articles

img

உயர்மின் கோபுரங்களும் பறிபோகும் விவசாயிகளின் நிலங்களும்....

1946ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்13ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் பற்றியதீர்மானத்தை முன்மொழிந்து நேரு பேசினார்.  நேரு முன்மொழிந்து பேசிய தீர்மானத்தின் மீது டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் சில திருத்தங்களை முன்மொழிந்து அக்கட்டத்தில் பேசினார்.

சமூக, பொருளாதாரம் தொடர்பான  திட்டவட்டமான வழிமுறைகள் தீர்மானத்தில் இடம் பெற்றிருக்கவேண்டும், தொழில்கள் தேசியமயமாக்கப்படுதல்,  நிலம் தேசியம் ஆக்கப்படுதல் ஆகிய திட்டங்கள் தீர்மானத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்,  எதிர்கால அரசாங்கத்தின் பொருளாதாரம் ஒரு சோஷலிஸ்ட் பொருளாதாரமாக இருக்கவேண்டும் என்று பேசினார். ஆனால் இன்றுஒன்றிய அரசு அனைத்து பொதுத்துறைகளையும் தனியார் மயமாக்கி வருகிறது.மின்சாரம் அரசின் துறையாகவும் சேவைத்துறையாகவும் இருப்பதால்தான், ஓரளவிற்கு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், சிறு தொழில்களுக்கு சலுகை விலை மின் கட்டணம்  வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசுதேவையான மின்சாரத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு மின்சார துறையை தங்கத்தட்டில் வைத்து தாரை வார்த்து கொடுக்கின்றது.

15 நாள் போராட்டம்
தமிழ்நாட்டில் பவர்கிரிட் நிறுவனமும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் மின்கோபுரங்களை அமைத்து வருகின்றன. அரியலூர் மாவட்டத்தில் இருந்து  புகளூர்,பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருவலம் ஆகியவற்றில் 400கி.வோ உயர்மின் அழுத்த கோபுரங்கள் பவர்கிரிட் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு சத்தீஸ்கர் மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.2018 இல் தொடங்கப்பட்ட இத்திட்டம் அன்றைய ஆட்சியாளர்களின் உதவியுடன் மின்பாதை அமைக்கப்பட்டு நிலங்களுக்கு உரிய விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்காமல் உயர்மின் கோபுரங்களை அமைத்தது. நிலத்திற்கு, பயிர்ச் சேதாரம், கிணறு, வீடு, மரங்கள் ஆகியவற்றுக்கு உரிய இழப்பீடு தொகை அரசு வழங்க வேண்டும் என்றகோரிக்கையை வலியுறுத்தி 2019 ஜனவரி மாதம் திருவண்ணாமலை மாவட்டம்,  கீழ் அரசம்பட்டு கிராமத்தில் பதினைந்து நாட்கள்தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. நீண்ட தொடர் போராட்டத்தின் விளைவாக திருவண்ணாமலை மாவட்டஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி தலைமையில்  விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது.  பவர் கிரிட்நிறுவனம் மேற்கண்ட வகைகளுக்கு உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு  கொடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.  ஆனால் பவர்கிரிட் நிறுவனம் தொடர்ந்து விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.  

வெறும் 150 ரூபாய்?
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர், மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்ற வள்ளுவன் வாக்குப்படி வணங்கப்படவேண்டிய விவசாயிகள் எப்படி ஏமாற்றப்படுகின்றனர் என்பதற்கு உதாரணம் கீழ்பெண்ணாத்தூர் வட்டம் ஊதப்பூண்டி கிராமத்தில், கண்ணன், த/பெ  சின்னத்தம்பி, புஞ்சை நிலம், சர்வே எண் 4/4,  4/7, 4/8, 4/9  பவர்கிரிட் உயர் மின் அழுத்த கம்பங்கள்நிறுத்தப்பட்டு வருகின்றன. வருவாய்த்துறையினரால் நிலத்திற்கான இழப்பீடாக ஒரு சென்ட் நிலத்திற்கு 150 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அதே இடத்தில் அவர்கிரையம் பெற்ற பொழுது ஒரு சென்ட் நிலத்தை 11,500  ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.  எவ்வளவு வித்தியாசம்? விவசாயிகளிடமிருந்து பவர் கிரிட் நிர்வாகம் பகல் கொள்ளையடித்து உள்ளது.  மின்பாதை செல்லும்நிலத்திற்கு மதிப்பு இல்லாமல் போகும்.பொதுப்பணித்துறையின் மதிப்பீட்டின்படி 14 மீட்டர் ஆழம் வரை உள்ள திறந்தவெளி கிணறுகளுக்கு ரூ.12  லட்சத்து 74 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தற்போது திறந்தவெளி கிணறுகளுக்கு ரூ.4 லட்சம் திருவண்ணாமலை மாவட்டத்தில்  வழங்கப்படுகிறது.  மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு  உரிய இழப்பீடு வழங்க உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.

கி.மீ.க்கு ரூ.4.5 கோடி
4 .1. 2019 அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, உயர் மின்கோபுரம் மற்றும் மின் பாதை அமைக்கும் பணிகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட வேண்டும், எவ்வளவு வழங்கப்பட்டு வருகிறது  என்று கேட்டதற்கு, அன்றைய  அதிமுக அரசின் மின் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மின் கோபுரம் மற்றும் மின் பாதை செல்லும் கிலோ மீட்டர் தூரத்திற்கு விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.நாலரை கோடி ரூபாய்வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.

10 மடங்கு இழப்பீடு
உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு அரசாணை 54 / 2020 இன்படிசந்தை மதிப்பில் 10 மடங்கு இழப்பீடு வழங்கவேண்டும், மேலும் அனைத்து வகையான மரங்களுக்கும் முதிர்வு கால பயன் அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும்.உயர் மின் கோபுரம் மற்றும் மின் பாதை செல்லும் விவசாயிகளுக்கு மாதாந்திர வாடகை கொடுத்திட வேண்டும்.உயர் மின் கோபுரத்தில் கிணறு 30X30 மீட்டர் அளவீடாக கணக்கிட.  அதற்குள் வரும் திறந்தவெளி கிணறுகளுக்கு பொதுப்பணித்துறை  தீர்மானித்த ரூ. 12 லட்சத்து74 ஆயிரம் வழங்க வேண்டும்.தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம்7 65 கிலோ வாட் உயர் மின் கோபுரத்தில்பாதிக்கப்படும் அனைத்து விவசாயிகளுக்கும் சட்டப்படியான இழப்பீடு வழங்க வேண்டும்.மக்கள் நல திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வரும் தற்போதைய தமிழக அரசு மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  பவர் கிரிட் மின் பாதைசெல்லும் மாவட்டங்களில்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர்கள் தலைமையில் வரும் 7.9 .2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள்நடத்தும் மனு கொடுக்கும் போராட்டம் வெற்றி பெறட்டும்.

கட்டுரையாளர் : எம்.வீரபத்ரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர், சிபிஎம், திருவண்ணாமலை மாவட்டம் 

;