articles

img

வாச்சாத்தி... விக்கிபீடியா தகவல்களும் உண்மை வரலாறும்...

ஜூன் 22 ஆம் தேதிய (நேற்றைய) தீக்கதிர் நாளிதழில் “மறக்க முடியாத வாச்சாத்தி” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், உண்மைக்கு மாறான பல தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இது குறித்து எழுதிய பெரணமல்லூர் சேகரன் அவர்கள், இந்த தகவல்களை விக்கிபீடியாவிலிருந்து எடுத்தாண்டுள்ளார். ஏற்கனவே, இந்து தமிழ் பத்திரிகையில் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள் வாச்சாத்தி வன்கொடுமை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதிலும் பிழையான தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டேன். அவர் கூகுளிலிருந்து தகவல்களை எடுத்ததாக தெரிவித்தார். நான் கூறிய தகவல்களை கேட்ட பிறகு, இனிமேல் கூகுளில் உள்ள தகவல்களை நம்பக் கூடாது என்று தெரிந்து கொண்டேன் என்று குறிப்பிட்டார். அது குறித்து நான் எழுதிய சிறு குறிப்பை பிறகு இந்து பத்திரிகையில் வெளியிட்டனர்.

விக்கி பீடியா, கூகுள் அல்லது வேறு தகவல் களஞ்சியம் எதுவாக இருந்தாலும் அது மனிதர்களால் தான் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இவற்றின் மூலம் கிடைக்கும் தகவல்கள் 100 சதவிகிதம் உண்மையாக இருக்கும் என்ற எண்ணம் வேண்டியதில்லை.வாச்சாத்தி வன்கொடுமையை எதிர்த்த போராட்டத்தில் துவக்கத்திலிருந்து இறுதி வரை அதில் நேரடியாக ஈடுபட்டவன் என்ற முறையில் வாச்சாத்தி வன்கொடுமை, வழக்கு, தீர்ப்பு குறித்த அனைத்து ஆவணங்களும் எங்கள் அலுவலகத்தில் இருக்கிறது. 20 ஆண்டு கால வாச்சாத்தி போராட்டத்தின் சாரத்தை மிகச் சுருக்கமாக “வாச்சாத்தி வன்கொடுமை - வழக்கும் தீர்ப்பும்” என்ற சிறுபிரசுரம் என்னால் எழுதப்பட்டு பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. “A War cry of the lost A heroic Saga of Vaachathi” என்ற தலைப்பில் தோழர் வீ.பா. கணேசன் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

வாச்சாத்தி வன்கொடுமை குறித்து எழுதவிரும்பும் எவர் ஒருவரும் இந்த இருபிரசுரங்களிலிருந்து தேவையான தகவல்களை எடுத்துக் கொள்ளலாம். பழங்குடியினர் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான வன்கொடுமை வாச்சாத்தி சம்பவம். அது தொடர்பான வழக்கும், தீர்ப்பும் நீதித்துறை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு மாநிலங்களில் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் வாச்சாத்தி தீர்ப்பு மேற்கோள் காட்டப்பட்டு வருகிறது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பலரும், இது தொடர்பான விபரங்களை கேட்டுநம்மை தொடர்பு கொள்கின்றனர்.நாங்கள் வாச்சாத்திக்கு சென்று வந்த பிறகு, 1992 ஜூலை மாதம் 18ந் தேதி தீக்கதிர் இது தொடர்பான செய்தியை வெளியிட்டது. அன்று துவங்கி வாச்சாத்தி குறித்த அனைத்து செய்திகளையும் வெளியிட்ட பத்திரிகை, தீக்கதிர் நாளிதழ் என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். இந்த நிலையில் நேற்றைய இதழில் (2021 ஜூன் 22) இடம் பெற்றுள்ள குறிப்பு பற்றி இந்த விளக்கம் தரப்படுகிறது.

1. நேற்றைய செய்தியில், வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாலியல்வன்முறையில் ஈடுபட்டனர் என்பது தவறானது. 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது வாச்சாத்தி கிராமத்திற்கு வெளியே உள்ள ஏரியில்.

2. 34 பேர் உயிரிழந்தனர் என்று குறிப்பிட்டிருப்பது மிகத் தவறானது. உயிரிழப்பு எதுவும் இல்லை.

3. அரூர் காவல் நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலை புகார் பதிவு செய்தார் என்பதும் தவறானது. அவர் அப்போது சட்டமன்ற உறுப்பினர் இல்லை. பாதிக்கப்பட்ட 18 பெண்கள் அரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால், தமிழக காவல்துறையால் எப்.ஐ.ஆர். கூட போடப்படாத வழக்கு இது.

4. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம் அவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்பதும் தவறானது.உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் தோழர் ஏ. நல்லசிவன் அவர்கள். உச்சநீதிமன்றம் “எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக வழக்கை விசாரிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதே தவிர, செய்தியில் குறிப்பிட்டிருப்பதைப் போல அரசுக்கு அல்ல.”

5. இந்த வழக்கு 1996ஆம் ஆண்டு சி.பி.ஐ.விசாரணைக்கு மாற்றப்பட்டது என்பதும் தவறானது. 24.2.1995 அன்று சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. 23.4.1996ல் விசாரணை அறிக்கையை சி.பி.ஐ. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விட்டது. அதேபோல், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் அல்ல. கோவை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

6. அடையாள அணிவகுப்பு சேலம் சிறை மைதானத்தில் நடைபெற்றது. ஆனால், அதற்கு யாரும் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்படவில்லை. நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் அவர்களை அழைத்து வந்திருந்தனர்.

7. 108 பேர் காவல்துறையினர், இவர்களில் ஒரு துணை ஆய்வாளரும் என்பது சரியல்ல. ஒரு துணை காவல் கண்காணிப்பாளர் உள்பட பல ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள். வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட அனைவரும் குற்றவாளிகள். உயிரோடு இருந்த குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை. எவரும் விடுவிக்கப்படவில்லை. சீருடைப் பணியாளர்கள் இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் தண்டனைக்குள்ளானது இந்த வழக்கில் தான்.வாச்சாத்தி கிராம பழங்குடியினரும், செங்கொடி இயக்கத்தின் தோழர்களும் சேர்ந்துநடத்திய ஈடுஇணையற்ற போராட்டம் அது. இந்த உண்மையான விபரங்கள் மட்டுமே மக்களைச் சென்றடைய வேண்டுமென்ற நோக்கத்தில் தான் இந்த விளக்கம்.

கட்டுரையாளர் : பெ.சண்முகம், மாநில துணைத் தலைவர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்.

;