articles

img

மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையா?

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது. அ.இ.அ.தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக அ.இ.அ.தி.மு.க.வை முன்வைத்து கணிசமான தொகுதிகளை வெல்ல வேண்டும் என திட்டமிட்ட பா.ஜ.க.வின் கனவு நிறைவேறவில்லை. எனினும் பா.ஜ.க. 4 தொகுதிகளில் வென்றுள்ளதை உதாசீனம் செய்ய இயலாது. தேர்தல் முடிவுகள் குறித்து பல கருத்துகளை முன்வைத்த ஆய்வாளர்கள் மற்றும் ஊடகங்கள் மேற்கு மண்டலத்தில் அ.இ.அ.தி.மு.க. பெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும் அது தொடர்ந்து அந்த கட்சியின் கோட்டையாக மாறியுள்ளது எனவும் அழுத்தமாக கூறுகின்றனர். குறிப்பாக இந்த பகுதியில் உள்ள ஓரிரு இடைநிலை சாதி மக்கள் அ.இ.அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்குகளை வாரி வழங்கியுள்ளனர் என வாதம் முன்வைக்கப்படுகிறது. இது உண்மையா?

தேர்தல்களில் சாதி ஒரு பங்கை ஆற்றுகிறது என்பது இந்திய தேர்தல்கள் அல்லது தமிழக தேர்தல்களை அறிந்துள்ள எவரும் மறுக்க மாட்டார்கள். எனினும் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் அடிப்படை காரணி சாதியா எனில் ஆம் எனக் கூறுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்பதுதான் பல ஆய்வாளர்களின் கருத்து ஆகும். சாதி அடிப்படையில் மட்டுமே வாக்களர்கள் தமது வாக்குகளை செலுத்துவது இல்லை. வாழ்வாதார பிரச்சனைகள்/ சமகால அரசியல் நிகழ்வுகள்/ அரசாங்கங்களின் செயல்பாடுகள் போன்ற பல காரணிகள் பிரதானப் பங்கு வகிக்கின்றன. தமிழக சூழலில் பணமும் ஒரு அம்சமாக உள்ளது என்பது துரதிர்ஷ்டவசமானது. சாதி அடிப்படையில் மட்டுமே வாக்களர்கள் தமது வாக்குகளை செலுத்துவது இல்லை. இதே மதிப்பீடுதான் 2021 தேர்தல்களில் மேற்கு மண்டலத்துக்கும் பொருந்தும்.

வாக்கு விவரங்கள் வெளிப்படுத்தும் செய்தி
கோவை/திருப்பூர்/ஈரோடு/நீலகிரி/சேலம்/நாமக்கல்/ தர்மபுரி/கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மேற்கு மண்டலத்தில் உள்ள 57 தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி  41ல் வென்றுள்ளது. தி.மு.க.கூட்டணி 16 தொகுதிகளில் வென்றுள்ளது. கோவை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளையும் அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. அதே போல சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 அ.தி.மு.க. வசம் சென்றது. இந்த தரவுகள் அடிப்படையில்தான் மேற்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என முன்வைக்கப்படுகிறது. எனினும் நாமக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணிதான் அதிக இடங்களில் வென்றுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரு அணிகளும் தலா 3 தொகுதிகளை சரிசமமாக வென்றனர். ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அ.தி.மு.க. தலா 5 இடங்களிலும் தி.மு.க. தலா 3 இடங்களிலும் வென்றது. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு சூழல்கள் நிலவின. அ.தி.மு.க. அனைத்து மேற்கு மாவட்டங்களிலும் தனது மேலாதிக்கத்தை நிறுவியது எனக் கூற இயலாது. இந்த மதிப்பீடு தொகுதிகள் அடிப்படையில்! வாக்குகள் அடிப்படையில் அலசினால் வேறு மாதிரியான மதிப்பீடுதான் முன்வரும்.

அதிமுக எதிர்ப்பு வாக்குகள் அதிகம்
மேற்கு மண்டலத்தில் அ.தி.மு.க. கூட்டணி சுமார் 54.20 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. அதே சமயம் அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் இதைவிட கூடுதலாக உள்ளது. தி.மு.க. கூட்டணி 47.50 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. மேலும் அ.தி.மு.கவை எதிர்த்து நின்ற நாம் தமிழர் கட்சி சுமார் 5.86 லட்சம் வாக்குகளும் மக்கள் நீதி மையம் 3.79 லட்சம் வாக்குகளும் பெற்றுள்ளன. அ.ம.மு.க. கூட்டணியின் வாக்குகளை ஒதுக்கிவிட்டாலும்  ஒட்டு மொத்தத்தில் அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் என்பது 57.15 லட்சம் ஆகும். எனவே அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் அதிகமாக இருக்கும் பொழுது மேற்கு மண்டலத்தை எப்படி அ.தி.மு.க கோட்டையாக மதிப்பிட முடியும்? நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மையம் பெற்ற வாக்குகளில் தி.மு.க. எதிர்ப்பும் உள்ளது எனும் வாதம் முன்வைக்கப்படலாம். அதில் உண்மை இல்லாமல் இல்லை. எனினும் அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளும் உள்ளடங்கும். எனவே மாற்று கட்சிகளை முற்றிலும் தனிமைப்படுத்தும் அளவுக்கு மேற்கு மண்டலத்தில் அ.தி.மு.க. மிக வலுவாக உள்ளது எனும் கருத்து ஏற்கத்தக்கது அல்ல.

கோவையில் அ.தி.மு.க. வென்றது எப்படி?
கோவை மாவட்ட தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கும் தி.மு.க.வின் தோல்விக்கும் மக்கள் நீதி மையம் மற்றும் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் ஒரு காரணம் என்பது கீழ்கண்ட விவரங்களிலிருந்து அறியலாம்:

தொகுதி                                   தி.மு.க. கூட்டணியைவிட             நாம் தமிழர்+ மக்கள்
                                                       அ.தி.மு.க.கூட்டணி                        நீதி மய்யம்
                                             பெற்ற கூடுதல் வாக்குகள்                   பெற்ற வாக்குகள்      
 

கோவை வடக்கு                                  4,001                                            37,936

கோவை தெற்கு                                10,826                                            55,781

கவுண்டம் பாளையம்                       9,776                                             41,424

கிணத்துகடவு                                     1,095                                            25,219

மேட்டுப்பாளையம்                           2,456                                           10,954

பொள்ளாச்சி                                       1,725                                           13,991

சிங்காநல்லூர்                                  10,854                                           45,221

சூலூர்                                                  31,932                                          27,084

தொண்டாமுத்தூர்                          41,630                                           19,648

வால்பாறை                                     12,223                                            10,946

சூலூர்/தொண்டாமுத்தூர்/வால்பாறை ஆகிய தொகுதிகள் தவிர ஏனைய தொகுதிகளில் மக்கள் நீதி மையம் மற்றும் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளுக்கும் தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிப்புக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை அறியலாம். எனவே கோவை உட்பட மேற்கு மாவட்டங்களில் அ.தி.மு.க. அசைக்க முடியாத சக்தியாக உருவாகியுள்ளது எனும் மதிப்பீடு பொருத்தமானது அல்ல. மேலும் சில சாதி மக்கள் பெருவாரியாக அ.தி.மு.க.கூட்டணிக்கு வாக்களித்தனர் என்பதும் முழு உண்மை அல்ல. மற்ற மண்டலங்களை ஒப்பிடும் பொழுது மேற்கு மண்டலத்தில் மக்கள் நீதி மையம் மற்றும் நாம் தமிழர் கட்சி கணிசமாக வாக்குகள் பெற்றன. அது தி.மு.க.கூட்டணிக்கு பாதகமாக அமைந்தது. அந்த அளவுக்கு அது அ.தி.மு.க.வுக்கு அதிக தொகுதிகள் வெல்ல உதவியது.

மேற்கு மண்டலத்தில் இந்த இரு கட்சிகள்தான் தி.மு.க. கூட்டணியின் வெற்றியை பாதித்துள்ள எனும் மதிப்பீடு இல்லாமல் பலரும் எழுதுவது துரதிர்ஷ்டவசமான ஒன்று. மத்திய அரசாங்கத்தின் பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. குளறுபடி காரணமாக மேற்கு மண்டல மாவட்டங்கள்தான் மிக அதிகமாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சிறு தொழில்கள் நசிந்தன. இலட்சக்கணக்கானோர் வாழ்வாதரம் இழந்தனர். இந்த பிரச்சனைகளை தீர்க்க அ.தி.மு.க. அரசாங்கம் குறிப்பிடத்தக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அப்படியிருந்தும் இந்த மாவட்டங்களில் அ.தி.மு.க. கணிசமான வாக்குகளை பெற்று பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இது ஆழமான பரிசீலனைக்குரிய ஒன்று!

பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவியவர்கள்
அ.தி.மு.க.வின் வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் தமிழர், மநீம ஆகிய  இரண்டு கட்சிகள் பெற்ற வாக்குகள் பா.ஜ.க.வுக்கு குறைந்தபட்சம் 3 தொகுதிகளில் வெற்றி பெற வழிவகுத்துள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் நீட்/குடியுரிமை சட்ட திருத்தம்/ தமிழ் புறக்கணிப்பு போன்ற சில பிரச்சனைகளில் பா.ஜ.க.வை விமர்சனம் செய்தன. எனினும் தமிழகத்தின் நலன்களை பாதிக்கும் வகையில் 4 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறவும் இந்த கட்சிகள் பெற்ற வாக்குகள் வழிவகுத்தன. 

    தொகுதி                                 மதச்சார்பற்ற                            நாம் தமிழர் + 
                                                கூட்டணியைவிட                    மக்கள் நீதி மய்யம்
                                                பா.ஜ.க. பெற்ற                            பெற்ற வாக்குகள்
                                            கூடுதல் வாக்குகள் 
   
மொடக்குறிச்சி                            281                                                  17,518

கோவை தெற்கு                     10,826                                                  55,781

நாகர்கோவில்                         11,669                                                 14,790

திருநெல்வேலி                       23,107                                                 19,162

திருநெல்வேலி தவிர ஏனைய 3 தொகுதிகளில் பா.ஜ.க. வெல்வதற்கு இந்த இரண்டு கட்சிகள் பெற்ற வாக்குகள் வழிவகுத்தன. பா.ஜ.க. 4 தொகுதிகளில் வென்றது என்பது தமிழகத்தின் தனித்துவ நலனுக்கு உகந்தது அல்ல. இதற்கான நேரடிப் பொறுப்பை அ.தி.மு.க. தலைமைதான் ஏற்க வேண்டும். அதே சமயம் மக்கள் நீதி மையம் மற்றும் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளும் பா.ஜ.க.வுக்கு மறைமுக உதவியை செய்தன. எனவேதான் இந்த இரண்டு கட்சிகளும் பா.ஜ.க.வின் மாற்று அணி போல செயல்படுகின்றன எனும் விமர்சனம் எழுந்தது.

தமிழகத்தின் நலனைப் பாதுகாக்க பா.ஜ.க. மற்றும் பாசிச சக்திகளை தடுப்பது மிக மிக முக்கியமானது. தேர்தல் களத்தில் பாசிச சக்திகளின் வஞ்சக எண்ணத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. எனினும் தேர்தல் களத்துக்கு அப்பாலும் பாசிச சக்திகள் தமது செயல்களை அதிகரிக்க முனையும். அதனை முறியடிப்பது தமிழகத்தின் நலன்களுக்கும் மத ஒற்றுமை பாரம்பர்யத்துக்கும் மிக அவசியம் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடம் இருக்க இயலாது.

;