articles

img

கொரோனா இரண்டாம் அலையில் மக்களுக்காக நீந்திய மாணவர்கள்...

இந்திய மாணவர் சங்கம் அமைப்பிற்கு கோடானு கோடி நன்றிகள் என பெருமிதத்துடன் ஊடகங்களின் முன் அறிவிக்கிறார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் அவர்கள்.அப்படி என்ன செய்தார்கள் இம்மாணவர்கள்! கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த போது, ஊரே வெறிச்சோடிக்கிடந்தது.

 இந்திய மாணவர் சங்கமோ தன் உயிரையும் பொருட்படுத்தாது மக்களை காக்க மாணவர்களை மருத்துவமனைக்கு அனுப்பியது. மக்களை காக்க வேண்டிய சமூகப் பொறுப்பு நமக்கு தான் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட்டது. கொரோனா முதல் அலையிலேயே அரசுடன்இணைந்து களத்தில் நின்றது. ஆகவே தான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இரண்டாம் அலையிலும் மக்களைக் காக்க இந்திய மாணவர் சங்க தோழர்களை அழைத்தார்.10-5-2021 முதல் இந்திய மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜாய்சன் தலைமையில் 36 தோழர்கள் இரவு பகல் பாராது 50 நாட்களுக்கும் மேலாககொரோனா நோயாளிகளுக்கு உணவு அளிப்பது முதல்G கொரோனா தடுப்பூசி போட வருபவர்களின் விவரங்களை கணினி மற்றும் பதிவேட்டில் பதிவு செய்வது;

$ அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்கு வருகிறவர்களின் விபரங்களை அலைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வது;

$  பரிசோதனைக்கு பிறகு வரும் முடிவுகளை கணினியில் பதிவேற்றம் செய்வது;

$ அரசு மருத்துவமனைக்கு வருபவர்களின் தேவையறிந்து உதவி செய்வதற்கு ஹெல்ப் டெஸ்க் அமைத்து உதவுவது;

$  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விவரங்களை பதிவு செய்வது;

$  பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்வது, மருத்துவமனையில் லிப்ட்டை இயக்குவது;

$  கொரோனா கட்டுப்பாட்டு மையத்துக்கு கோவிட் கண்ட்ரோல் ஹோம் வரும் நோயாளிகள் குறித்த தகவல்களை வார்டுகளுக்கு செல்லும் தன்னார்வலர்களுக்கு பதிலைப் பெற்று உரிய அதிகாரிகளுக்கு  தகவல் கொடுப்பது;

$  நோயாளிகளின் நிலையை மருத்துவர்கள் மூலம் அறிந்து அதனை உறவினர்களுக்கு தகவல் கொடுப்பது என காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளிலும் சுழற்சிமுறையில் மாணவிகள் உள்ளிட்டு தங்கள் பணிகளை செய்து வருகின்றனர். 

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாத மாணவர்களின் அளப்பரிய சேவையை, அர்ப்பணிப்பை நேரடியாக உடனிருந்து பார்த்ததால் தான் ஊடகங்கள் மத்தியில் மருத்துவக்கல்லூரி முதல்வர்  இந்திய மாணவர் சங்கத் தோழர்களுக்கு தங்கள் அன்பை கோடானு கோடி நன்றி என வெளிப்படுத்தினார் .

தமிழகம் முழுவதும் களத்தில்..
தூத்துக்குடியில் மட்டுமல்ல; விருதுநகர், தஞ்சாவூர்,கடலூர், திருப்பூர், நாமக்கல், புதுச்சேரி, திருவள்ளூர் செங்கல்பட்டு என ஒன்பது மாவட்டங்களில் தினமும் 130 மாணவர்கள் வீதம் 50 நாட்களில் 5000 மாணவர்கள் வரை பணியாற்றியுள்ளனர். தஞ்சாவூரில் மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அரவிந்தன் தலைமையில் 15 தோழர்கள் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் வருபவர்களுக்கு ஆக்சிஜன் கொடுப்பது; நோயாளிகளுக்கு உணவு கொடுப்பது, போக்குவரத்தை சரி செய்வது, சவக்கிடங்கில் வெளியே கொண்டு செல்லும் உடல்களை அடையாளம் கண்டு கணக்கிடுவது;ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்திகளை ஓட்டிச் செல்வது என எத்தனையெத்தனை பணிகள். மாவட்ட நிர்வாகமே ஏற்பாடு செய்து கொடுத்த ஆக்சிஜன் செறிவூட்டிருத்தப்பட்டுள்ள இரண்டு வாகனங்களை மாணவர் சங்கத் தோழர்களிடம் முழுமையாக நிர்வாகம் ஒப்படைத்தது. அவ்வாகனங்களை முறையாக இயக்குவது என தற்போதும் பணிதொடர்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் மாணவர் சங்க மாநிலத்தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமையில் 25 தோழர்கள் மருத்துவமனையில் பணி செய்து வருகின்றனர்.மேலும் தமிழகத்தில்பல பகுதிகளில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கியும், கபசுரக் குடிநீர் அளித்தும், திருநங்கைகளோடு இணைந்து  மக்களுக்கு மளிகை பொருட்கள் கொடுத்தும், ரத்ததானம் வழங்கியும்,விழிப்புணர்வு நாடகம்நடத்தியும்,உழைப்பு தானம் செய்தும், ஹோமியோபதி மருந்து கொடுத்தும், கிராமங்களில் மக்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனைகள் செய்தும்... என பல்வேறு பணிகளை மக்களுக்காக இந்தியமாணவர் சங்கம் தற்போது வரை தொடர்ந்து செய்து வருகிறது.

 ‘தமிழகத்திற்கே வழிகாட்டி’
கொரோனா பேரிடர் இரண்டாம் அலையை தொடர்ந்து மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்ற மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களுக்காக மருத்துவமனையில் பணி செய்யும் இந்திய மாணவர் சங்க தோழர்களைப் பார்த்து  “யாரும் செய்ய முன்வராத இப்பணியை நீங்கள் முன்வந்து செய்து இருக்கிறீர்கள்” எனமனதார பாராட்டியதோடு, “தமிழகத்திற்கே நீங்கள்தான் வழிகாட்டி” என வியந்து பேசினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தூத்துக்குடி  நாடாளுமன்ற உறுப்பினர்    கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்களும் மாணவர் சங்கத் தோழர்களை நேரில் சந்தித்து பாராட்டினார்கள்.

கற்றதும் பெற்றதும் 
கொரோனா பேரிடர் மக்களிடையே பெரும் இணைப்பைஉருவாக்கியிருக்கிறது. யாரென்று தெரியாதவர்கள் கூட மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லும் இடமாக மருத்துவமனை மாறி இருக்கிறது. கவலைப்படாதீங்க, பயப்படாதீங்க, தைரியமா இருங்க என்ற வார்த்தைகள் மருத்துவமனைகளில் நிரம்பிக் கொண்டிருந்த அதே வேளையில் நாங்கள் இருக்கிறோம், கவலை வேண்டாம் என உடன் நின்றது இந்திய மாணவர் சங்கம். மருத்துவமனையில் நோயிலிருந்து குணமாகி வீடு செல்லக்கூடிய பல பேர் தங்கள் அன்பை வெளிக்காட்டும் விதமாக அலைபேசி எண்ணைப் பெறுவதும், வீடுகளுக்கு அழைப்பதும், ஏதாவது உங்களுக்கு செய்ய வேண்டும்; இதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என வற்புறுத்துவதும்,  பெத்தபிள்ளை கூட செய்யாததை சங்கப்பிள்ளைகள் செய்யுது எனவும் பலவாறு மக்கள் தங்கள் அன்பை வெளிக்காட்டினர்.  நாம் அவர்களுக்கு பெரிதாக ஏதும் செய்துவிடவில்லை. அன்பாக அவர்களிடம் பேசி  நம்பிக்கையை ஏற்படுத்தினோம். சில உதவிகளைச் செய்தோம். இந்த நம்பிக்கைக்கும், உதவிக்கும் அவர்கள் நம்மிடம் அன்பைஅள்ளிக் கொடுக்கிறார்கள்.

மகத்தானவர்கள் இவர்கள்
முழுக் கவச உடை போட்டுக்கொண்டு பணி செய்வது என்பது மிகவும் சவாலான ஒரு பணியாகும்.  மூன்று மணி நேரத்தில் வியர்வையில் நனைந்து சோர்வாகிவிடுகிறோம்.மருத்துவர்களும், செவிலியர்களும் நாள்முழுவதும் இத்துன்பத்தைத் தாங்கிக் கொண்டு தினமும் மக்களுக்காக களத்தில் எங்களையும் இணைத்துக் கொண்டு பணிகளை முன்னெடுத்து வருவது பாராட்டுக்குரியது.எப்போதும் தங்களுக்கு சமமாக நடத்துவதோடு, நாட்கள் செல்லச், செல்ல உறவுமுறையில் அன்பாக அழைக்கும் அளவிற்கு எங்களோடு பழகியதும் எங்கள் பணிக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறோம்.

கொரோனாவிற்கு எதிரான போரில் இந்தியாவில் இதுவரை 800 மருத்துவர்கள் வரை நோய்க்கு பலியாகி உள்ளனர்.இலவச மருத்துவகாப்பீடு இதுவரை இறந்த மருத்துவர்களின் அனைத்து குடும்பங்களுக்கும் சென்றுசேரவில்லை. மோடியோ ஹெலிகாப்டரில் மலர்தூவியும்,கைதட்டியும் மருத்துவர்களை ஏளனப்படுத்தியதோடு, கைவிட்டுவிட்டார். உண்மையான போர்வீரர்கள் மருத்துவர்கள். இந்திய குடிமகனின் சராசரி வயது 67.9. ஆனால்மருத்துவருக்கோ வயது 57-59. காரணம் பணிச்சுமை, மன அழுத்தம். தன் உயிரைப் பணயம் வைத்து பல உயிர்களைக் காப்பாற்றும் இவர்களை பாதுகாக்க வேண்டியதுஅரசின் கடமை. அரசாங்கத்தால் வஞ்சிக்கப்பட்டாலும் அறத்தோடு களத்தில் நிற்கும் இவர்கள் பாராட்டப்படவேண்டியவர்களே.

அரசு செய்ய வேண்டியது   
இந்த மகத்தான பணியின்போது, அரசு மருத்துவமனைகளின் நிலையையும், தேவைகளையும் உன்னிப்பாக கவனிக்க முடிந்தது.அரசு மருத்துவமனைகளில் போதுமான குடிநீர், கழிப்பறை வசதிகள், குறைந்த விலையில் தரமான, சுத்த
மான உணவகம். கட்டணம் இல்லா பரிசோதனைக் கூடங்கள், எப்போதும் மக்களுக்கு  அனைத்துவகை  இரத்தம்  கிடைக்கும் இரத்தவங்கி, கட்டணம் இல்லா வாகனம் நிறுத்துமிடம். அனைத்து பரிசோதனைக்கூடங்களும் அமைத்துக்கொடுக்க வேண்டும்.செயல்படாத அனைத்து கருவிகளையும்,பொருட்களையும் அப்புறப்படுத்தி, புதிய கருவிகளை பொருத்த வேண்டும். மேலும் அரசுமருத்துவமனைகளுக்கு  கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப போது
மான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர் அல்லாத காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவமனைகளை உருவாக்கவேண்டும். மருத்துவமனைகளில் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்காமல் தேவையான நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும்.மருத்துவமனைகளை நவீனப்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர் : வீ.மாரியப்பன், மாநிலச்செயலாளர் இந்திய மாணவர் சங்கம்

;