articles

img

வஞ்சகம் செய்த அரசுகளுக்கு திட்டப் பணியாளர்களின் பதிலடி காத்திருக்கிறது....

பெண்களை “அதிகாரப்படுத்துதல் அல்லது பெண்களின் நிலையை மேம்படுத்துதல்” குறித்து நாம் அதிகம் பேசி வருகிறோம்.  அரசும் பேசி வருகிறது.  ஆனால், உண்மையில் நமதுஅரசாங்கம் நமது பெண்களின் நிலையை மேம்படுத்த என்ன செய்கிறது?   அவர்கள் செய்யும் வேலைகளை இந்த அரசாங்கம் அங்கீகரிக்கிறதா?  அதற்குரிய மதிப்பினை சரியாக அளிக்கிறதா?  பல நேரங்களில் அவர்களின் வேலைகள் “குறை மதிப்பீடு” செய்யப்படுகிறது. அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களில் பணியாற்றும் பெண்களே இதற்கு சாட்சி.  அவர்களின் வேலைகளே இதற்கு பொருத்தமான உதாரணங்கள். 

 திட்டப்பணியாளர்கள்
ஐசிடிஎஸ் என்று சொல்லப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் அங்கன்வாடி ஊழியர்கள், மதிய உணவுத் திட்டப் பணியாளர்கள், ஒப்புதல் அங்கீகாரம் பெற்ற சமூகசுகாதார ஆர்வலர்கள் எனப்படும் “ஆஷா”க்கள், நகர்ப்புறசமூக சுகாதார ஆர்வலர்கள் “உஷா”க்கள், என்ஹெச்எம் எனப்படும் தேசிய சுகாதார பணியாளர்கள் போன்றவர்களைத் தான் அரசு “திட்டப்பணியாளர்கள்” என்கிறது.   இன்றைக்கு இவர்களோடு சேர்த்து, டிபிசி பணியாளர்கள் எனப்படும் - வீடுகளில் நோய் பரப்பும் கொசுப்புழுக்கள் பரவுகின்றனவா என்பதை கண்காணிக்கும் - கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்களையும் அவ்வப்போது பணிக்கு அமர்த்துவதும் துரத்துவதும் நடக்கிறது.  இவர்கள் சீசனல் பணியாளர்கள்.  மழைக்காலத்தில் கொசுக்களின் மூலம் நோய் பரவும் போது பணிக்கமர்த்தப்படுவார்கள்.  பிற நேரங்களில் துரத்தப்படுவார்கள். 

இவர்கள் என்ன செய்கிறார்கள்?
இந்த நாட்டின் ஏழை எளிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்தினை சமைப்பதும் ஊட்டுவதும், அவர்களின் உடல் நிலையை கவனித்துக் கொள்வதும் இவர்களது பணி.  இவர்கள் இது வரையில் “தொழிலாளர்களாகக்” கூட அங்கீகரிக்கப்படவில்லை.  ‘தொழிலாளர்’ என்று அங்கீகரித்துவிட்டால் அவர்களுக்கு கால முறைஊதியம் வழங்க வேண்டும், பென்சன் வழங்க வேண்டும், வயது மூப்பின் போது கருணைத் தொகை வழங்கவேண்டும்.  எனவே அரசு இவர்களை தொழிலாளர்களாகவே அங்கீகரிக்க மறுக்கிறது.  இவர்களை இந்த சமூகத்திற்கு தொண்டு செய்யும் “சமூக ஆர்வலர்களாக” பட்டம் சூட்டி, அவர்களுக்கான ஊதியத்தை “‘ஹானரரியம்” என்ற பெயரில் அல்லது “இன்சென்ட்டிவ்” என்ற பெயரில் வழங்கி வருகிறது.  அதாவது “கவுரவ ஊதியம்” அல்லது “ஊக்கத் தொகை” இவ்வளவு என்று நிர்ணயித்து வழங்கி வருகிறது.  அவர்கள் வீடுகளில் செய்யும் குடும்பப் பராமரிப்பு வேலையைத் தானே சமூகத்தில் சமூகத்தின் அங்கத்தினர்களை பராமரிக்க செய்கின்றனர் என்று இந்த அரசாங்கம் பார்க்கிறது.  அதனால் இவர்களை சேவைப் பணியாளர்களாக அரசு நினைக்கிறது.  நடத்துகிறது. 

அன்றே சொன்னோம்...
இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்பதை ஆதாரப்பூர்வமாக பேரா.ஜெயதி கோஷ் உள்ளிட்ட சமூகப் பொருளாதார ஆர்வலர்கள், வல்லுநர்கள் பல காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.  பெண்கள் வீடுகளில் செய்யும் “சம்பளம்கொடுபடா வேலைகளான” சமையல், தண்ணீர் கொணர்தல், குழந்தைகள் மற்றும் வயதான பெரியவர்களின் பராமரிப்பு, விறகு சேகரித்தல், ஆடு மாடு கோழி வளர்ப்பு மற்றும் குடிசைத் தொழில்களில் செய்யும் உதவி போன்ற அனைத்தும் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கவில்லை என்று சொல்ல முடியுமா?  ஒரு நாளில் ஆறு மணி நேரத்தினை இது போன்ற பணிகளுக்கு செலவிடும் பெண்களின் வேலைகளை அங்கீகரிக்க மறுக்க முடியுமா?  2020ம் ஆண்டில் இந்திய நாட்டின் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு உழைப்பு விகிதம் தெற்காசியாவிலேயே மிகக் குறைந்த விகிதத்திற்கு - 20.3 சதத்திற்கு சென்றுவிட்டது என்று உலக வங்கி ஜுன் 2020ல் தெரிவித்துள்ளது.  உண்மையில் பெண்களின் வேலைகளை “வேலை”யாக அங்கீகரித்திருந்தால், 86.2 சதம் என்பது தான் பெண் தொழிலாளர்களின் உழைப்பு விகிதத்தின் பங்கேற்பு விகிதமாக இருந்திருக்கும்.  பெண்கள் செய்யும் இந்த வேலைகளை “வேலை” என்றேஅங்கீகரிக்க மறுத்ததன் விளைவு தான், இன்று இதன் நீட்சியாகப் பார்க்கப்படும் திட்டப் பணியாளர்களின் வேலைகளும் “குறை மதிப்பீடு” செய்யப்படுகின்றன. 

“தொழிலாளர்களாக” ஆக்க நடத்தும் தொடர்ச்சியான போராட்டங்கள்
இன்றைக்கும் பெண்கள் தங்கள் வேலைகளை அங்கீகரிப்பதற்காக, குறைமதிப்பீடு செய்யக்கூடாது என்பதற்காக, சம வாய்ப்புகளுக்காக, சம ஊதியத்திற்காக, மகப்பேறு விடுப்பிற்காக, குழந்தைகள் பராமரிப்பு மையங்களுக்காக தங்கும் விடுதிகளுக்காக, பாதுகாப்பான, பாலியல்தொந்தரவுகள் இல்லாத பணிச்சூழலுக்காக, தங்களின் கண்ணியத்திற்காக இந்நாட்டின் பிரஜைகள் என்ற முறையில் சம உரிமைகளுக்காக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  திட்டப் பணியாளர்களோ எங்களை தொழிலாளர்கள் ஆக்குங்கள் என்றும் கவுரவ ஊதியம் வேண்டாம், காலமுறை ஊதியம் வேண்டும் என்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர். 

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம்
கடந்த ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாட்டில் சத்துணவு பணியாளர்களின் வீரம் செறிந்த போராட்டங்களை பார்த்தோம்.  அங்கன்வாடி ஊழியர்கள் இரவும் பகலுமாகநான்கு நாட்கள்  காத்திருப்புப் போராட்டம் நடத்தியதை பார்த்தோம். இரவும் பகலும் அவர்கள் பாம்பு, பல்லி, பூரான், தேள் மத்தியில் இருட்டில் இருந்ததையும், இயற்கை உபாதையை கழிக்கக்கூட ஒதுங்கும் இடம் இல்லாமல், குடிக்க தண்ணீர் இல்லாமல், குழந்தைகளுடன்  சாலையோரத்தில் தங்கியிருந்தபோது அரசு அவர்களுக்கான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காததையும், பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யாததையும், சங்கங்களில் செய்த பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளையும் காவல் துறையை வைத்து அப்புறப்படுத்தியதையும் பார்த்தோம்.  4 நாட்களின் முடிவிலும் எந்தவித பேச்சு வார்த்தையையும் முறையாக நடத்த மறுத்ததையும் பார்த்தோம்.  தேர்தல் விதிகளின் கீழ் ஒத்தி வைக்கப்பட்ட இந்தபோராட்டத்தில் அந்த பெண் தொழிலாளர்கள் மிக மோசமாக தமிழக அரசாங்கத்தினால் வஞ்சிக்கப்பட்டார்கள்.  பெண் தொழிலாளர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடியதற்காக “மெமோ” வழங்குவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

பதிலடி கொடுப்போமா?
இவற்றுக்கெல்லாம் உச்சபட்சமாக இன்னொன்றும் நடக்கிறது. மேற்கண்ட தேசிய திட்டங்களை தனியார்மயமாக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.  சில இடங்களில்அரசின் இந்த சேவைகள் - கடமைகள் தனியார்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன.  இந்த நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் தனியாருக்கு அடகு வைக்கப்படுகிறது.கல்வியாகட்டும், மருத்துவ சுகாதாரமாகட்டும், ஊட்டச் சத்தாகட்டும் இந்த எஸ்.எஸ்.ஏ, என்சிஎல்பி, என்ஹெச்எம், என்ஆர்எல்எம், ஐசிடிஎஸ். மதிய உணவு திட்ட ஊழியர்கள் இல்லாமல் இந்தியாவில் அடிப்படை சேவைகள் இல்லை எனும்போது, இவர்கள் தான் நாட்டு மக்களுக்கான அடிப்படை சேவைகளை செய்ய அரசுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள் எனும்போது, பாலினரீதியாக சில வேலைகளை ஒதுக்கி வைத்து கடுமையான சுரண்டலுக்கு இவர்களை ஆட்படுத்துவதோடு சம ஊதியத்தையும் மறுத்து, பாதுகாப்பற்ற பணிச் சூழலில் இவர்கள் பணியாற்றக் காரணமாய் இருக்கும் இந்த அரசாங்கம் இன்று மக்களின் முன் அம்பலப்பட்டுப் போய் நிற்கிறது. 

கொரோனா காலக்கட்டத்தில் பெருந்தொற்று பரவாமல்தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இந்த திட்டப் பணியாளர்களின் பணி அளப்பரியது.  முன்களப் பணியாளர்களாக எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் முறையாக வழங்கப்படாமல் பல உயிர்களை இழந்து இவர்கள் ஆற்றிய பணி தான் அடி மட்ட அளவில் நோய் பரவல்  கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கு பெரிதும் உதவியது.  இன்னும் சொல்லப் போனால், பல மாநிலங்களில் இவர்களுக்கு இந்த வேலைகளுக்காக மிகவும் குறைவாக அரசு அளிப்பதாக உத்தரவாதப்படுத்திய தொகையைக் கூட அளிக்காமல் பல மாதங்களாக வைத்திருக்கிறது.  அப்படி இருக்கையில் அரசாங்கம் இவர்களை சுய விருப்பப்பணியாளர்கள் என்று பெயரிட்டு கடுமையாக சுரண்டுவது அவமானத்திற்குரியது.   
“ஊக்கத் தொகை”யோ அல்லது “கவுரவத் தொகை”யோ இனி யாருக்கும் வழங்க வேண்டியதில்லை, என்ன செய்ய வேண்டும் என்று இனி தனியார்கள் தீர்மானித்துக் கொள்வார்கள் என்ற போக்கு தான் இது.  இதற்கெல்லாம் நமது திட்டப் பணியாளர்கள் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார்கள் என்பதை ஏப்ரல் 6 தீர்மானிக்கும். 

கட்டுரையாளர் : ஆர்.எஸ்.செண்பகம்,  சிஐடியு நெல்லை மாவட்டத் தலைவர்.

;