articles

img

இடது ஜனநாயக அணியை உருவாக்கும் திசை வழியில்...

பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்து மண்டியிட்டிருப்பதன் மூலம் சம்யுக்த கிசான் மோர்ச்சா என்னும் பதாகையின்கீழ் ஒன்றுபட்ட விவ சாயிகளின் போராட்டம்  வரலாற்று  வெற்றியை ஈட்டியி ருக்கிறது. இந்த வெற்றியானது, விவசாயத்தில் கார்ப்ப ரேட்டுகளுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட சில நடவடிக்கை களை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், மேலும் விரிவான அளவில் பல்வேறு விளைவுகளையும் ஏற் படுத்தக்கூடிய வெற்றியாகும். இதில் முதலாவதும், முதன்மையானதும் என்பது, விவசாயிகளின் அடிப்படையிலான விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரங்களுக்கான உரிமை யையும் வெற்றிகரமாகப் பாதுகாத்திருப்பதன் மூலம்,  மோடி அரசாங்கத்தால் பிடிவாதமானமுறையில் பின் பற்றிவரப்பட்ட கார்ப்பரேட் ஆதரவு நவீன தாராளமய நிகழ்ச்சி நிரலுக்குப் பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாகும்.

இரண்டாவதாக, விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி, ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதித்து எதேச்சதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக அளிக்கப் பட்டுள்ள பலத்த அடியாகும். தொழிலாளர் வர்க்கத் தால் ஆதரவு அளிக்கப்பட்டு, பெரும் திரளான விவசா யிகளால் முன்னெடுக்கப்பட்ட இயக்கம் நாடாளு மன்றத்தை  ஓரங்கட்டிவிட்டு, தானடித்த மூப்பாக நடந்து கொண்ட எதேச்சதிகார நடவடிக்கைகள் மீது வீசப் பட்டுள்ள அடியுமாகும்.

மரண அடி

மூன்று வேளாண் சட்டங்களும் முதலில் 2020 ஜூனில் அவசரச்சட்டங்களாகப் பிரகடனம் செய்யப் பட்டன.  அவசரச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது எவரிடமும் கலந்தாலோசனை செய்திடவில்லை. நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குக்கூட அனுப்பிடாமல், மாநிலங்களவையில் உறுப்பினர்களின் வாக்கெ டுப்புக்குக்கூட விடாமல், இவற்றின்மீது எதிர்க்கட்சி  உறுப்பினர்கள் குரல் எழுப்புவதற்கும் அனுமதிக்கா மல், மிகவும் அடாவடித்தனமான முறையில் நிறை வேற்றப்பட்டது. இத்தகைய எதேச்சதிகார நடை முறைக்குத்தான் மாபெரும் விவசாயிகளின் எழுச்சி மரண அடி கொடுத்துள்ளது.  

இதற்கு முன்பும் கூட, இந்த அரசாங்கம் 2015இல் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திருத்துவதற்காக ஓர் அவசரச்சட்டத்தைப் பிரகடனம் செய்தது. பின்னர் மக்களவையிலும் அது நிறைவேற்றப்பட்டிருந்தது. இருப்பினும், பூமி அதிகார் அந்தோலன் என்னும் ஒன்றுபட்ட விவசாயிகளின் மேடை இதற்கு எதிராகப் போராட்டங்களை நடத்திய பின்னர், அரசாங்கம் இதனைக் கைவிட்டுவிட்டது. ஆனாலும், இவர்கள், 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றபின்னர், அதனை மறந்துவிட்டு, அவசர கதியில் எண்ணற்ற அவசரச்சட்டங்களையும், நாடாளுமன்றத்தின்மூலம் அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்தது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்தது உட்பட பல ஜனநாயக விரோதச் சட்டங்க ளையும் நிறைவேற்றினார்கள். இனிமேலாவது மோடி  அரசாங்கம், இதுபோன்று நடவடிக்கைகளை  அவசர கதியில் எடுக்காமல் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்திட வேண்டும்.  

புதிய வழிகாட்டி...

மூன்றாவதாக, ஓராண்டு காலமாக நடைபெற்ற விவ சாயிகள் போராட்டம், ஆட்சியாளர்களின் இந்துத்து வா-நவீன தாராளமயத்தின் கொள்கைகளுக்கு எதிரா கப் போராடுவதற்கான வழியையும் காட்டி இருக்கிறது. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பல வீனமாகவும், சக்தியற்றும் இருக்கக்கூடிய நிலையில், ஒன்றுபட்ட மேடைகளின் மூலமாக வெகுஜனப் போராட் டப் பாதையில், மக்களை அணிதிரட்டி, எதிர்ப்பினைக் கட்டி எழுப்புவதே வழியாகும் என்பதைக் காட்டி இருக்கிறது.

இந்தக் கட்டத்தில் மோடி அரசாங்கம் பின்வாங்கி யது ஏன்? போராட்டத்தின் குவிமையமாக இருந்தது பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேச மாகும். போராடிய சீக்கிய விவசாயிகளை, மோடி அர சாங்கமும், ஆளும் கட்சியும் காலிஸ்தானிகள் என்றும், தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்தி அவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, போராட்டத்தை நசுக்க முயன்றது. ஆட்சியாளர்களின் இத்தகைய அடக்குமுறை-ஒடுக்குமுறை நடவடிக்கை கள் பாஜகவிற்கு எதிராகவும், மோடி அரசாங்கத்திற்கு எதிராகவும் பஞ்சாப்பில் உள்ள அனைத்து மக்களை யும் ஒன்றுபடுத்தியுள்ளது. பஞ்சாப்பில் உள்ள எந்தக் கிராமத்திற்குள்ளும் எந்தவொரு பாஜக தலைவரும் நுழைய முடியாத அளவிற்கு நிலைமை உருவாகி இருக்கிறது. பஞ்சாப்பில் இன்னும் சில வாரங்களில் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலை யில், ஆடிப்போயுள்ள பாஜக, எப்படியாவது தனிமைப் பட்டிருக்கும் நிலையை மாற்ற நடவடிக்கைகள் பல வற்றைப் பின்பற்றியபோதிலும் அவை எதுவும் அதற்கு உதவிடவில்லை. பஞ்சாப்பில் தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போனாலும் பரவாயில்லை என்று பாஜக நினைத்தாலும் அதேபோன்று உத்தரப் பிரதேசத்தையும் கைவிட அது விரும்பவில்லை. விவ சாயிகள் போராட்டம் தொடர்ந்தால் பஞ்சாப் மட்டு மல்ல, உத்தரப்பிரதேசமும் தங்கள் கைகளிலிருந்து பறி போய்விடும் என்று பாஜக கருதியது. அவ்வாறு பறிபோ வதற்கு எக்காரணம் கொண்டும் இடம்கொடுத்தி டக்கூடாது என்றும் அது நினைத்தது.

மேற்கு உ.பி.யில்...

மேற்கு உத்தரப்பிரதேசத்தில் சென்ற ஆண்டில் இருந்த நிலைமையை ஆராய்ந்தோமானால், அங்கே ஒட்டுமொத்த விவசாயிகளும் போராடிய விவசாயிக ளுக்கு ஆதரவாக ஒன்றுபட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. இங்கேயிருந்த விவசாயிகளில் கணிசமா னவர்கள் 2014 மக்களவைத் தேர்தலிலும், 2019 சட்ட மன்றத் தேர்தலிலும் பாஜக-விற்கு வாக்களித்தவர்கள். முசாபர் நகரில் 2013இல் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்கள்  ஜாட் இனத்தவருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பகைமை உணர்வை அதிகப்படுத்தி இருந்தன. இத்தகைய பகைமை உணர்வு பாஜகவிற்கு உதவியது. ஆனால், இப் போது நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் இத்தகைய பகைமை உணர்வை ஒழித்துக்கட்டி, அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி இருக்கிறது. “சாதி யைச் சொல்லி, மதத்தைச் சொல்லி, நம்மைப்பிரிக்கும் சூழ்ச்சிகளை இனியும் நாங்கள் அனுமதியோம்” என்றும், “ஒன்றுபட்டுப் போராடுவோம்,” என்றும் “சாதி வெறியர்களையும், மத வெறியர்களையும் தனிமைப் படுத்திடுவோம்” என்றும் முழக்கமிட்டு அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.

லக்கிம்பூர் கெரியில், ஒன்றிய இணை அமைச்சரின் மகன் காரை ஓட்டிவந்து நான்கு விவசாயிகளைக் கொடூரமான முறையில் படுகொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் நடை பெற்றுவந்த விவசாயிகள் போராட்டத்திற்கு அனு தாபத்தையும், ஆதரவையும் ஏற்படுத்தியது. பாஜக விற்கு உத்தரப்பிரதேசம் என்பது கிரீடத்தில் உள்ள ஆபரணம் போன்று பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றா கக் கருதுகிறது. அமித் ஷா, 2022 சட்டமன்றத் தேர்தல் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு வழி வகுத்திடும் என்று திரும்பத் திரும்பத் தன் அபிலா சையைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

மக்கள் மத்தியில் அபரிமிதமாக ஆதரவை குவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் இயக்கம் ஏற்படுத்தி யிருக்கும் அச்சுறுத்தலும், ஆதித்யநாத்தின் அரக்கத் தனமான ஆட்சி காரணமாக மக்கள் ஆதரவு சரிந்து கொண்டிருப்பதும் இவர்கள் மத்தியில் அச்சத்தை  ஏற்படுத்தி இருக்கின்றன. எனவே உத்தரப்பிரதே சத்தில் இழப்பைச் சரிக்கட்டுவதற்காகத்தான் மோடி  இவ்வாறு பின்வாங்குவது அவசியம் என முடிவெடுத்தி ருக்கிறார்.  

மதவெறியால்  ஈர்க்க முடியவில்லை

இந்த நடவடிக்கைக்குப்பின்னே மற்றுமொரு காரணியும் இருக்கிறது. அதாவது, விவசாய இயக்க மும், அதனால் எழுப்பப்பட்டுள்ள பிரச்சனைகளும் சமூ கத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சூழ்நிலையில், மக்க ளைப் பிளவுபடுத்திடும் தங்களின் மதவெறி நிகழ்ச்சி நிரலின்மீது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு பாஜகவிற்கு சிரமமாக இருக்கிறது. விவசாயிகள் பிரச்ச னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டால், மக்கள் மத்தி யில் தங்களுடைய ஆத்திரமூட்டும் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலைக் கொண்டுசெல்வதற்கு உகந்த சூழல்  ஏற்படும் என பாஜக நம்புகிறது. ஆனால், விவசாயிகள் பிரச்சனைகள் மறையப்போவதில்லை. மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்திருப்பதுடன், அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக உத்த ரவாதப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும், விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்திடும் மின் விநியோகத்தைத் தனியாரிடம் தாரை வார்க்க வகை செய்யும் மின்சாரத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா மிகவும் தெளிவாகத் தெரிவித்திருக்கிறது. இக்கோரிக்கை களை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா தீர்மானித்து, செயலில் இறங்க இருக்கிறது.

எனினும், ஒரு விஷயம் மிகவும் தெளிவாகியி ருக்கிறது. இந்துத்துவா-நவீன தாராளமய எதேச்ச திகார ஆட்சிக்கு எதிரான போராட்டம் ஒரு புதிய  கட்டத்தை அடைந்திருக்கிறது. விவசாய இயக்கத்தின் மூலமாக தொழிலாளர் வர்க்கமும், விவசாய வர்க்கமும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒன்றுபட்டி ருக்கிறது.

சரியாக ஓராண்டுக்கு முன்பு

2020 நவம்பர் 26 அன்று நடைபெற்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தின் அறைகூவலுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் ‘தில்லி செல்வோம்’ என்கிற அறைகூவலும் இணைந்து  இந்த வெகுஜனப் போராட்டம் தொடங்கி யது என்பதை நினைவுகூர்ந்திட வேண்டும். அதிலி ருந்தே, தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்து கூட்டு இயக்கங்கள் பலவற்றிற்கு அழைப்பு விடுத் தார்கள். இடதுசாரிகள் தலைமையிலான விவசாய சங் கங்களும், தொழிற்சங்கங்களும் தொழிலாளர்கள்-விவசாயிகள் இடையே விரிவான அளவில் ஒற்றுமை யைக் கட்டி எழுப்பிட முதன்மையான பங்களிப்பினைச் செலுத்தின. ஒத்துழைப்புதான் வரவிருக்கும் நாடாளு மன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மத்தியத் தொழிற்சங்கங்களினால் விடுக்கப்பட்டுள்ள இரண்டு நாள் வேலைநிறுத்தம் உட்பட பல போராட்டங்களுக்கு உதவிட இருக்கின்றன.

இந்துத்துவா எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக ஒரு  வலுவான மாற்றைக் கட்டி எழுப்புவதற்கு, இத்தகைய வளர்ச்சிப் போக்குகள் இடது மற்றும் ஜனநாயக சக்தி களை அணிதிரட்டும் திசைவழியில் ஒரு முக்கிய அடி எடுத்து வைத்திருப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி இயக்கமும் கருதுகின்றன.

நவம்பர் 24, 2021   
தமிழில்: ச.வீரமணி




 

;