articles

img

100 சதவீதம் வாக்குப்பதிவு ஏன் சாத்தியமாகவில்லை ?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்எந்த தொகுதியிலும் வாக்குப் பதிவுகுறைந்தபட்சம் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை கூட வாக்குப் பதிவு நடைபெறவில்லை. படித்தவர்கள் அதிகம் இருக்கும் சென்னை மற்றும் கன்னியாகுமரியிலும் அதிக அளவில் வாக்குப் பதிவு சதவீதம் நடைபெற வில்லை. இதற்கு தேர்தல் ஆணையம் தான் காரணம்.

வாக்காளர் சேர்ப்பு பணி 
வருடத்தில் ஒருமுறை குறிப்பிட்ட  இரண்டு மாதங்களில் தலா 2 நாள்கள் மட்டுமே வாக்காளர்கள் சேர்ப்புப் பணி நடைபெறுகிறது. இதில் விடுபட்டவர்கள் இணையதளத்தின் மூலமாக மட்டுமே சேர்க்க முடியும். வசதி இல்லாதவர்கள் வாக்குரிமை இழப்பார்.குடியிருக்கும் வீட்டிற்கு முகவரி மாற விண்ணப்பங்கள் கிடைப்பில் போடப்படுகிறது. அல்லது பழைய முகவரி உள்ள பாகத்தில் நீக்கி மீண்டும் அதே பாகத்தில் சேர்ப்பார்கள். சேர்த்தல்,நீக்கம் இரண்டும் ஒரே பக்கத்தில் வரும்.  

செயல்படாத செயலி
வோட்டர் ஹெல்ப்லைன் செயலி மூலம் முகவரி மாற்றம் செய்யலாம் என்று நினைத்தால் அதுவும் விண்ணப்பிக்க முடியாத வகையில்  அமைக்கப்பட்டுள்ளது. செயலி குறைபாடு பற்றி மாநில தேர்தல் ஆணையம் குறைந்தபட்ச கவனம்கூட செலுத்தவில்லை. பலமுறை தேர்தல்ஆணையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாலும் பதில் அளிப்பதில்லை. தலைமை தேர்தல் ஆணையர் அலைபேசி எடுக்கமாட்டார். ஆனால் அலைபேசி எண்களை  நாளிதழில் விளம்பரம் கொடுத்து எந்த நேரமும் போன் செய்யலாம் என்று  மட்டும் வரும். இதனால் முகவரி மாறியவர்கள் வாக்கு அளிக்கவில்லை. உதாரணத்திற்கு பழனியில் முகவரி மாற்றம்கோரி விண்ணப்பம் கொடுத்த  ஒரு குடும்பத்தையே பழனி சட்டமன்றத் தொகுதியில் வசிக்கவில்லை என்று வாக்குப்பதிவு அலுவலர் மனுவை தள்ளுபடி செய்து விட்ட கொடுமை நடந்தது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் நேரில்புகார் கொடுத்தும் இன்று வரை முகவரி மாற்றம்செய்ய முடியவில்லை. இந்த குடும்பம் வாக்கு அளிக்க எப்படி வரும்? புகைப்படம் மாறியவர்கள் பலமுறை விண்ணப்பங்கள் கொடுத்தாலும் தவறான புகைப்படங்கள் வருகிறது. குறைகளை களைய மாதிரி வாக்காளர் பட்டியல் வாக்குச்சாவடிக்கு ஒன்று வெளியிட்டால் விண்ணப்பங்கள் சரியாக உள்ளதா என்று பார்த்து திருத்தலாம் என்ற ஆலோசனையும் நிராகரிக்கப்பட்டது. 

 இரட்டை பதிவுகள் 
 இறப்புகள், நீண்டகால முகவரி மாறியவர்களின் வாக்குகள் நீக்கம் செய்யப்பட வில்லை. இதனால் வாக்காளர் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கும். ஒரே பாகத்தில் அடுத்த அடுத்த வரிசையில் ஒரே வாக்காளர் இரண்டுமுறை; ஒரே சட்டமன்றத் தொகுதியில் இரட்டை பதிவுகள்; இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒரே வாக்காளர்; 20வருடம் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும்; ஆனால் யார் என்றேதெரியாது. இப்படி உள்ள வாக்குகளை முறைப்படுத்தி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.தேர்தல் சம்பந்தமான கூட்டத்தில் மேற்கண்ட வாக்காளர்களை நீக்கம் செய்யக் கோரினால் அலுவலர்கள், அரசியல் கட்சியிடம் நீக்கல்  படிவம் 7 கொடுங்கள் என்று சொல்லி தங்கள்  பொறுப்புகளில் இருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள். தேர்தல் ஆணையம் வீடு வீடாகச் சென்று வாக்காளர் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கிறார்களா என்று விசாரிக்கத் தயாராக இல்லை. உதாரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில்மேற்கண்ட குறைகளை நிவர்த்தி செய்ய சொல்லி பலமுறை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியும் நடவடிக்கை இல்லை. கிணற்றில் போட்ட கல்லாக தேர்தல் ஆணையம் உள்ளது. இதனால் அதிகமானவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும். ஆனால் வாக்காளர் இருக்கமாட்டார்கள்.

வாக்காளர் தகவல் சீட்டு  விநியோகம்
ஏப்ரல் 1 ஆம் தேதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டுகளைக் கொடுத்து அவர்கள் அதை ஒழுங்குபடுத்தி 3 ஆம்தேதி முதல் கொடுக்கத் துவங்கினால் முழுமையாக கொடுக்க முடியாது.அடுத்தநாள் வாக்காளர்கள் வாக்குச் சாவடியில் விபரம் தெரிந்து கொள்ள வந்தால் அங்கு உள்ள காவலர்களின் மிரட்டல் வேறு. உதவி செய்த  அரசியல் கட்சியின் வாக்குச் சாவடி முகவர்களை ஒருமையில் பேசுவது, வயது முதிர்ந்தவர்கள், மருத்துவர்கள் என அனைவரையும் ஒருமையில் வசைபாடுவது என காவல்துறையினரின் நடவடிக்கையில் வாக்கு அளிக்க வந்த பொதுமக்கள் மனம் நொந்து சென்றனர். வாக்குச் சாவடி புதியதாக உருவாக்கியதால் இடம்மாறியவர்களை போ போ என்று விரட்டுவது. என்பதெல்லாம் தமிழகம் முழுவதும் நடந்த காட்சிகள். இவ்வளவு கொடுமைகளையும் செய்ய காவல்துறைக்கு  தேர்தல் ஆணையம்  அதிகாரம்வழங்கிவிட்டு, வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கவில்லை என்று புலம்புவதில் என்ன பலன்? இதற்கு  முழு பொறுப்பு தேர்தல் ஆணையம் தான். தேர்தல் ஆணையம் வெறும் பொம்மை அமைப்பாக இருந்தால் வாக்காளர் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்த முடியாது. மேலும் வாக்குப் பதிவு முடிந்தவுடன் இயந்திரம் சீல் வைக்கவில்லை. படிவம் 17 சி கொடுக்கவில்லை. ஏஜென்டுகள் உடனடியாக வாக்குசாவடிமையங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று போலீசார் மிரட்டினார்கள். மேலும் சீல் வைக்கும் இயந்திரத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் தங்கள் அடையாள முத்திரை வைக்க முடியாதநிலை. எல்லா இடங்களிலும் இதுதான் நிலை அரசியல் கட்சி முகவர்களை மிரட்ட, உரிமைகளை பறிக்க காவல்துறைக்கு எப்படி அதிகாரம் கொடுத்தது எனப் புரியவில்லை. இப்படி முதல் கோணல் முற்றும் கோணல் ஆக்கிவிட்டது. 

வாக்குச் சாவடிகளின் நிலை
வாக்குச் சாவடி அலுவலர்கள் மற்றும் காவலர்கள் பெரும்பகுதி பெண்கள்தான். பல வாக்குச் சாவடிகளில் கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி இல்லை. பெண்கள் குளிக்க வசதியில்லை. இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், போதுமான விளக்குகள் இல்லை. பெயரளவில்தான் சுகாதார வசதிகள் செய்யப்பட்டன. பல இடங்களில் அரசியல் கட்சிகள்தான் செய்து கொடுத்தன.எனவே வாக்காளர்களை குறைசொல்வதை தவிர்த்து இந்த தவறுகளை - அணுகுமுறைகளை மாற்ற வேண்டும். இல்லை என்றால் வாக்குப்பதிவு சதவீதம் வரும் காலங்களில் இன்னும் மோசமாகும்.

கட்டுரையாளர் :  கே.கந்தசாமி, சிபிஎம் நகர் செயலாளர், பழனி.

;