articles

img

போராட்டங்கள் தான் வெற்றியின் ரகசியம் - ஆர்.வேல்முருகன்

50 ஆண்டுகளுக்கு முன்பு டி.பி.ஜெயின் அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்லூரியாக  தொடங்கப்பட்டது. 7 இளங்கலை பாடப்பிரிவுகளும், 3 முதுநிலை பாடப்பிரிவுகளும் இந்த கல்லூரியில் உள்ளன. வேளச்சேரி, சோழிங்கநல்லூர் தொகுதி களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தக் கல்லூரியில் படித்து வந்தனர். குறிப்பாக, நீலாங்கரை, கல்லு குட்டை, பெருங்குடி, பள்ளிக்கரணை பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பிள்ளை கள் பெரும்பாலும் இந்த கல்லூரியைசார்ந்திருந்தனர். 1996 ஆம் ஆண்டு தமிழக அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுயநிதிப் பாடப்பிரிவுகளை (செல்ப்-பைனான்ஸ்) தொடங்க சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, அனைத்து அரசு உதவிபெறும் கல்லூரிகளும் காலை, மாலை நேரங்களில் சுயநிதிப் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. இந்தப் பாடப் பிரிவுகளில் சேரும் மாணவர்களிடம் அரசு பாடப்பிரிவு மாணவர்களை விட, பல மடங்கு கூடுதல் கட்டணம், நன்கொடைகளை வசூலிக்கின்றனர்.

இந்த சட்டத்தை பயன்படுத்தி டி.பி.ஜெயின் கல்லூரி நிர்வாகம் சுயநிதி பாடப்பிரிவை தொடங்கி யது. சுயநிதிப் பிரிவில் 11 பாடங்களை நடத்தி வருகிறது. அரசு உதவி பெறும் பிரிவு மாணவர்களிடம் 850 ரூபாய் கல்வி கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், சுயநிதிப் பிரிவில் 42 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர, நன்கொடை என கணிசமான தொகை வசூலிக்கின்றனர். இவ்வாறு, பணம் குவிக்க தொடங்கிய கல்லூரி நிர்வாகம், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை முடக்கி, முழுமையாக தனியார் கல்லூரியாக மாற்றும் சூழ்ச்சியில் ஈடுபட்டது. கொரோனா காலத்தை பயன்படுத்தி 2020-2021, 2021-2022 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை வழங்கவில்லை; மாணவர் சேர்க்கையையும் நடத்த வில்லை. அதேசமயம், சுயநிதிப் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை நடத்தி வந்தது. அதாவது, அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை முடக்கி, மாணவர்களை சுயநிதிப் பாடப்பிரிவில் மடைமாற்றும் செய்தது. ஏழை, எளிய மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுக்கும் வகையில் செயல்பட்டு வந்தது.

50 ஆண்டுகளுக்கு முன் கல்லூரிக்கு தேவை யான நிலத்தை அரசு தானமாக வழங்கியது. கல்லூ ரிக்கு தேவையான கட்டுமானங்கள் முழுவதும் யுஜிசி நிதியில் கட்டப்பட்டது. அரசிடம் அனைத்து உதவி களையும் பெற்றுக் கொண்டு, கல்லூரி நிர்வாகம் முழுமையாக கல்வி வியாபாரம் செய்கிறது. அங்குள்ள விளையாட்டு மைதானம், அரங்கங்கள், கட்டி டங்களை வாடகைக்கு விட்டு, பணம் சம்பாதிக்கின்ற னர். சட்டத்திற்கு புறம்பான இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆட்சேபணை தெரிவித்த 12 பேராசிரியர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. அந்தப் பணியிடங்களை நிரப்பாமல் உள்ளது.

உயர்கல்வி அமைச்சருக்கு சிபிஎம் கடிதம்

நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்ட பேராசிரியர்கள், கல்லூரியை பாதுகாக்கும் நோக்கில் போராட்டங்களை தொடர்ந்தனர். அரசியல் இயக்கங்களின் ஆதரவு களை கோரினர். இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே 24, 25 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநிலக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த பிரச்சனையின் தீவிரத்தை விளக்கி ஜூன் 4 அன்று உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதினார்.  இதன் தொடர்ச்சியாக, ஜூன் 17 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், வடசென்னை மாவட்டச் செயலாளர் சுந்தர்ராஜன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர்  க.பொன்முடியிடம் பேசியிருப்பதாக முதலமைச்சர் அப்போது தெரிவித்தார். அப்போது, கே.பால கிருஷ்ணன், உயர்கல்வித்துறை அமைச்சர் பேசியுள்ளார். இருப்பினும், நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதேசமயம் மக்கள் மன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் சோழிங்கநல்லூர் பகுதிக்குழு, ‘டி.பி.ஜெயின் கல்லூரி பாதுகாப்புக்குழு’வை உருவாக்கியது. இதில், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சிஐடியு, யுனைட், சோழிங்க நல்லூர் தொகுதி குடியிருப்போர் சங்கங்களின் பேர மைப்பு உள்ளிட்ட அமைப்புகள் ஒருங்கிணைக்கப் பட்டு, ஜூன் 27 முதல் போராட்ட இயக்கங்கள் முன்னெடுக்கப்பட்டன. பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகிநகரில் உள்ள சுமார் 60 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பயிலும் இடமாக டி.பி.ஜெயின் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை, தனியார் மயமாக்க அனுமதிக்க முடியாது. டி.பி.ஜெயின்  கல்லூரி மீது அரசு நடவடிக்கை எடுக்காவிடில், பிற  உதவி பெறும் கல்லூரிகளும் முறைகேட்டில் ஈடுபடும்.  எனவே, அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளில் நடப்பாண்டு முதல் மாணவர்  சேர்க்கையை நடத்த வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். கல்லூரிக்கு தனி அலுவலர் நியமிப்பதோடு, பணி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தியது.

ஜெயின் கல்லூரிகளில் ஆர்எஸ்எஸ் முகாம்

“தமிழகத்தில் மத கலவரத்தை தூண்ட ஆர்எஸ்எஸ் ஷாகாக்களை நடத்தி வருகிறது. அரசு உதவி  பெறும் டி.பி.ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகங்களில் ஆர்எஸ்எஸ் ஷாகா   நடத்த அரசு எப்படி அனுமதிக்கிறது? ஆர்எஸ்எஸ்-க்கு அரசு ஸ்பான்சர் செய்கிறதா?” என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதேகாலக்கட்டத்தில் இந்திய மாணவர் சங்கம்  தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது. உயர்கல்வித்துறை செயலாளரிடம் நேரடியாக மனு அளித்தது. கல்லூரி நிர்வாகத்தின் மோசடியை  அம்பலப்படுத்தி, மாணவர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி, பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத் தலைவர்களை காவல்துறை மிரட்டியது. அதனையும் மீறி மாணவர் சங்கத்தினர் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

கல்லூரியில் சேர தயாராக உள்ள மாணவர்கள் இணையத்திலிருந்து விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்ய முடியாமல் இருந்தனர். எனவே,  பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் சென்று, கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வழங்க நடவடிக்கை கோரி கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநரிடமும் மனு கொடுத்தனர். கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து மாணவர் சங்கம் நடத்திய கையெழுத்து இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இவ்வளவு போராட்டங்கள் நடந்த பிறகும் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத சூழலில், கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி, இயக்குநரிடம் மனு அளித்தனர்.  இத்தகைய தொடர் தலையீடு, போராட்டங்கள் காரணமாக இந்த போராட்டத்தில் ஒருபடி முன்னேற்றம்  ஏற்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆகஸ்ட் 3 அன்று தலைமை செயலகத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, இலங்கையில் துயருறும் மக்களுக்கு உதவிட 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வழங்கினர். அச்சமயம்,  டி.பி.ஜெயின் கல்லூரியை விசாரிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள தகவலை முதலமைச்சர் தெரி வித்துள்ளார். மக்களுக்கான போராட்டங்கள் தோற்காது என்பதாகவே அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.

கட்டுரையாளர் :  சிபிஐ(எம்) தென் சென்னை மாவட்டச் செயலாளர்.

;