articles

img

பாஜக உறவு பாம்பின் நிழலில் ஓய்வு எடுப்பது போன்றது.....

தேர்தலுக்கு முன்பு முதல்வர் வேட்பாளர் யார் என்று அதிமுகவில் முட்டி மோதிக் கொண்டனர். கடைசியில் ஒருவழியாக இரண்டுபக்கமும் துண்டைப் போட்டு பேரம் பேசிஎடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்என்று முடிவு செய்தனர். ஆனால், ஆளுங்கட்சியாகக் கூடிய வாய்ப்பை அதிமுகவுக்கு தமிழக மக்கள் வழங்கவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமருமாறு கட்டளையிட்டுள்ளனர். கட்சி தோல்வியடைந்தால் எதிர்க்கட்சி தலைவர் வேட்பாளர் யார் என்று அப்போது முடிவு செய்யவில்லை என்பதை தாமதமாக உணர்ந்த அதிமுக,எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்ய வெள்ளியன்று கூட்டத்தை கூட்டியது. 

எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு முன்பாக, முக்கியத் தலைவர்கள் கூடி, முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் யார்,கட்சிக் கொறடா யார் என்பது குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றதாம். இபிஎஸ் தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் ஒருவரையொருவர் கடுமையாக குற்றம் சாட்டிக் கொண்டனராம். உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட்டாய்என்பதை பெருந்தன்மையாக ஒத்துக் கொள்ளாமல், கடுமையாக மோதியிருக்கின்றனர். மூன்று மணி நேரம் குற்றச்சாட்டு, பதில் குற்றச்சாட்டு என்று விவாதம் நீடித்ததால், முடிவு எதுவும் எடுக்காமல் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தியுள்ளனர். அந்தக் கூட்டத்திலும் முடிவு எடுக்கப்படாமல் இழுபறி நீடித்ததால், திங்கட்கிழமை மீண்டும் கூடி இழுபறியை தொடர்வது என பலத்த இழுபறிக்கிடையே முடிவு செய்துள்ளனர்.

முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்ததால், அது எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கும் பொருந்தும் என்பது எடப்பாடியாரின் வாதம். மாநிலம் முழுவதும் சென்று நான்தான்பிரச்சாரம் செய்தேன்; செலவுகளையும் நான்தான் கவனித்துக் கொண்டேன். எனவே ‘ஞானப்பழம்’ எனக்கே என்றாராம் அவர்.இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை அனைத்துக்கும் நீங்கள்தான் காரணம். நீங்கள் எடுத்த அவசர முடிவுகளால்தான் தோல்வி அடைந்தோம். எனவே தோல்விக்கு நீங்கள் பொறுப்பேற்று, ஞானப்பழத்தை எனக்கே தர வேண்டும் என்றாராம் இவர். தோல்விக்கு பொறுப்பேற்பது யார் என்ற விவாதம் முடிவடையாததால், எதிர்க்கட்சித் தலைவர்யார், கொறடா யார் என முடிவு செய்ய முடியாமல் முடிந்துவிட்டது கூட்டம். 

இந்த நிலைமையைப் பார்த்து மர்மப் புன்னகை பாஜக புரிந்திருக்கும் . ஏனென்றால், இப்படி ஒரு கூட்டம் நடப்பதற்கு முன்பே பாஜகவின் மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் ‘எதிர்க்கட்சித் தலைவர் யார்? என்பதை பாஜக முடிவு செய்யும்’ என்று திருவாய் மலர்ந்திருந்தார். சட்டமன்றத்தில் 65 பேர் அதிமுகவினர். பாஜகவுக்கு நான்கு பேர் மட்டுமே. பிறகுஎப்படி எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை பாஜக முடிவு செய்யும் என்று சிலர் அப்பொழுதே கேள்வி எழுப்பினார்கள். அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கூட வானதிக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது வானதி சீனிவாசன் சொன்னதுதான் நடந்திருக்கிறது. நான்கு எம்எல்ஏக்கள் கொண்ட பாஜகவிலிருந்து ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ளுமாறு பாஜக கூறினால்கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

ஏனென்றால், கடந்த நாலரை ஆண்டு காலமும் பாஜக சொன்னபடிதான் அதிமுக அடிபிறழாமல் நடந்து வந்திருக்கிறது. காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற முடியாத பாஜக தலைவர் எச்.ராஜா, அதிமுக பிளவுபடாமல் இருந்திருந்தால் திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது என்று தன்னுடைய ஜோதிட அறிவைபயன்படுத்தி அலசி ஆராய்ந்து கருத்து தெரிவித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை இருகூறாக பிரித்து விட்டதே இவர்கள்தான் என்பதை பெருந்தன்மையாக அவர் கூறவில்லை. பாஜகவின் ஆலோசகர் குருமூர்த்தி கூறியஆலோசனையின் அடிப்படையிலேயே ஜெயலலிதாவின் சமாதி முன்பு அமர்ந்து, கண்ணீர் மல்க தாம் தர்மயுத்தம் நடத்தியதாக ஓபிஎஸ்ஒப்புக் கொண்டார். தில்லியை எப்படியோ எடப்பாடியார் வளைத்துவிட்ட நிலையில், ஆடுகள் ஒவ்வொன்றாக ஓடிவந்து அரைப்பாடி லாரியில் ஏறுவது கண்டு மகிழ்கிற கசாப்புக்கடைக்காரர் போல பிரித்துவிட்ட அணிகளை இணைக்க அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் இருவரது கைத்தலங்களையும் இணைத்துவைத்து ஆட்சியையும் தொடர வைத்தார். ஆனாலும், பாலும் தண்ணீரும் போல இருஅணியும் இணையவில்லை. மண்ணெண்ணெய்யும் தண்ணீரும் போல தனித்தனியே மிதந்து கொண்டிருந்தனர். இரு அணியும் மாறிமாறி பாஜகவிடம் கோள் சொல்ல, தன்னுடையகோலின் அசைவுக்கேற்ப ஆட வைத்தது பாஜக.இதனால்தான் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று அப்போதும் பாஜக கூறியது. அதிமுகவை ஒரே அமுக்காக அமுக்க பாஜக மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பலனளிக்காத நிலையில், கடைசியில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டது பாஜக. அதிமுகஆட்சியை இழப்பதற்கு பாஜகவுடன் ஏற்படுத்திக்கொண்ட கெட்ட சகவாசமும் ஒரு காரணம்.

இதனால் ஆட்சியை இழந்துவிட்ட பிறகும்,பாஜக இவர்களை விடுவதாக இல்லை. எதிர்க்கட்சித் தலைவரைக்கூட தேர்வு செய்ய முடியாத ஒரு கட்சியாக அந்தக் கட்சியை மாற்றியுள்ளது. பாஜகவுடன் கூட்டணிக்கு போகிற எந்தவொரு கட்சியாக இருந்தாலும், கடைசியில் இந்த கதிக்குத்தான் ஆளாகும். பீகாரில் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அவருக்கு எதிராக ராம்விலாஸ் பஸ்வானின் கட்சியை கொம்பு சீவிவிட்டு ஐக்கிய ஜனதாதளத்தை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது. பழைய சோசலிஸ்ட்டான நிதிஷ்குமார், இப்போது முதல்வராக இருந்தாலும் பாஜகவின் கைப்பாவையாக செயல்பட வேண்டிய நிலை.தமிழகத்தில் மருத்துவர் கிருஷ்ணசாமி பல சமயங்களில் ஆர்எஸ்எஸ்-காரர்களைவிட அவர்களது கொள்கையை ஆவேசமாக பேசி வந்தார். கடைசியில், அவரது புதிய தமிழகம் கட்சியையும் அணைத்து அழித்தது பாஜக. முன்பு சுயேட்சையாக நின்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்ற கிருஷ்ணசாமி, தற்போது 6418 வாக்குகள் மட்டுமே அந்தத் தொகுதியில் பெற்றுள்ளார். அவரது கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பரிதாபமாக தோற்றுள்ளது.தற்போது பாஜகவின் பொறியில் சிக்கியுள்ளது புதுவையின் என்ஆர் காங்கிரஸ். அந்தமாநிலத்தில் என்ஆர் காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த போதிலும், முதல்வர் பதவியை தர வேண்டும் என துண்டைப் போட்டு இழுத்தது பாஜக. என்ஆர் காங்கிரஸ் ஒப்புக்கொள்ள மறுத்ததோடு, துணை முதல்வர் பதவியும் இல்லை என்றது. ஆனால் இப்போது துணை முதல்வர் பதவியை பாஜகவுக்கு தர வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார். ஏற்கனவே பாஜகவைச் சேர்ந்த தமிழிசை அங்குஆளுநராக இருப்பதால், பாஜகவை மீறி என்ஆர் காங்கிரசால் எதுவும் செய்ய முடியாது. 

பாஜக என்ற பாம்பின் நிழலில் ஒதுங்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்தக் கட்சிகள் காலத்தே புரிந்து கொண்டால் நல்லது. தாமதமாக புரிந்து கொண்டால் ஆகப் போவது ஒன்றுமில்லை.

கட்டுரையாளர் : மதுரை சொக்கன்

;