articles

img

உங்களிடமிருந்தல்லவா தமிழை பாதுகாக்க வேண்டும்?

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது தமிழக கலாச்சாரத்தில் இந்தியா பெருமை கொள்கிறது என்று கூறியிருக்கிறார், அதுமட்டுமின்றி தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் உறுதி கொண்டுள்ளோம் என்றும் பேசியிருக்கிறார்,ஆனால் அவரும் அவரது அரசும் செய்வதென்ன? ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம்,ஒரு கலாச்சாரம்... என்று எல்லாவற்றிலும் அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப இந்தி,சமஸ்கிருதம், மொழிகளைத் திணிப்பதற்காகவே தேசிய கல்விக்கொள்கை என்ற - ஆர்எஸ்எஸ் அமைப்பின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் திட்டத்தை மாநிலங்கள் மீது திணிக்கிறார்கள்.

முதலில் கல்வி மாநிலங்களின் பட்டியலில் இருந்தது, பின்னர் பொதுப் பட்டியலாக்கப்பட்டது, இப்போது மாநிலங்களின் கருத்துக்களை கேட்காமல், அவற்றின் உணர்வுகளை, பாரம்பரியத்தை, சிறப்புத்தன்மையை மதிக்காமல், ஏற்றுக் கொள்ளாமல் அவர்களது ஒற்றைத்தன்மை திட்டத்தைஅனைத்து மாநிலங்கள் மீதும் திணிக்கிறார்கள், அதை இங்குள்ள அதிமுக ஆட்சியாளர்களும் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் எள் என்றால் இவர்கள் எண்ணெய்யாகி விடுகிறார்கள். தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம் எஜமான் என்கிறார்கள். சிறு எதிர்ப்பு,ஒரு முணு முணுப்பு கூட இல்லை.அதனால் மிகுந்த ஊக்கம் கொண்டு நமக்கு வாய்த்த அடிமைகள் மிக நல்லவர்கள் என்று பாஜகவினர் பாராட்ட, இவர்களோ, இதோ அவர்களே பாராட்டிவிட்டார்கள் என்று புளகாங்கிதம் அடைகிறார்கள். ‘‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா இவன் ரொம்ப நல்லவன்னு சொன்னாங்க. அதை நெனைச்சுத் தான் பொறுத்துக் கிட்டேன்னு” வடிவேல் ஒரு படத்தில் சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது.

செம்மொழியான தமிழுக்கு - தமிழ்வளர்ச்சிக்கு எவ்வளவு நிதிஒதுக்கியிருக்கிறது மத்திய அரசு என்பதையும் சமஸ்கிருதத்துக்கு எவ்வளவு ஒதுக்கியிருக்கிறது என்பதையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும் இவர்கள் தமிழ் மொழியை பாதுகாக்க உறுதி பூண்டுள்ளது,தமிழ் கவிஞர்களைப் புகழ்கிறார்கள், மன்னர்களைப் புகழ்கிறார்கள், திருவள்ளுவரையும் ஔவையாரையும் பாரதியாரையும் மேற்கோள் காட்டிப் பேசுகிறார்கள். ஆனால் அவை யாவும் வருவது உள்ளத்திலிருந்தல்ல, வெறும் உதட்டளவுதான் என்பதை அவர்களது நடவடிக்கைகள் காட்டிக் கொடுத்து விடுகின்றன.

திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப் போவதாகச் சொல்லி தருண் விஜய் என்பவரால் கொண்டு செல்லப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை சாக்கு மூட்டையில் வைத்து கட்டப்பட்டு கங்கை ஆற்றின் அருகே சுற்றுலா மாளிகையில் அனாதையாய் போடப்பட்டது, இவர்களின் தமிழ் பாதுகாப்பை புலப்படுத்துமே?மத்திய தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் அந்தந்த மாநில மொழிகளில் எழுதும் வாய்ப்பைப் பறித்தது தமிழ் மொழியையும் சேர்த்துத்தானே!மத்திய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரும் வாய்ப்பை ஒழித்துக் கட்டியது இவர்கள் தானே. கடும் எதிர்ப்புக் கிளம்பியதும் மாணவர்கள் கணிசமாக விரும்பினால், முடிந்தால் தமிழ் கற்பிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம் என்றுகூறியது இவர்களது தமிழ் பாதுகாப்பு உறுதிதானே!

இன்னும் நிறையச் சொல்லலாம் தான்.பிரதமர் மோடி ஆதரித்துப் பேச வந்த அவரது கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், வெற்றி வேல் வீரவேல் என்று கூறி வரவேற்றதால் வேறு வழியில்லாமல் அவரும் ‘வெற்றிவேல்’ என்று கூறி பேசத் தொடங்கினார் என்பது எப்படியாவது தங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதன்றி வேறென்ன?

எல்லா மாநிலங்களிலும் ஜெய்ராம், ஸ்ரீராம் சொல்ல முடியாது என்கிற யதார்த்த நிலைமையை மோடிக்கும் அவரது பரிவாரங்களுக்கும் பாஜகவினருக்கும் தமிழ்நாடு புரிய வைக்கும். உங்களது ஒற்றைத் தன்மை நாட்டுமக்களை ஒன்றிணைக்காது.ஏனெனில் இந்திய நாடு பன்முகத்தன்மை கொண்டது.உணவு, உடை, வழிபாட்டு முறை என பலவகை நம் நாட்டில் உள்ளபோது அதற்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவிப்பதும், அதற்கெதிராக சட்டம் கொண்டு வருவதும் உங்களது ஆக்கிரமிப்புச் சித்தாந்தத்தைத் தான் வெளிப்படுத்தும்.  வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற தன்மையே அனைவரையும் அரவணைத்துச் செல்லும். ஒருங்கிணைப்பை உருவாக்கும். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது எங்கள் தமிழ்மொழி. உங்களது தமிழ்ப்பாசமும் தமிழ்க் கலாச்சாரக் காதலும் வெறும் வெளிவேசம் என்பதை தமிழக மக்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள். உங்களது நடிப்பு இங்கு எடுபடாது நரேந்திர மோடி அவர்களே! நீங்கள் வந்து தமிழை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. உங்களிடமிருந்து தான்தமிழை பாதுகாக்க வேண்டிய அவசியம்தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது, அதை நாங்கள் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறோம். நாங்கள் ஏமாற மாட்டோம். ஏமாறப் போவது நீங்கள்தான். இங்கு தாமரை மலராது ஒருபோதும். அதற்கு தமிழ் மக்கள் உறுதி கொண்டுள்ளார்கள்.

கட்டுரையாளர் : ப.முருகன்

;