articles

img

குழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...

குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் நடத்திய ஒரு ஆய்வில் கொரோனா தொற்று நோய் பாதிப்பு காலத்தின்போது கடுமையாக பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

ஜூன் 12- ஆம் தேதி (சனிக்கிழமை) குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தத் தருணத்தில்  தமிழ்நாடு சிறுவர் உரிமைகள் கண்காணிப்பகம் (டி.என்.சி.ஆர்.டபிள்யூ) மற்றும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சாரம் (சி.ஏ.சி.எல்) ஆகியவைகுழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கீடு செய்வதற்கு ஒரு குழுவை அமைக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளன.தொற்றுநோய் காலத்தில் வேலை செய்த குழந்தைத் தொழிலாளர்களைக் கண்டறிந்து அவர்களை உடனடியாக பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டுமென இந்த அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரானபிரச்சார அமைப்பின் நிர்வாகி ஆர்.கருப்பசாமி அளிக்கும் தகவல்படி, “ தொற்றுநோய்களின் போது சில குறிப்பிட்ட பிரிவினரின் பெற்றோர்களின் குழந்தைகள் உழைப்பு   கிட்டத்தட்ட 280 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவலையொட்டி பள்ளிகள் மூடப்பட்டதால் வேலைக்குச் சென்றகுழந்தைகளின் விகிதம் 28.2 சதவீதத்திலிருந்து  79.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் 818குழந்தைகளிடையே நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 18.6 சதவீதம் குழந்தைகள் வேலைத்தளத்தில் ஏதேனும் ஒரு வகையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், இராமநாதபுரம் மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது” “தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அரசு  கணக்கெடுப்பு நடத்த வேண்டும். குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வேண்டும். குழந்தைகளின் குடும்பத்தினர் பொருளாதாரத்தை ஈட்டுவதற்கு சில திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். இதன் மூலம் அந்தக் குடும்பங்கள் வறுமையிலிருந்து வெளியேறி,  குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதைத் தவிர்க்க முடியும்”. குறிப்பாக தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த அனைத்துக் குழந்தைகளையும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைத்து அவர்களுக்கு தொடர்ந்து கல்வி கிடைப்பதை உறுதி செய்யவேண்டுமெனவும் ஆர்.கருப்பசாமி சுட்டிக்காட்டியுள்ளார். 

தமிழ்நாடு சிறுவர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் கன்வீனர் ஆண்ட்ரூ ஜேசுராஜ் கூறுகையில், “ 18 வயது வரை ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  அனைத்து கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளை ஒரு கட்டத்தில் திறக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறுவது, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுவது மற்றும் கடத்தப்படுவது போன்றவற்றை தடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்” என்றார்.மேலும் அவர் கூறுகையில். “ தொற்றுப் பரவல் காலத்தில் அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள், கட்டணம் செலுத்த இயலாதமாணவர்களை வெளியேற்றும் நிலையைத் தடுக்க தமிழக அரசு  தனியார் பள்ளிகளின் கட்டண வசூலை ஒழுங்குபடுத்த வேண்டும். அரசுப் பள்ளிகள் இணைப்பு என்ற பெயரில்  பள்ளிகளை மூடுவதை அரசு நிறுத்த வேண்டுமென்றார்”.

நன்றி :  தி இந்து இணையதள தகவல்கள்.

தமிழில்: ச.நல்லேந்திரன்

;