articles

சக்கரதார் புத்தா, அனுராதா டி, பேரா.ராஜேந்திரன் நாராயணன்

ஜனவரி 1,2024  அன்று மோடி தலைமை யிலான ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஆதார் அடிப்படை யிலான ஊதிய பட்டுவாடா (Adhar Based Payment System -ABPS) முறையை கட்டாயமாக்கியது.

இந்த புதிய முறையை கட்டாயமாக்கக் கூடாது என பலமுறை தொழிலாளர் அமைப்புகளில் இருந்து வந்த வேண்டுகோள்கள் யாவும் புறக்கணிக்கப்பட்டன. ஐந்து முறை காலக்கெடுவை நீடித்த மோடி அரசு தற்போது அதை கட்டாயமாக்கிவிட்டது.

ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பயனாளி களுக்கு இரண்டு முறைகளில் ஊதியம் வழங்கப்படு கிறது. ஒன்று வங்கிக் கணக்கின் அடிப்படையில். மற்றொன்று ஏபிபிஎஸ் (ABPS). வங்கிக் கணக்கு முறையில் தொழிலாளரின் பெயர், வங்கி கணக்கு எண், மற்றும் ஐஎப்எஸ் (IFS) குறியீடு ஆகியவற்றின் மூலம் ஊதியம் பரிமாற்றம் செய்யப்படும். ஏபிபிஎஸ் (ABPS)  மூலம் என்றால் ஒரு சில முன் தேவைகள் நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும்.

ஆதாருடன் இணைப்பது  எத்தனை கடினமானது!
முதலில் ஒருவரின் ஆதார் எண்ணை அவருடைய வேலை அட்டையுடன் இணைக்க வேண்டும். அதாவது ஆதார் விவரங்களுடன் வேலை அட்டை விவரங்கள் ஒத்துப் போக வேண்டும். அதில் உள்ள எழுத்துக்கள்,  பாலினம் உள்ளிட்ட எல்லா விவரங்களும் ஆதார் விவரங்களுடன் பொருந்தினால்  மட்டுமே இது முழுமை அடையும்.

இரண்டாவதாக, வங்கிக் கணக்கு ஆதார் அட்டை யுடன் இணைக்கப்பட வேண்டும்.

மூன்றாவதாக, ஒவ்வொரு ஆதார் எண்ணும் உரிய வங்கிக் கணக்கின்  மூலம் ஏபிபிஎஸ் -இன் தீர்வு மையமாக செயல்படும். ‘நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் ‘மென்பொருள்’ பின் தொடர்தல் (mapping) மூலம் கண்காணிக் கப்படுகிறது.

ஒருவருடைய ஆதார் எண் நிதி பரிவர்த்தனையின் முகவரியாக மாற்றப்படுகிறது. ஊதியத்  தொகை இறுதியாக வங்கிக் கணக்கை சென்று அடைகிறது. இந்த இணைப்புக் கண்ணிகளில் ஏதேனும் குளறு படிகள் இருந்தால் அவர்களுக்கு வேலையும் மறுக்கப் படுகிறது. ஊதியம் வழங்கப்படுவதில்லை. அல்லது வங்கிக் கணக்கில்  தொகை வரவு வைக்கப்படாது. விளைவு? பல நூற்றுக்கணக்கான ரூபாய் வருமா னத்தை இழந்து பயனாளிகள்  வீதியில் நிற்க வேண்டும்.

அரசின் போலி  வாதங்கள்!
வேலை அட்டை குளறுபடிகள், போலி அட்டை கள், ஊதியத்தில் காலதாமதம் தவிர்ப்பு, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட முடியாமல் நிராகரிப்பு (Rejection) ஆகியவை ஏபிபிஎஸ் (ABPS)  திட்டத்தின் மூலம் அகற்றப்படும் என அரசு இந்த திட்டத்திற்கு சப்பைக் கட்டு கட்டுகிறது. போலி அட்டைகள் தவிர பிற அம்சங்களில் அரசின் இந்த வாதங்களை நாம் ஏற்க முடியாது.

வேலை அட்டைகளை நீக்குவதில் அதிகாரிகள் பின்பற்றும் நடைமுறைகள் மற்றும் அத்தகைய செயல்முறையின் ஆதாயங்களின் சரியான அறிவியல்பூர்வமான மதிப்பீடுகள் குறித்து நம்பத் தகுந்த ஆய்வுகள், தணிக்கைகள் எதுவும் இதுவரை ஒன்றிய அரசாங்கத்தினால் நடத்தப்படவில்லை.

மோடி அரசின் வறட்டு கவுரவம்!
எக்கனாமிக் அன்டு பொலிட்டிக்கல் வீக்லி இதழில் (Economic and Political Weekly)சமீபத்தில் அஞ்சோர் பாஸ்கர்,அர்பிதா சர்க்கார் மற்றும் பிரீதி சிங் ஆகியோர் இரண்டு கட்டுரைகள் எழுதி உள்ள னர். ஆதார் அட்டையுடன் வேலை அட்டைகளை இணைப்பதற்கான கண்மூடித்தனமான இலக்கு களை 100% நிறைவேற்ற வேண்டும் என்ற ஒன்றிய அரசின் பிடிவாதம் காரணமாக வேலை அட்டைகள் (Job Cards) எப்படியெல்லாம் நீக்கப்படுகின்றன என்பதை இவை விளக்குகின்றன.

அது மேலும் விவரிக்கிறது:
“கிராமப்புறங்களில் செயலாற்றும் பல்வேறு நிர்வா கப் பிரிவுகள் இந்த ஆவணங்களை உருவாக்குவதால் எழுத்துப் பிழை என்பது தவிர்க்க முடியவில்லை. மக்கள் தொகை விவரங்களை உள்ளூர் அதிகாரிக ளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும்; முக  அடையாளங்கள், விரல் ரேகைகள் போன்றவை மட்டுமே  சரியாக பதிவு செய்ய  முடியும் என்று இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் (UIDAI) சான்றளித்துள்ளது”.

வெற்று மிகைப்படுத்தல்?
ஆதார் இணைப்பு இலக்குகளை நிறைவேற்ற, இப்படி பல்வேறு காரணங்களுக்காக வேலை அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாக்குமூலம் அளித்ததையும் அந்த கட்டு ரையில் பதிவு செய்துள்ளனர். அதேபோல ஆதார் இணைப்பின் மூலமாக பெற்ற நன்மைகள்   மிகவும் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளன என்றும் அதற் கான ஆதாரங்களையும் முன்வைக்கின்றனர்.

ஏழு கோடி தொழிலாளர்களின் வயிற்றில் அடித்த மோடி அரசு!
2022-23-ஆம் ஆண்டில் மட்டும் வேலை அட்டைகள் நீக்கம் 247% அதிகரித்துள்ளது என்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஊரக வளர்ச்சி அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இதன்படி பார்த்தால் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 7 கோடி பயனாளிகள் இந்த திட்டத்திலிருந்து வேண்டுமென்றே வெளியேற்றப் பட்டுள்ளனர். 11.1.2024 அன்று வெளியான அரசின் சொந்த தரவுகளின் படி 25.6 கோடி பதிவு செய்யப் பட்ட மொத்த தொழிலாளர்களில்  16.9 கோடி பேர் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற்றனர். மீத முள்ள சுமார் 8.7 கோடி பேர் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். ஆதார் இணைப்பு கட்டாயப்படுத்தப்படாமல்  இருந்தால் எல்லோருமே பயனடைந்து இருப்பார்கள். ஒன்றிய அரசே இதற்கு காரணம்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஏபிபிஎஸ் முறையை கட்டாயமாக்குவதை நியாயப்படுத்தும் வகையில் 1.1.2024 அன்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் செய்திக் குறிப்பு ஒன்றையும் வெளி யிட்டிருந்தது. ஆனாலும் நம்பகமான ஆதாரங்கள் எதையும் அதனுடன் வெளியிடவில்லை. வங்கிக் கணக்கு மூலம் ஊதியம் பெறும் முறையுடன் ஒப்பிடும் பொழுது இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு 3 சதவீதம் நன்மை கிடைத்துள்ளது என இந்த திட்டத்தை பற்றி லிப்டெக் (Lib Tech) என்ற பொது ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை அளித்ததை மட்டுமே அரசு அந்த செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டியிருந்தது.

தவறான விளக்கம்!
ஊரக வளர்ச்சி அமைச்சகம், லிப் டெக்கின் ஆவணங்களை கவனத்தில் எடுத்துக் கொண் டுள்ளதை வரவேற்கலாம். ஆனால் அதே நேரத்தில் அது கண்டுபிடிப்புகளை தவறாக சித்தரிக்கிறது. மேலும் ஏபிபிஎஸ் (ABPS) முறையை அது அங்கீ கரிக்கிறது என்று கூறுவது உண்மைக்குப் புறம்பா னது. ஏன்?

வங்கிக் கணக்கு மற்றும் ஏபிபிஎஸ்  முறையின் கீழ் நடத்தப்படும் 3.2  கோடி ஊதிய பரிவர்த்தனை கணக்குக ளை மட்டும் அது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. ஒருவேளை அது எல்லா பரிவர்த்தனைகளையும்  ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருந்தால், அதன் மூலம் இரண்டு முறைகளில் எது ஆதாயம் தருவது என்று நிரூபித்திருந்தால்  அதை ஏற்கலாம். எனவே இந்த வித்தியாசம், புள்ளியல் அறிவியல் கோட்பாடுகள் ரீதியாக குறிப்பிடத்தக்கதாக இருந்தால் மட்டுமே ஊதி யப் பட்டுவாடா முறையில் ஒன்றை விட மற்றொன்று திறமையானது எனக் கூற முடியும். வங்கிக் கணக்கு முறையை  விட ஏபிபிஎஸ் (ABPS) முறையில் நிராகரிப்பு விகிதங்கள் குறைவாக இருப்பதை அரசு சாதகம் எனக் கூறியுள்ளது. ஆனால் இதிலும் இரண்டு முறைகளுக்கும் இடையே நிராகரிப்புகளில் எவ்வித வித்தியாசமும் இல்லை என்று அந்த அறிக்கை கூறு வதாக குறிப்பிடும் அரசின் கூற்றை கட்டுரையாளர்கள் மறுத்துள்ளனர். சுருக்கமாக  கூறுவதென்றால், ஏபிபிஎஸ் (ABPS)  மூலம் ஊதியம் வழங்குவதில் அதிக நன்மை உள்ளது என  அரசின் தவறான கூற்றுக்களை எக்கனாமிக் பொலிட்டிக்கல் வீக்லி ஆய்வு முற்றாக மறுக்கிறது.

வங்கிக் கணக்கு முறையோ, ஏபிபிஎஸ் முறையோ  இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்றா லும் கூட ஏபிபிஎஸ் புதிய திட்டத்தில் சிக்கல்களை  தீர்ப்பதில் உள்ள சிரமங்கள் அதிகம். எனவே வங்கிக் கணக்கு மூலம் ஊதியத்தை பயனாளிகளுக்கு வழங்கும் முறையே தொடரவேண்டும் என  நாங்கள் அழுத்தமாக பரிந்துரைக்கிறோம்.

அதே நேரத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு போதுமான நிதியை ஒதுக்குவது மட்டுமே சரியான நேரத்தில் அனைத்து பயனாளிகளுக்கு ஊதியம் வழங்குவதை உறுதிப் படுத்தும் ஒரே வழியாகும் என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

கட்டுரையாளர்கள்: சக்கரதார் புத்தா மற்றும் அனுராதா டி. லிப்டெக் இந்தியா ஆய்வாளர்கள் மற்றும் பேரா.ராஜேந்திரன் நாராயணன் 
அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் 
தி இந்து (ஆங்கிலம்) 29/1/24, 
தமிழில் : கடலூர் சுகுமாரன்