதவீத வேலைகளை தலித்துகள் மட்டுமே செய்துகொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தின் மக்கள் தொகையில் தலித்துகள் வெறும் 30 சதவீதம் மட்டுமே. இந்த நிலையில்  தலித் மக்கள் தொகை சதவீத அடிப்படையில் பணம் ஒதுக்கப்பட்டால், மீதம் உள்ள 30 சதவீத தலித்துகளுக்கான ஊதியத்திற்கு என்னசெய்வது?

துணைத் திட்டத்தையும்சேர்த்து ஒழித்துக்கட்ட...
மகாத்மாகாந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழான வேலைகளில், ஆந்திராவில் தலித்/பழங்குடியினருக்கான பங்கு 33.38 சதவீதமாகவும், உத்தரப்பிரதேசத்தில் 28.5 சதவீதமாகவும், தெலுங்கானாவில் 40 சதவீதமாகவும் இருக்கிறது. எனவே, வேலைவாய்ப்பில் சாதிப்பிரிவினைக் கொண்டுவந்தால் அது இந்தத் திட்டத்தையே பலவீனப்படுத்திவிடும் என்பதுதெளிவாகத் தெரிகிறது. இதுதான் பாஜக அரசாங்கத்தின் அப்பட்டமான நிகழ்ச்சிநிரலாகும். உண்மையில் துணைத் திட்டம் என்பது பொதுவாக உள்ள திட்டங்களுக்கு அப்பாற்பட்டு, தலித்/பழங்குடியினருக்கு வாய்ப்புகளை அதிகப்படுத்து வதனைக் குறிக்கோளாகக் கொண்டவைகளாகும். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியோ வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தையும், துணைத் திட்டங்களையுமே ஒரேசமயத்தில் ஒழித்துக் கட்டிடும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்.

மோடி அரசாங்கம் அமைந்தவுடனேயே, மகாத்மாகாந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பலவீனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிவிட்டது. ஐமுகூ-1 அரசாங்கம் இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் 4 சதவீதத் தொகை ஒதுக்கியது. ஆனால் பாஜக அரசாங்கமோ 2 சதவீதம் மட்டுமே ஒதுக்கியது. ஐமுகூ அரசாங்கம் ஒதுக்கியது போன்று 4 சதவீதம் ஒதுக்கப்பட்டிருந்தால் ஒதுக்கீட்டுத் தொகை 1,44,000 கோடி ரூபாயாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மோடி அரசாங்கம் ஒதுக்கியதோ 71 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமேயாகும்.

2014இலிருந்தே, பாஜக அரசாங்கம் ஒதுக்கீடுகளைக் குறைக்கும் வேலைகளில், அநேகமாக முன்பிருந்ததைவிட பாதியாகக் குறைக்கும் வேலைகளில் இறங்கியது. ஒதுக்கீடுகள் பெரிய அளவில் குறைக்கப்பட்டதால், மாநில அரசாங்கங்கள் தங்களிடம் பதிவு செய்துள்ள வேலை உத்தரவாத அட்டைகளைப் பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு, பாதி அளவுக்கே வேலைகளைத் தந்துள்ளன. முன்பு இந்த வேலைகளில் இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான வரம்பு 10 சதவீதம் வரை இருந்தது. இப்போது பாஜக அரசாங்கத்தில் அது 40 சதவீத அளவிற்கு அனுமதிக்கப்படுகிறது. இது, ஒப்பந்தக்காரர்கள் மூலமாக அதிக அளவில் எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதற்கு இட்டுச் சென்றிருக்கிறது.

நில வளர்ச்சித் திட்டம்ஓரம்கட்டப்பட்டு...
முன்பெல்லாம் தலித்/பழங்குடியினர், மகாத்மாகாந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தவாதச் சட்டத்தின் ஒரு பகுதியாக, தங்கள் சொந்த நிலங்களிலும் வேலை செய்வதற்கு, அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டார்கள். இது அவர்களை, அவர்களுடைய நிலங்களை வேளாண்மைக்குப் பயன்படுத்துவதற்கு உதவிகரமாக இருந்தது. ஆனால் பாஜக அரசாங்கம் இதுபோன்ற நிலவளர்ச்சித் திட்டங்களை ஓரங்கட்டி வைத்துவிட்டது. பல மாநில அரசாங்கங்கள் இத்திட்டத்தின்மூலம் மக்கள் பயனடையச் செய்வதற்குப் பதிலாக, ஹெலிபேடுகள், பூங்காக்கள் போன்றவைக் கட்டுவதற்கான வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. பாஜக அரசாங்கம் இந்தத் திட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கான அனைத்து  முயற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

கேரளாவும், திரிபுராவும் இடது முன்னணி ஆட்சியின்கீழ் இந்தத்திட்டத்தின்கீழ்  வேலை அளிப்பதில் முன்னணியில் இருந்தன. மற்றபடி அனைத்து மாநிலங்களும் அது பாஜக-வால் ஆட்சி செய்யப்படுவதாக இருந்தாலும் சரி, அல்லது காங்கிரசால் ஆட்சி செய்யப்படுவதாகஇருந்தாலும் சரி, இந்தத்திட்டத்தை நீர்த்துப்போகச்செய்வதற்கான நடவடிக்கைகளையே எடுத்துக்கொண்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தின்கீழ் வேலை அளிப்பதில் ஆந்திராமுன்பு உச்சநிலையில் இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் அதன் செயல்பாடுகள் தத்தளித்துத் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டு ஆந்திராவில் 25.93 கோடி மனித நாட்கள் வேலை அளிக்கப்பட்டது. தெலுங்கானாவில் இது 15.79 கோடியாக இருந்தது. 

உ.பி-யில் வெறும் 10 சதவீத அளவே!
பாஜக ஆளும் மாநிலங்கள் இந்தத்திட்டத்தைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தவே இல்லை. 20 கோடி மக்கள்தொகையைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் இத்திட்டத்தின்கீழான வேலை உத்தரவாத அட்டைதாரர்கள் 2 கோடியே 21 லட்சம் பேர்கள் மட்டுமேயாகும். 3 கோடியே 12 லட்சம் பேர்கள் மட்டுமே தொழிலாளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் சென்ற ஆண்டு 41 கோடி மனிதநாட்களுக்கு வேலை அளிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 39.47 கோடி மனித நாட்களுக்கு வேலை அளிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 3.5 கோடிதலித்துகள் இருக்கிறார்கள். இவர்களில் 65 சதவீதத்தினருக்கு வேலை உத்தரவாத அட்டைகள் அளிக்கப்படவில்லை. உத்தரப்பிரதேசத்தைவிட பாதி அளவே  மக்கள்தொகை உள்ள ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் 3 கோடி தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.கேரளாவின் கிராமப்புறங்களில், ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வயது வந்த ஒவ்வோருவருக்கும் வேலை உத்தரவாத அட்டைகளைப் பெற்றிருக்கிறார்கள். திரிபுராவில் இடதுமுன்னணி ஆட்சி செய்த சமயத்தில், 70 சதவீத மக்கள் வேலை உத்தரவாத அட்டைகளைப் பெற்றிருந்தார்கள், 100 மனிதநாட்கள் வேலைவாய்ப்பும் தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் அளிக்கப்பட்டது.

பட்டியல் சாதிபழங்குடியினர் மட்டுமின்றி...
இப்போது ஒன்றிய அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் வழிகாட்டுதல்களின்படி வேலைகள் மாற்றியமைக்கப்பட்டால், தலித்துகளும் பழங்குடியினரும் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கான துணைத்திட்டங்களின்கீழ் நிதிகள் ஒதுக்கப்படுவது என்ற பெயரில் இப்போது அளிக்கப்பட்டுள்ளதைவிட பாதி அளவுக்கேவருங்காலங்களில் தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் வேலைகள் அளிக்கப்படும். இதன்காரணமாக இவர்கள் மீண்டும், கடந்த காலங்களில் இருந்ததைப்போன்று நிலப்பிரபுக்களின்கீழ் அடிமைச் சேவகம் செய்வதற்குத் தள்ளப்படும் நிலை உருவாகும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும்கூட பாதிப்புக்கு உள்ளாவார்கள். இப்போது நாடு முழுவதும் சுமார்  35 முதல் 40 சதவீத அளவிற்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலைகள் அளிக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் இவர்களின் பங்கேற்பும் குறைக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

பணியிடங்கள் அனைத்திலும், சாதிகளின் பெயர்களில் குழுக்கள் அமைக்கப்பட்டு, சாதிய உணர்வுகள் வெறித்தனமாகக் கிளப்பி விடப்படுகின்றன. இயற்கையாகவே, நிலப்பிரபுக்கள் இந்தச் சூழ்நிலைமையை நன்கு பயன்படுத்திக்கொண்டு, அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு மனச்சோர்வுக்கு ஆளான மக்களைத் தங்களின்கீழ் அடிமைச் சேவகம் செய்திட வைத்திடுவார்கள். இந்த நிலப்பிரபுத்துவ சக்திகள் மிகவும் கடினமான வேலைகளை, குறைந்த ஊதியத்தில் தலித்துகள்/பழங்குடியினரிடம் கொடுப்பது என்பதை உத்தரவாதப்படுத்தி விடுவார்கள். இதுபோன்ற கபடத்தனமான போக்குகள் ஏற்கனவே ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் துவங்கிவிட்டன. பல்வேறு சமூகக் குழுக்களின் மத்தியில் பல்வேறு ஊதியங்கள் அளிக்கப்படுவதைக் காண முடிகிறது.

குறைந்த சம்பளமும் அதிகமான வேலையும்...
ஒன்றிய அரசின் அறிவுரைகள் அமல்படுத்தப்பட்டால், வெவ்வேறு சாதியினருக்கும் வெவ்வேறு ஊதியங்கள் அளிக்கப்படும். நம் நாடு இதுபோன்று மிகக் கொடூரமான கடந்த காலத்தைப் பெற்ற ஒரு நாடாக இருந்ததுதான். தலித்துகளுக்கு இதர ஆதிக்க சாதியினர் பெற்ற ஊதியத்தைவிட மிகவும் குறைவான ஊதியம் வழங்கப்பட்டு வேலை வாங்கப்பட்ட ஒரு நாடாகத்தான் முன்பு நம் நாடு இருந்து வந்தது. இதுபோன்ற நிலைமை எதிர்காலத்தில் மீண்டும் உருவாகலாம்.இப்போது 50 சதவீத வேலைகளைப் பெண்கள்செய்துகொண்டிருக்கிறார்கள். ஒன்றிய அரசாங்கத்தின்அறிவுரைகளின்படி சாதிப்பிரிவினை கொண்டுவரப்பட்டால், பெண்களும் மிகவும் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாவார்கள். தொழிலாளர்களின் மத்தியில் இப்போதிருந்துவரும் ஒற்றுமைக்கு நிச்சயமாக ஊறு விளைந்திடும். ஒன்றிய அரசின் இத்தகு யோசனைகளை அதுநிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள், மின்சார (திருத்தச்) சட்டமுன்வடிவு, தொழிலாளர் (விரோத) சட்டங்களுடன் இணைத்துப் பார்த்தோமானால் இத்தகு முடிவின்கீழ் உள்ள உண்மை சொரூபத்தை நன்கு பார்க்க முடியும்.  

இந்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுதும் நடைபெற்றுவரும் போராட்டங்களுடன், மகாத்மாகாந்தி தேசியக்கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் சாதிப் பிரிவினை ஏற்படுத்துவதற்கு எதிரான போராட்டத்தையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். தொழிலாளர்களையும், விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் ஒற்றுமைப் படுத்திட வேண்டும். கடந்த காலங்களில் மகாத்மாகாந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டம் நாட்டில் பட்டினிச் சாவுகள் பலவற்றைத் தடுத்திருக்கிறது, வேளாண்மையில் பல இடங்களில் ஊதிய உயர்வுக்கு இட்டுச்சென்றிருக்கிறது. இதனைக் கட்டிக்காத்திட வேண்டும்.

கட்டுரையாளர் : பி.வெங்கட், பொதுச் செயலாளர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்

தமிழில் : ச.வீரமணி 

;