1960 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா தனி மாநில மாக உருவாக்கப்பட்ட பின் இதுவரை மகாராஷ்டிரா கண்டிராத மோசமான ஆட்சியை தற்போதைய ஷிண்டே-பாஜக தலைமை யிலான மாநில அரசு நடத்தி வருகிறது. மாநில சட்டத்தை மீறுவதும் எளிய மற்றும் நலிந்த மக்களை குறிவைத்து தாக் குவதும் அதன் அடையாளமாக இருந்து வருகிறது. மகாராஷ்டிராவில் தலித் மக்கள் மீதான தாக்குதல் நடந்ததாகவோ கொல்லப்பட்டதாகவோ செய்திகள் பெரும்பாலும் வெளியே வருவதில்லை. ஆதிக்க சாதி யினரும் இந்துத்துவா சக்திகளும் தங்கள் விருப்பப்படி மக்களை பயமுறுத்த அனுமதிக்கப்படும் துணிச்சல் அதை இன்னும் பயங்கரமாக்குகிறது.
கத்தி வாள்களுடன் ஊர்வலம்
சீக்கியர்களால் போற்றப்படும் நகரமான நான்டெட் இரு முன்னாள் காங்கிரஸ் முதல்வர்களின் சொந்த ஊர். அதன் அருகே உள்ள கிராமத்தில் குரு கோவிந்த் சிங்கின் நினைவாக கட்டப்பட்ட குருத்வாரா உள்ளது. அதன் அருகில் புத்த மதத்தை பின்பற்றும் ஒரு இளைஞன் கொடூர மாக கொல்லப்பட்ட சம்பவத்தில் இது தெளிவாகத் தெரிகிறது. கடந்த ஜூன் 1 அன்று நடத்தப்பட்ட ஒரு உயர்சாதி (சவர்ணா) குடும்பத்தின் திருமண ஊர்வலம் கொடூர வெறுப்பு மற்றும் ரத்தக்காட்சியின் சின்னமாக மாறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இத்தகைய குடும்ப நிகழ்வுகள் உயர் சாதியினரின் செல்வம் மற்றும் அதி காரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகளாக மாறி வருகின் றன. இந்தக் குறிப்பிட்ட திருமண ஊர்வலம் நடந்த போது உயர்சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் கத்தி மற்றும் நீண்ட வாள்களை ஏந்தி தங்களது ஆதிக்கத்தையும் ஆண வத்தையும் வெளிப்படுத்தினர்.இது காவல்துறையின் முன்னிலையிலேயே அரங்கேறியுள்ளது. எந்தவொரு திட்டவட்டமான வாழ்வாதாரமும் இல்லாத நிலையிலும், இந்த கொடிய ஆயுதங்கள் உள்ளூர் சட்டவிரோத பட்டறை களில் இருந்து வாங்கப்பட்டுள்ளன. மாலை நேரம் அந்த ஊர்வலம் கிராமத்தின் பிரதான வீதி வழியாக சென்றபோது, தலித் இளைஞரான அக்சய் பலேராவ் (25), தனது தாய்க்கு சமைப்பதற்கான பொ ருட்கள் வாங்குவதற்காக தன் சகோதரருடன் மளிகைக் கடைக்குள் நுழைந்தபோது அந்த சோகச்சம்பவம் நடந்தது.
திரைப்படக் காட்சி போல்...
மஞ்சுளேயின் பிரசித்திபெற்ற “சாய்ராத்” திரைப் படக்காட்சியில் வருவதை போல் உயர்சாதி இளைஞன், ஒருவித கட்டுப்பாடற்ற முறையில் நடனமாடிக் கொண்டே அந்த தலித் சகோதரர்கள் மீது கொடூரமான தாக்குதலைத் தொடுத்தனர். அவர்களின் உயர் சாதி ஆதிக்கத்தையும் ஆணவத்தையும் காட்ட வைத்திருந்த வாள்கள் மற்றும் கத்திகள் அவற்றின் நோக்கத்திற்காக பயன்படுத்தப் பட்டன. அக்சய் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு, கொல்லப் பட்டார். பின் குற்றவாளிகள் கொலையுடன் நிற்கவில்லை; அவர்களின் சாதி அடையாளத்தின் காரணமாக அவரை இழிவுபடுத்தவும் முயன்றனர். அவரை மேலும் அவமா னத்திற்கு உள்ளாக்கினர்.ஆதிக்க சாதியினரின் கால்கள் தலித் இளைஞரின் கழுத்தை நசுக்கியது “என்னால் மூச்சு விட முடியவில்லை” என்று சொல்லக்கூட அவருக்கு வாய்ப்பு இல்லை. அக்சய்யின் சகோதரர் கையில் ஆழ மான காயத்துடன் காப்பாற்றப்பட்டார். அக்சய்யின் குடும்பத்தினர் தினக் கூலித் தொழிலா ளர்கள் என்பதே ஆதிக்க சாதி இளைஞர்களால் அவர் கொல்லப்பட்டதற்கு காரணம்.அவர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை கிராமத்தின் முக்கிய வீதி வழியாக ஊர்வல மாக எடுத்துச் செல்ல முயன்றதாகும். அக்கிராமத்தில் உள்ள உயர்சாதியினர் கொடுத்த அழுத்தத்தின் காரண மாகவும், காவல்துறையினரும் அந்த ஊர்வலத்தை அனு மதிக்க விரும்பவில்லை. மேலும் அம்பேத்கர் பிறந்த நாள் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுத்தன.
சிபிஎம் சார்பில் குடும்ப நிதி
இந்த கொடூரச்சம்பவம் மகாராஷ்டிரா முழுவதும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. உடனடியாக நான்டெட் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும், அக்சய் குடும் பத்திற்கு குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கவும் கோரிக்கை வைத்தது. இந்த கொலைச் சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, துயரத்தில் இருக்கும் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு முடிவு செய்து, கடந்த ஜூன் மாதம் மாநிலச் செயற் குழு உறுப்பினர் விஜய் கபானே தலைமையில், நான்டெட் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான கட்சித் தோழர்கள், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்களான உஜ்வாலா படல்வார், கங்காதர் கெய்க்வாட் ஆகியோருடன் சென்று, மாநிலக் குழு செயலாளர் உதய் நர்கர், அந்த குடும் பத்தைச் சந்தித்து, அக்சய்யின் தாய் வந்தனாபாயிடம் காசோலையை வழங்கினார். தலித் விடுதலை முன்னணி (DSMM) தலைவர்கள் ஷைலேந்திர காம்ப்ளே, சுபோத் மோர் ஆகியோரும் அக்குடும்பத்தை சந்தித்தனர். இந்த வழக்கில் கட்சியின் முன் முயற்சிக்கு பல்வேறு தலித் மற்றும் முற்போக்கு அமைப்புக்கள் பரவலாக பாராட்டுத்தெரிவித்தன. மகாராஷ்டிராவில் இது மட்டும் அல்ல, மும்பையில் உள்ள மாநில அரசின் விடுதியில் தலித் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படு கொலை செய்யப்பட்டார். மற்றும் மும்பை அருகே உள்ள ஜவுளி நகரமான கல்யாணில் தலித் இளைஞரை பொது மக்கள் சரமாரியாக தாக்கினர்.மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை மிக மோசமாக சரிந்துள்ளதற்கு, மாநில உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸே காரணம்.
ஆபத்து மிக்க வகுப்புவாத சூழ்நிலை
ஒரு அரசியல் சதி நிகழ்த்தி ஷிண்டே-பாஜக அர சாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியான வகுப்பு வாத தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ஆளும் கூட்டணி யின் மந்தமான செயல்பாட்டின் காரணமாக மக்களின் நம்பிக்கையை பெறத் தவறிவிட்டதால், ‘லவ் ஜிஹாத்’, பிரிவினைவாத மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்க ளை வைத்து வெளிப்படையாகத் மக்களைத் தூண்டிவிட்டு அவர்களை தவறாகத் திரட்டி வருகின்றன. இதை மையப் படுத்தி இந்துத்துவ அமைப்புகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட பேரணிகளை முக்கிய நகரங்களில் நடத்தியுள்ளன. இந்த அணிதிரட்டல்கள் மூலம் வகுப்புவாத கல வரத்தை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ் இன் பிரச்சாரங்களை கண்டு மாநில அரசு கண்ணை மூடிக்கொண்டு இருக்கி றது. முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான வன் முறையை வெளிப்படையாக நடத்திடும் இந்த பேரணி களை ஏற்பாடு செய்தவர்கள் மீது காவல்துறை ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை. விதர்பாவின் அகோலா முதல் அஹமத்நகர் (சமீபத் தில் அஹில்யாதேவி ஹோல்கர் நகர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது) மற்றும் மேற்கு மகாராஷ்டிரா வில் உள்ள கோலாப்பூர் வரை மாநிலம் முழுவதிலும் இருக்கும் முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மாநில அரசு வேண்டுமென்றே ஊர்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் வகுப்புவாதத் தீயை மூட்ட முயல்கிறது, வெளிப்படையாகவும் அப்பட்டமாகவும் முஸ்லிம் சமூகத்தை குறிவைக்கிறது.
சாகு மகாராஜ் பாரம்பரியத்திற்கு எதிராக...
2023 ஜனவரி 1 அன்று, மன்னரும் சீர்திருத்தவாதி யுமான சாகு மகாராஜின் முற்போக்கு பாரம்பரியம் மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தின் பாரம்பரியத்தைப் பெரு மைப்படுத்தும் நகரமான கோலாப்பூரில் இத்தகைய இந்துத்துவா அணி திரட்டல்கள் செய்யப்பட்டன. இந்த இந்துத்துவா பிரச்சாரத்தை தொடர்ந்து பெரும் விளைவு களை சந்திக்க நேரிடும் என்று சிபிஐ(எம்) மற்றும் இடது சாரி கட்சிகள் எச்சரித்தன. ஆயினும் மாவட்ட நிர்வாகம் இந்த வன்முறை கும்பலை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என இந்த சம்பவங்களில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. ஒரு பிரியாணி உணவகம் அதன் சுவரில் ஔரங்க சீப்பின் உருவப்படத்தைக் வைத்திருந்ததாகக் கூறி இந்துத் துவ அமைப்புகளின் நிர்ப்பந்தத்தால் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உண்மையில் அது 1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியில் டெல்லி சிம்மா சனத்தில் அமரவைக்கப்பட்ட மன்னர் பகதூர்வின் உரு வப்படம். இச் சம்பவத்தை காவல்துறை முறையாக கவனிக்காமல் அலட்சியப்படுத்தியது. காவல்துறையின் இந்த அலட்சியத்தின் காரணமாக நகரத்தில் உள்ள உழைக்கும் மக்கள் பெரும் விலை கொடுக்க வேண்டி யதாகி விட்டது. சிவாஜியின் முடிசூட்டு நாளாக இந்து நாட்காட்டிக ளில் குறிக்கப்படும் ஜூன் 6 அன்று, பதினேழு வயது முஸ்லீம் சிறுவன் ஒருவன் ஔரங்கசீப் மற்றும் திப்பு சுல்தானின் படங்களை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். அதை காட்டி சில இந்துத்துவா தீவிரவா திகள் அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். காவல் துறையும் சிறுவனை கைது செய்தது. இந்துத்துவா ரவுடிகள் அந்த நிலைமையை மேலும் மோசமாக்க, தன் தாய் சம்மதத்துடன்,முஸ்லிம் இளைஞருடன் வசித்து வந்த இந்து பெண் ஒருவரின் இரண்டு வருடத்திற்கு முந்தைய கதையை, தோண்டி எடுத்து, ‘லவ் ஜிஹாத்’ வழக்காக முன்வைத்தனர்.காவல் துறையும் அவர்களது பொய்யை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு அந்த முஸ்லிம் இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
வெளியூர் ஆட்களின் மூலம் தாக்குதல்
மறுதினம் ஜூன் 7 அன்று இந்துத்துவா அமைப்பினர் பந்த் நடத்த அழைப்பு விடுத்து சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்ட இடத்தில் சுமார் 1,500 இளைஞர்களைக் கொண்ட கும்பலை கூட்டியது. அதில் பெரும்பாலானோர் அந்த நகரத்தை பற்றி தெரியாதவர்கள் என்பது முஸ்லிம் கள் வாழும் பகுதி எங்கே என்று அவர்கள் விசாரித்தன் மூலம் இது வெளிப்படையாகத் தெரிந்தது. அதாவது நகருக்கு வெளியில் இருந்தும் பிற மாவட்டங்களிலி ருந்தும் அந்த பந்த்திற்கு ஆட்கள் அழைத்து வரப்பட்ட விசயம், குற்றம் சாட்டப்பட்ட போது வெளிவந்தது. கலவரம் தூண்டப்பட்ட பின் அந்த கும்பல் கட்டுக் கடங்காமல் சென்றது, பந்த் நடத்த அழைப்பு விடுத்த தலைவர்கள் அதன் பின் காணாமல் போனார்கள்! முஸ்லிம்களுக்குச் சொந்தமான சிறு கடைகள், தெரு வோர வியாபாரிகள் மற்றும் வீடுகள் தேர்ந்தெடுக்கப் பட்டு குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன. வீடுகள் மீது எறிவதற்காக வெளியில் இருந்து கற்கள் கொண்டுவரப் பட்டுள்ளன. கலவரம் நடந்த மறுநாள் இடதுசாரிக் கட்சிக ளின் பிரதிநிதிகள் அப்பகுதிக்குச் சென்றபோது, கலவரம் நடந்த அன்று காலையில் திடீரென பல வீடுகளில் காவிக்கொடிகள் ஏற்றப்பட்டதாக அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது தாக்குதலில் இருந்து காப்பாற்றப்பட வேண்டியவர்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்துவிட்டு, முஸ்லீம்களின் வீடுகள் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டு தாக்கு தல் நடத்தப்பட்டுள்ளது.
எதுவும் செய்யாத காவல்துறை
இதன் மூலம் இவ்வன்முறை முன்கூட்டியே திட்ட மிட்டு நடத்தப்பட்டது தெரியவருகிறது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதை மீறி திரண்டி ருந்த அந்த மதவெறி கூட்டத்தை கலைக்க காவல்துறை எதுவும் செய்யவில்லை. சாகு மகாராஜ் முயற்சியால் பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்ட மத நல்லிணக்கத்தை இந்தச் சம்பவம், சீர் குலைத்தது என்பதை அந்த சுற்றுப்பயணம் காட்டுகிறது. அவர் தலைவராக இருந்த முஸ்லீம் சமூகத்தால் நடத்தப்பட்டு வரும் பள்ளியின் தங்கும் விடுதியும் தாக்கப்பட்டதால் மக்கள் மிகவும் கலக்கமடைந்தனர்.
சாகு மகாராஜின் வழித்தோன்றல்
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு 1992 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்த் பன்சாரேவின் முயற்சி யால் அம்ஹி பாரதிய லோக் அந்தோலன் (இந்திய மக்கள் இயக்கம்) என்ற இயக்கம் நிறுவப்பட்டது. நகரில் அமை தியை நிலைநாட்ட இந்த இயக்கம் அமைக்கப்பட்டது. இதில் பல்வேறு முற்போக்குக் குழுக்களும், மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அதன் நோக்கத்தை விரிவுபடுத்தவும், சாகு சலோகா மஞ்ச் பதாகையின் கீழ் அமைதி மற்றும் ஒற்றுமை அணி வகுப்பை நடத்தவும் முடிவு செய்யப்பட்டு, சாகு மகாராஜ் ஜெயந்தியை முன்னிட்டு ஜூன் 25 அன்று ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் அணி வகுப்பு நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கள் கட்சி மற்றும் பல மதச்சார்பற்ற குழுக்களின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த குழுவுக்கு சாகு மகாராஜ் வழி தோன் றலான ஆறாவது மகாராஜ் தலைமை தாங்கினார். சாகுவின் பிறந்த நாளான ஜூன் 26 அன்று அம்ஹி பாரதிய தளம் ‘‘சாகு சமாஜிக் சலோகா மாநாட்டை” ஏற்பாடு செய்தது. மாநாட்டில் விருந்தினராக புகழ் பெற்ற நடிகரும் இயக்குநருமான அமோல் பலேகர் கலந்து கொண்டார். புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும் முற் போக்கு சிந்தனையாளருமான டாக்டர் ஜெய்சிங்ராவ் பவார் தலைமை தாங்கினார்.
இயக்குநர் அமோல் பலேகர்
“முன்பு குண்டர்கள் மக்களை துன்புறுத்தினார்கள், ஆனால் இப்போது அரசாங்கமும் ஆளும் கட்சியும் நாட்டில் வெறித்தனமாக இயங்கும் முகமூடி அணிந்த கும்பல்களை ஆதரிக்கின்றன” என்று அமோல் பலேகர் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். மேலும், காவிமயமான இந்து இந்தியாவே அவர்களின் முக்கிய குறிக்கோள் என்றும், ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘கேரள ஸ்டோ ரிஸ்’ போன்ற பிரச்சாரத் திரைப்படங்கள் பொய்களைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டவை என்றும் அவர் கூறி னார். பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களுக்கும் அவர் தனது ஆதரவை தெரிவித்தார். கோவிந்த் பன்சாரே, டாக்டர் நரேந்திர தபோல்கர், டாக்டர் எம்.எம். கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரைக் சனாதன சித்தாந்த குண்டர்கள் கொலை செய்தனர்.அதே சித்தாந்தம் தான் தற்போது சாகு மகாராஜின் முற்போக் கான மற்றும் சமத்துவ பாரம்பரியத்தை அழிக்க முயற்சிக்கிறது. 2024 பொதுத் தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் துவங்கிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியே இந்த சம்பவங்கள் என்று மாநாட்டில் உரையாற் றிய உதய் நர்கர் சுட்டிக்காட்டினார். டாக்டர் ஜெய்சிங்ராவ் பவார், தனது உரையில், சாகு மகாராஜ் சமூக நீதி, மத நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தின் மதிப்புகளின் வடிவமாக இருந்தார் என அவரது வளமான மரபை நினைவு கூர்ந்தார். வன்முறையின் போது தங்கள் வாழ்வா தாரத்தை இழந்திருந்த நடைபாதை வியாபாரிகள், ரிக்சா ஓட்டுநர்கள் மற்றும் பிற சிறு வியாபாரிகளுக்கு உதவ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோலாப்பூர் மாவட்டக் குழு இரண்டு லட்சம் ரூபாய் நிதி திரட்டியி ருந்தது. முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு இந்துத்துவா சக்திகள் வன்முறையை உருவாக்கி மாநிலத்தில் இயல்பு நிலையை தொடர்ந்து சீர்குலைத்து வருகின்றன. நாசிக் மாவட்டத்தில் பசுக் குண்டர்களால் ஒரு ஏழை முஸ்லிம் கொல்லப்பட்ட ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் இதே பகுதியில் பஜ்ரங் தள குண்டர் கள் தலைமையிலான பசுக் காவலர்களால் முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டார்.
சுதந்திரத்தை கொச்சைப்படுத்திய சாம்பாஜி பிடே
தலித்துகளுக்கு எதிராக பீமா கோரேகான் பேரணியில் வன்முறை நடத்தியதில் முன்னணியில் இருந்த சாம்பாஜி பிடே, முஸ்லிம்கள் மற்றும் இந்தியாவின் மதச்சார்பற்ற மரபுகளுக்கு எதிராக தொடர்ந்து விஷத்தை வெளிப் படுத்துகிறார். சில நாள் முன்பு, அவர் வீடியோவில் ஆகஸ்ட் 15 அன்று மூவர்ணக் கொடியை விட பெரிய காவி கொடிகளை மக்கள் ஏற்ற வேண்டும் என்று கூறினார். மேலும் அவர் மூவர்ணக் கொடியை அவமானப்படுத்தி னார். கிராமம் முழுவதும் கழுதை இறைச்சியை உண்ணும் போது நாங்கள் மூவர்ண கொடியை சுமக்கி றோம் என்றும் “மிகவும் இழிவான ஆணாதிக்கமிக்க மராத்தி வார்த்தையைப் பயன்படுத்தி நமது சுதந்திரத்தை ‘ஆண்மையில்லாதது’ என்றும் அவர் கொச்சைப் படுத்தினார். இந்த தேச விரோதக் கருத்துக்கள் மற்றும் 2018 ஜனவரி 1, அன்று பீமா கோரேகான் வன்முறை உட்பட பல்வேறு வகுப்புவாத வன்முறை சம்பவங்களில் சாம்பாஜி பிடே யின் பங்கிற்காகவும் வெறுப்புணர்வை தூண்டுவதாலும் அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி, தமிழில் : சேது சிவன்