articles

img

சமூகத்தின் மீது அளவற்ற அன்பில் விளைந்த பெருந்துணிச்சல்....

எல்லோரும் விலகிப் போனநிலையில், தன் தாயாரை காப்பாற்றும் போராட்டத்தில், அந்த பெண் அன்று உயர்ந்த மனிதநேயத்தை கண்டார். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தன் தாயார் அரசு மருத்துவமனை வந்ததும் ஆம்புலன்சிலிருந்து இறங்கமுடியாமல் சிறுநீர் கழித்து விட, தோழர் மணிகண்டன் தனது கைகளால் அந்தத் தாயாரைதூக்கி இறக்கிய போது, தோழர் மணிகண்டன் அப்போது நிச்சயமாக தெய்வமாகத்தான் தெரிந்திருப்பார். தனது கைகளைப் பற்றி நன்றி சொல்லும்போது அந்தப் பெண்ணின் கண்களில் நீர் வழிந்து கொண்டே இருந்தது.

கொரோனா தொற்றின் உச்சத்தில்மக்கள் ஆம்புலன்சுக்கும், மருத்துவமனை களுக்கும் பதறித் தவித்துக் கொண்டிருந்த கொடூரமான நேரம். உதவி மையத்திற்கு வந்த அழைப்புகளில் பலர் ஆம்புலன்சுக்காக படுகிற பாடுகளை உணர்ந்து, நம் தோழர்களின் சொந்த வாகனங்கள் 4 ஆம்புலன்சாக மாறியது.மே 18 முதல் இதுவரை சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை காத்த வாகனமாக காக்கும் வாகனமாக திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி, ஜெய்வாபாய் ஸ்கூல், சந்திரகாவி ஆகிய சென்டர்களிலிருந்து, அரசு மருத்துவமனைக்கும், நகரின் பல பகுதி மக்களுக்காக பல மருத்துவமனைகளுக்கும் திருப்பூரின் திசையெங்கும் இரவு, பகல் பாராமல் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது.

மணிகண்டன் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர்), வேணுகோபால் (யோகா ஆசிரியர்), வாலிபர் சங்க நிர்வாகிகள் தீபன், விஜய், துரை சம்பத் ஆகியோருக்கு, ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்களாக கிடைத்த ஈரம் கசியும் அந்த அனுபவங்களை சொல்லி மாளாது.சிக்கண்ணா கல்லூரி சென்டரிலிருந்து, மூச்சுத் திணறி துடித்துக் கொண்டிருந்த தாயாரை அருகில் அமர்ந்து நெஞ்சை தடவிக் கொண்டே தைரியப்படுத்திய மகனின் துடிப்பு தோழர் விஜய்க்கும் ஏற்பட்டது.‘‘அந்த தாயார் எப்படியாவது பிழைத்து விட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அரசு மருத்துவமனையில் சேர்க்கும் போது மிக மோசமான நிலையில் இருந்தார். பின் சில நாட்கள் கழித்து வேறு ஒருவரை அட்மிட் செய்யும் போது, அந்த தாயார் படுக்கையில் நலமாக உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன். வாகனத்தை மருத்துவமனையின் வாயிலை கடக்கும் போது, அவரது மகன் அடையாளம் கண்டு கொண்டு கையசைத்தது எனக்கு மிகவும் உற்சாகம் ஏற்படுத்தியது’’ என்று விஜய் சொன்ன போது நமக்கும் உற்சாகம் தொற்றுகிறது.

ஊத்துக்குளியிலிருந்து தனது மனைவியை அரசு மருத்துவமனைக்கு அட்மிட் செய்யவந்த நடுத்தர வயதுடையவர், ஆம்புலன்சுக்குஎவ்வளவு கேட்பாங்களோ; ஏற்கனவே செலவுரொம்ப ஆயிருச்சு என்று சொல்ல; நோயுற்ற மனைவி, ஆட்டோவுலயே போயிருக்கலா, நீங்கதா அவசரப்பட்டு கூப்புட்டீங்க...என்றுமெதுவாக சொன்னது, வாகனத்தை ஓட்டியதோழரின் காதிலும் விழுந்தது. மருத்துவ மனையில் இறங்கும்போது அவர் தயங்கியவாறே எவ்வளவு சார் கொடுக்கனும் என்று கேட்க... எதுவும் வேண்டாங்க, எங்க அமைப்பு மூலம் இலவசமா நாங்க இதை செய்யறோம் என்று சொன்னதும் அவருக்கு நம்ப முடியாத ஆச்சரியம்.

நமது தோழரோ, இந்தாங்க என்று அவரிடம்மருந்து பொருட்களை வைக்க ஒரு துணிப்பை,ஒரு பாட்டில் குடிநீர், இரண்டு மாஸ்க்குகளையும் கொடுத்து, தைரியமா இருங்க; நல்லாகி விடும் என்று சொன்னபோது, அவர்கண்களில் நீர் கோர்க்க கரங்களை பற்றிக் கொண்டார். துவண்டு இருந்த அந்த பெண்ணின் முகத்திலோ நம்பிக்கையும், தெம்பும் மின்னுகிறது.நெகிழ வைக்கும் பல சம்பவங்கள் மட்டுமல்ல.‌.. பல துயரங்களையும் மறக்க முடியாது. பாரப்பாளையத்திலிருந்து, உயிருக்கு போராடியவரை எப்படியும் காப்பாற்றி விடலாம் என்று முயற்சித்தும் அவர் வாகனத்திலேயே மரணமடைந்த கவலை தோழர் தீபனுக்கு இப்போதும் இருக்கிறது.ஜெய்வாபாய் சென்டரிலிருந்து, ஆக்சிஜன்லெவல் குறைந்து மூச்சு விட துடித்துக் கொண்டிருந்த பெண்ணைக் காப்பாற்றிட அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு, ஆக்சிஜனுக்காக காத்திருக்க, முன்னால் வந்த ஒருவர் தனது தந்தையாருக்காக செவிலியரிடம் ஆக்சிஜனுக்காக கெஞ்சுகிறார். அப்போது அந்த செவிலியர் ‘‘இந்த ஆக்சிஜனைஎடுத்துதான் உங்க அப்பாவுக்கு வைக்கணும்.இதை எடுத்தா.. இவங்க உடனே இறந்துடுவாங்க.. பரவாயில்லயா?’’ என்றவர். ‘

‘பேஷன்டின் சீரியஸை பொறுத்து நாங்க ஆக்சிஜன்கொடுப்போம் பொறுங்கள்’’ என்று சொன்னபோது மிகவும் அதிர்ந்து போனேன். பொறுமையோடு அந்த பெண்ணுக்கு ஆக்சிஜன் ஏற்பாடுசெய்து விட்டு வந்தேன். அவர் பிழைத்தாரோ,என்னவோ? என்ற கவலை தோழர் வேணுவிற்கு இன்றும் இருக்கிறது.பேரபாயம் சூழ்ந்த தருணத்தில், மக்களுக்கு போற்றுதலுக்குரிய பெரும்பணியை தோழர்கள் மணிகண்டன், வேணுகோபால், தீபன், விஜய், சம்பத் உள்ளிட்டோர் அசாத்தியதுணிச்சலுடன் செய்து வருகிறார்கள்.முழு முடக்கம் காரணமாக ஆம்புலன்சுக்கான தடுப்பு ஏற்பாடுகளை கூட வாகனத்தில்செய்ய முடியாத நிலையில், தங்கள் உயிரைப்பற்றி கவலைப்படாமல் தொற்று பாதித்த வர்களை காப்பாற்ற ஏற்றிச் செல்லும் தைரியம் சாதாரணமானதா?சேவை உணர்வுகளால் மட்டும் செய்கிறசெயல் அல்ல இது. அசாத்திய துணிச்சல்களால் மட்டும் செய்கிற செயல் அல்ல இது. மனதெல்லாம் நிறைந்த மனித நேயத்தால் மட்டும்செய்கிற செயல் அல்ல இது. இவைகளோடு சேர்ந்து இந்த சமூகத்தின் மீது கொண்ட அளவற்ற அன்புதான் இந்த செயலைச் சாத்தியமாக்கியது.

கட்டுரையாளர்  : கே.ரங்கராஜ்,  சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர்

படக்குறிப்பு ; சிபிஎம் திருப்பூர் மாவட்டக்குழு அலுவலகமான தியாகி பழனிசாமி நிலையம் முன்பு இலவச ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் தயாராக காத்திருக்கும் தோழர்கள்.

;