articles

img

பாஜகவின் பாசிச வெறியை முறியடித்து திரிபுராவில் நிச்சயம் எழுவோம்!

முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் நேர்காணல்

பாஜக ஆட்சியாளர்களின் அட்டூழியங்களை மக்களை அணிதிரட்டி முறியடிப்போம் என்று மாணிக் சர்க்கார் கூறினார். புதுதில்லி வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், திரிபுரா மாநில முன்னாள் முதல்வருமான மாணிக் சர்க்கார் பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏட்டிற்கு பேட்டியளித்தார்:   சந்திப்பு : ஜி. மம்தா

செப்டம்பர் 8 அன்று திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் மற்றும் முன்னணி ஊழியர்களின் வீடுகளில்  விரிவான அளவில் தாக்குதல்கள் நடை பெற்றன; இதன் பின்னணி என்ன?

மாணிக் சர்க்கார்: என்னுடைய தன்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கதாலியா வட்டாரத்தில், வட்டார வளர்ச்சி அலுவலரைப் பெரும் திரளான மக்களுடன் சந்திப்பது என்ற போராட்டத்தை செப்டம்பர் 6 அன்று நடத்த இருந்தோம். இந்தத் தொகுதியின் மக்களின் பேராதரவு எனக்குக் கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருகிறது. திரிபுராவில் பாஜக ஆட்சிப்பொறுப்பை ஏற்றபின், நான் இந்தத் தொகுதிக்கு வருவதையும், மக்களைச் சந்திப்பதையும் தடுப்பதற்கான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டார்கள். மூன்று முறை நான் தடுத்து நிறுத்தப்பட்டேன். சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போதுகூட, பெரிய அளவில் பொதுக்கூட்டம் எதுவும் நடக்கவில்லை. அந்த அளவிற்கு ஆட்சியாளர்களின் பாசிச அராஜகத் தாக்குதல்கள் நம் ஆதரவாளர்கள், தோழர்களுக்கு எதிராக ஏவப்பட்டன. தெருமுனைகளிலோ, கிராமச் சந்தைகளிலோ கூட கூட்டங்கள் கூட்டிப் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. என் தொகுதிக்கு நான் செல்வது நீண்ட காலமாகத் தடுக்கப்பட்டது.

இந்த முறை மக்கள் என்னை அழைத்திருந்தார்கள். செப்டம்பர் 6 அன்று எட்டு ஸ்தலப்பிரச்சனைகளின் அடிப்படையில் (இவை அனைத்தும் சாமானிய மக்களின் பொருளாதார நலன்கள் சம்பந்தப்பட்டதாகும்) பெரும்திரளாக வட்டார வளர்ச்சி அலுவலரைச் சந்தித்திடத் திட்டமிடப்பட்டது. எனவே உடனடியாக நான் இதனை ஏற்றுக்கொண்டேன். இந்த முறையும் ஒரு காவல்துறை அதிகாரி அந்த இடத்திற்குச் செல்ல வேண்டாம் எனக் கூறினார். ஆயினும் அதனை நான் ஏற்கவில்லை. நான் என் தொகுதிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சென்றுகொண்டிருந்தேன். நான் என் தொகுதிக்குள் நுழைந்தவுடனே, காவல்துறையினர் எங்களைத் தடுத்து நிறுத்தினர். பாஜக ஆட்கள் எங்களுக்கு எதிராக, குறிப்பாக என்னைக் குறிவைத்துக்கொண்டு,  கோஷமிட்டுக்கொண்டே  கறுப்புக் கொடிகளுடன் டயர்களைக் கொளுத்திக்கொண்டிருந்தனர்.  எனவே ஒரு காவல்துறை அதிகாரி  என்னிடம் வந்து என்னைப் போக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். என்னைப் பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் அங்கே இருக்கிறார்கள். எனவே என்னைப் போகவிடுங்கள் என்று கூறினேன். ஆயினும் காவல்துறையினர் எங்களுக்கு சாதகமாக இல்லை. 45 நிமிடங்கள் கழிந்தன. பின்னர் கோட்டாட்சியர் அங்கே வந்தார். என்னிடம் மேலும் தொடர்ந்து நீங்கள் செல்ல வேண்டாம் என்றும், சென்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் கூறினார். நான் அவரிடம் இந்தத் தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், நான் போவதற்கு எனக்கு உரிமை உண்டு. எனவே இந்த சூழ்நிலையில் அவர்களால் எங்களைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். பின்னர் சாலைகள் அனைத்தும் நாங்கள் போவதற்காக சரி செய்து தரப்பட்டன. இங்குமங்கும் மக்களின் கூச்சல் இருந்தது. இது இயற்கை. காவல்துறையினரும் எங்களைத் தடுக்க முயன்றனர். எங்கள் வாகனங்களைச் செல்வதற்கு அனுமதித்திடவில்லை. எனவே  நாங்கள் நடந்தே சென்றோம்.

பஷ்பாகூர் (Bashpakur) என்னுமிடத்தில் பாஜகவினர், பேரணியாக வந்தவர்கள்மீது பட்டாசு வெடிகளைக் கொளுத்தி எறிந்தனர், கற்களையும் வீசினர். இவை அனைத்தையும் வீரத்துடன் எதிர்கொண்டு மக்கள் முன்னேறினார்கள். ஐந்து கிலோ மீட்டர் தூரம் சென்றபின் வாகனங்களையும் அனுமதித்தார்கள். நாங்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குப் போய்ச்சேர்ந்தோம். நல்ல கூட்டம். மக்கள் பெரும் திரளாகத் திரண்டிருந்தார்கள். அங்கே ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஐந்து உறுப்பினர் கொண்ட தூதுக்குழுவினர் வட்டார வளர்ச்சி அலுவலரைச் சந்திக்க சென்றோம். பிறகு கூட்டம் 45 நிமிடங்கள் நடைபெற்றது.

இவை அனைத்தும் பாஜக-வினரை எரிச்சல் கொள்ளச் செய்தது. இது அரசியல்ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் நினைத்தார்கள். மக்கள் தங்கள் சாதி, இன வேற்றுமைகளை ஒதுக்கிவைத்துவிட்டு கோரிக்கைகளுக்காக அணிதிரண்டார்கள். அவர்களின் கோரிக்கைகள் என்ன? மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் வேலைநாட்கள் உயர்த்தப்பட வேண்டும், ஊதியம் உயர்த்தப்பட வேண்டும், தற்போது காலத்தே ஊதியம் வழங்கப்படுவதில்லை. எனவே இவை அனைத்தும் முக்கியமான விஷயங்களாகும். இத்துடன் சாலைகள் சரி செய்யப்பட வேண்டும், பாசனத் திட்டங்கள் செயல்படாமல் இருக்கின்றன. அவற்றைச் செயல்பட வைத்திட வேண்டும். இதுபோன்று  ஏராளமான விஷயங்கள். இந்த விஷயங்களின் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை; அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
 

மிரட்டல் காரணமாக நாம் வரமாட்டோம் என பாஜகவினர் நினைத்தார்கள். இந்த அளவிற்கு மக்கள் அணிதிரள்வார்கள் என்று அவர்கள் நினைக்கவில்லை. இவை அனைத்தையும் பார்த்தபின்னர் அவர்கள் ஆத்திரமடைந்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன். இவற்றின் காரணமாகவே அவர்கள்  அராஜக வேலைகளைத் தொடங்கினார்கள்.  உண்மையில் திரிபுரா மக்கள் “நமக்காகக் குரல் கொடுக்கும் ஒரே கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணியுடன் இணைந்து போராட வேண்டும் எனத் மீண்டும் உணர்கிறார்கள். நம்மைக் காப்பதற்கு இடதுசாரிகளைத் தவிர வேறெவரும் இல்லை; எனவே, நாம் அவர்களுடன் இணைந்துநின்று முன்னேறுவோம் என்று மீண்டும் உணர்ந்துவிட்டார்கள். கடந்த நான்கைந்து மாதங்களாகவே நாம் நடத்தும் போராட்டங்களில் மக்களின் பங்கேற்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதை கவனித்து வருகிறோம். 

மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள ஒரு கட்சிக்கு எதிராக எப்படி இந்த அளவிற்கு வெட்கக்கேடான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதன் பின்னணி
யில் மாநில அரசாங்கத்திற்கும், நிர்வாகத்திற் கும் உள்ள பங்கு என்ன?

மாணிக் சர்க்கார்:  சென்ற தேர்தலின் போது பாஜக அளித்திட்ட பொருளாதார உறுதிமொழிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பது தெளிவாகும்.  பாஜகவினரைப் பார்த்து மக்கள், “நீங்கள் அளித்த உறுதிமொழிகள் என்னாயிற்று?” என்று கேட்டால் என்ன செய்வது என்று நினைக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது தெளிவாகும். “மத்தியிலும் ஆட்சியிலிருக்கிறீர்கள், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கிறீர்கள். நீங்களே இரட்டை என்ஜின் காரை ஓட்டுவதாக வேறு கூறிக்கொண்டிருக்கிறீர்கள். அப்படியானால் எங்களுக்கு அளித்த உறுதிமொழிகள் என்னாயிற்று?” என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள். மக்களின் குரலை அடக்க வேண்டுமானால் அவர்களுக்குத் தலைமை தாங்கும் தலைமையை,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை, இடதுசாரிகளை பின்னர் இதர ஜனநாயக மற்றும் ஜனநாயகக் கட்சிகளையும் ஒடுக்க வேண்டும் என்று பாஜகவினர் நினைத்தார்கள். இதுதான் இத்தாக்குதலுக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று என நினைக்கிறேன்.

நிர்வாகம், அரசாங்கத்தின் அரசியல் தலைமையின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறது. அவர்கள் சொந்தமாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. நாம் ஆட்சி செய்தபோது பிரச்சனைகள் வந்தால் அவற்றை நிர்வாகத்தினர் நம்முன் கொண்டுவருவார்கள். நாம் நம் நிலைப்பாட்டை அவர்களிடம் கூறுவோம். விவாதங்கள் நடைபெற்றபின்னர் ஒரு முடிவுக்கு வருவோம். அத்தகைய நிலைமை இப்போது இல்லை. இப்போது ஒருவழிப் பாதைதான். ஆகையால், இப்போது நிர்வாகம் அவர்களின் எடுபிடியாக மாறியிருக்கிறது. தலைமைச் செயலாளர் போன்ற நிலையில் இருக்கக்கூடிய சில அதிகாரிகள் சுதந்திரமாக முடிவுகளை எடுத்தார்கள்; ஆனால் அவர்களை ஆட்சியாளர்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள்.திரிபுரா மாநிலக் காவல்துறையினர் உண்மையில் நல்ல பெயர் எடுத்திருந்தார்கள். அவர்கள் மாநிலத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக துணிவுடன் போராடியவர்கள். எனினும் இப்போது காவல்துறை முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கிறது.

2018 தேர்தலில், பாஜக ஆட்சிக்கு வந்தபின், அவர்கள் ஆட்சியின் லட்சணம் என்ன? மக்கள் மீது அவர்கள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் என்ன?

மாணிக் சர்க்கார்:  எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளிவீசினார்கள். ஆனால் எதையுமே நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு, மத்திய தர ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக் குழு அமைக்கப்படும் என ஆசைவார்த்தைகளைக் கூறினார்கள். இளைஞர்களுக்கு வேலை அளிக்கப்படும் என்றார்கள். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்க்கும் அரசாங்க வேலை அளிக்கப்படும் என்றார்கள். கிராமப்புற இளைஞர்களுக்கும் 100 நாள் வேலைத்திட்டம் 200 நாட்களாக மாற்றப்படும் என்று கூறினார்கள். ஒவ்வோராண்டும் 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றார்கள். “இதையெல்லாம் எப்படிச் செய்வீர்கள்?” என்று நாம் கேட்டபோது, “ஒன்றிய அரசாங்கம் எங்கள் அரசாங்கம்” என்றும், “நாங்கள் இணைந்து இவற்றைச் செய்வோம்” என்றார்கள். ஆனால் எதையுமே செய்யவில்லை. ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் பூஜ்ஜியமாக இருப்பதால் மக்கள் மிகவும் நொந்தநிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் நிலைமை மிக மோசமாக இருந்தது. திரிபுரா மிகச்சிறிய மாநிலம். 40 லட்சம் மக்கள்தான். எனினும் இதில் சுமார் 80 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருந்தார்கள். 800க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள். சிகிச்சையளிப்பதற்குத் தேவையான அளவிற்கு மருத்துவர்கள் இல்லை, செவிலியர்கள் இல்லை, மருத்துவத்துறை ஊழியர்கள் இல்லை. எனவே ஏராளமான பிரச்சனைகள் தலைதூக்கின. பட்டினிச் சாவுகள் ஏற்பட்டன. வறுமையின் காரணமாக உடல் உறுப்புகளை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டார்கள். உயிர்வாழ்வதற்காக மக்கள் மீண்டும் புலம்பெயர்ந்து செல்லத் தொடங்கினார்கள். குறிப்பாக பழங்குடியினர் பகுதிகளில் மக்களின் நிலைமைகள் மிகவும் மோசமாக இருந்தன. நாம் ஆட்சி செய்த காலத்தில் அவர்களின் பகுதிகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தினோம். உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அப்பகுதி இளைஞர்களுக்கு வேலைகள் அளித்திட்டோம், கல்வி அளித்திட்டோம், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பல்வேறு வசதிகளைச் செய்துகொடுத்தோம். ஆனால் இப்போது அனைத்தும் எதிர்மறையாக நடந்துகொண்டிருக்கின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், இடது முன்னணியையும் தாக்கு வதற்குத் தொடர்ந்து அவர்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், கட்சியும் வெகுஜன ஸ்தாபனங்களும் எப்படி  அதனை கொண்டுவருகின்றன? மக்களின் பிரச்சனைகளை எப்படி எடுத்துச் சென்று கொண்டிருக்கிறீர்கள்?

மாணிக் சர்க்கார்: இது மிகவும் கடினமான யுத்தம்தான். ஏனெனில் அவர்கள் நம் அமைப்பாளர்கள் மீது, தலைவர்கள் மீது, குறிப்பாக இளைஞர்கள் மீது குறிவைத்து பாசிச முறைகளில் தாக்குதல் தொடுத்து வருகிறார்கள். இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு நாமும் நம் செயல்முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது. ஆரம்பத்தில் சிரமங்கள் இருந்தன. நம் பிரதான கடமை. சாமானிய மக்களுடன் மீண்டும் தொடர்புகளைப் புதுப்பித்துக்கொள்வதேயாகும். அவர்கள் வீடுகளுக்குச் சென்றோம். அவர்களுடன் பேசினோம். அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினோம். கட்சி ஸ்தாபன நடவடிக்கைகளும் சிரமமாகவே இருந்தன. நம் அலுவலகங்களை இடித்துத் தரைமட்டமாக்கி இருக்கிறார்கள். பல தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இவையனைத்தும் எண்ணற்ற பிரச்சனைகளை உருவாக்கி இருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி மக்களுடன் நாம் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். அகில இந்திய அறைகூவல்கள் அனைத்தையும் மாநிலத்தில் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம். இந்தவிதத்தில் நாம் திரிபுரா மக்கள் மத்தியில் மக்களிடமிருந்து ஓர் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையைப் பெற்றிருக்கிறோம். 

நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி
தமிழில்: ச.வீரமணி

 

;