articles

img

இன்னும் பல நூறாண்டு போற்றப்படுவார் பாரதி....

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 1886-ஆம் ஆண்டு பிறந்த அவர் 1921-ஆம் ஆண்டு மறைந்தார். அவர் இந்தப் பூவுலகில் வாழ்ந்த காலம் 39 ஆண்டுகள் மட்டுமே. தன்னுடைய வாழ்நாளில் மிகக்குறுகிய காலத்திலேயே அவர் ஆற்றியுள்ள எழுத்துப்பணி, விடுதலைப் போராட்டத்தில் அவருடைய பங்களிப்பு 100 ஆண்டுகள் மட்டுமல்ல. இன்னும் பல நூறு ஆண்டுகளுக்குப் போற்றப்படும். அவருடைய புகழ் வாழ்வு இன்னும் பல நூறாண்டுகள் பூவுலகில் நிலைத்து நிற்கும். 

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தனது இளமைக்காலத்திலேயே அவர், வீரச்சமர் புரிந்தார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மக்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆண்டதுடன் இந்திய மக்களின் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றதை தன்னுடைய கவிதைகளின் மூலமும் கட்டுரைகளின் மூலமும் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் பாரதியார். “பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ, நாங்கள் சாகவோ” என்று அன்றைக்கு குமுறினார் பாரதியார். நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள்நிறைவடைந்துள்ள நிலையில் விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்காத பாஜக பரிவாரத்தின் கையில் ஆட்சி-அதிகாரம் சிக்கியுள்ளது. இன்றைக்கு பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கைமாற்றி விடப்படுகிறது. நாட்டின் அனைத்துத்துறைகளையும் சேர்ந்த மக்களின் சொத்தை ஆறு லட்சம் கோடி அளவிற்கு ஒரே மூச்சில் தனியாருக்குத் தருகிறது ஒன்றிய பாஜக அரசு.

அன்றைக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் மக்களின் சொத்தை அந்நியர்கள் சூறையாடினார்கள். இன்றைக்கும் அதே கொடுமை நீடிப்பது வேதனையிலும் வேதனை. பாரதியின் பாட்டு வரிகள் இன்றைக்கு நடைபெறும் கொள்ளையை எதிர்த்து நாம் போராடுவதற்கான உத்வேகத்தை அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளன.வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தில் ஒரு கவிஞர் என்ற அளவில் மட்டுமல்ல; நேரடியாக களப் போராட்டங்களிலும் பாரதியார் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தூத்துக்குடியில் தொழிலாளர்களின் உரிமைக்காக போர்க்குரல் எழுப்பிய வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவாபோன்ற தேசபக்தர்கள் அந்நிய ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவர்களை நேரில் சென்று பாரதியார் சந்தித்தார். வ,உ,சி. அனுபவித்த சிறைக் கொடுமைகளை ஊனுருக, உயிருருக கவிதைகளாக, பாடல்களாக எழுதினார்.

தூத்துக்குடி போராட்டத்தின் போது தொழிலாளர்களை காக்கை, குருவிகளைப் போல சுட்டுத்தள்ளிய ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டு வீழ்த்தினார். அந்த வழக்கில் பலரும் கைது செய்யப்பட்ட நிலையில மகாகவி பாரதியார் பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரியில் குடிபுகுந்தார். அப்போதும் அவரது தேசபக்த பணி ஓயவில்லை. ஆஷ்துரை கொலை வழக்கை விசாரித்த நீதிபதி, வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுக்கொல்வதற்கு பாரதியாரின் கவிதைகளும் ஒரு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அந்தத் தீர்ப்பில் நீதிபதி மேற்கோள் காட்டியுள்ளார். பாரதியாரின் “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” என்ற பாடலும், விஞ்ச் துரைக்கும் வ.உ.சிக்கும் இடையிலான உரையாடல் போல  பாரதியார் எழுதியிருந்த பாடலும்  இந்தக் கொலையை தூண்டிவிடுவதாக இருந்தது என நீதிபதி கூறியிருந்தார். அந்தளவிற்கு பாரதியாரின் கவிதைகள் உத்வேகம் ஊட்டக்கூடியதாக அமைந்திருந்தன. ஆஷ்துரை கொலை வழக்கில் பாரதியின் எழுத்துக்களும் ஒரு காரணம் என்று நீதிபதி மறைமுகமாக குற்றம்சாட்டியதிலிருந்து அந்தக் காலத்தில் பாரதியின் கவிதைகள் எந்தளவிற்கு மக்களிடமும்  தேசபக்தர்களிடமும் பரவியிருந்தது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
அன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் மிதவாதிகள், தீவிரவாதிகள் என இரண்டு அணிகள்இருந்தன. பாரதி தீவிரவாதிகள் என்று கூறப்பட்டவர்களை ஆதரித்தார். பாலகங்காதர திலகர், லாலாலஜபதிராய், விபின்சந்திரபால் ஆகியோருடன் பாரதியார் தம்மை இணைத்துக்கொண்டார்.பின்னாளில் மகாத்மா காந்தியை “வாழ்க நீ எம்மான்” என்று வாழ்த்திப் பாடிய போதும் மக்களின் ஆவேசம் மிக்க போராட்டங்களின் மூலமாகவே நாடு விடுதலை பெற முடியும் என்பதிலும் பாரதி அழுத்தமான கருத்து கொண்டிருந்தார்.

பாரதியார், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, மண்டயம் பிரதிவாதி பயங்கரம் திருமலாச்சாரி ஆகியோர் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு திலகருடடைய கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர. திலகர் மற்றும் அவரது கோஷ்டியினர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரவாதக் கருத்துக்களை முன்வைத்தபோதும் சமூக சீர்திருத்த விஷயங்களில் மிகவும் பிற்போக்கான கருத்தோட்டத்தையே கொண்டிருந்தனர். அவர்களது அணுகுமுறைக்கு மதவாதம்அடிப்படையாக இருந்தது. ஆனால், கோபாலகிருஷ்ணகோகலே, காந்தியடிகள்போன்றவர்கள் மிதவாதிகள் என்றழைக்கப்பட்டாலும் சமூக சீர்திருத்த விஷயங்களில் முற்போக்கான பார்வையைக் கொண்டிருந்தனர். பாரதியார் திலகரை ஆதரித்தபோதும் அவருடைய பத்தாம் பசலித்தனமான மதவாத கொள்கைகளை ஆதரிக்கவில்லை. மாறாக பெண் விடுதலை, சாதி-மத எதிர்ப்பு,மூடநம்பிக்கைகள் எதிர்ப்பு, அனைவருக்கும் கல்வி என சமூக சீர்திருத்த கண்ணோட்டம் கொண்டவராக இருந்தார். விடுதலைப் போராட்டத்தோடு சேர்த்து சமூக சீர்திருத்தக்கருத்துக்களை தன்னுடைய படைப்புகளில் வெளியிட்டார். வாஞ்சிநாதன் போன்றவர்களுக்கு உத்வேகமாக இருந்தாலும் தனிநபர் பயங்கரவாதத்தை பாரதியார் ஆதரிக்கவில்லை. மக்கள் எழுச்சியில்லாமல் விடுதலைப்போராட்டம் வெற்றிபெற முடியாது என்பதில் பாரதியார் தெளிவாக இருந்தார்.

பெண் விடுதலைக்காக பாரதி பாடிய பாடல்கள் அவருடைய பாலின சமத்துவ பார்வையை பறைசாற்றுவதாக உள்ளது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட காலம் மலையேறிவிட்டது என்று முழக்கமிட்ட அவர், “பட்டங்கள் ஆள்வதும்; “சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”, “எட்டும் அறிவினில் ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை காண்  என கும்மியடி” என்று புதுமைக் கும்மி பாடினார். பெண்ணுரிமை குறித்து பெரிதும் பேசப்படாத அந்தக் காலத்திலேயே பாரதி இவ்வாறு பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.“சாதிகள் இல்லையடி பாப்பா” என்று குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்கும் பாரதி சாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக சமரசமின்றி பாடியுள்ளார். நாடு பெறுகிற விடுதலை அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று கருதிய பாரதி விடுதலையை அனைத்து சாதியினருக்கும் பொதுவில் வைத்ததன் மூலம் தேச விடுதலையோடு சமூக விடுதலையை இணைத்துள்ளார்.

தீண்டாமைக் கொடுமைகளை தன்னுடைய கவிதைகளில் கடுமையாகச் சாடிய பாரதியார் தன்னுடைய வாழ்விலும் அதைக் கடைப்பிடித்தார் “சாதி மதங்களைப் பாரோம், உயர் ஜென்மம் இத் தேசத்தில் எய்தினராயின், வேதியராயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தவர் ஆயினும் ஒன்றே” என்று பாடிய பாரதி மனுநீதியை அடியோடு வெறுத்து அனைவருக்குமான பொது நீதியையே தமது படைப்புகளில் வைத்தார்.கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதும் அனைத்துக் கடவுள்களையும் பாடியுள்ளார். இதனால் தான் மதவெறி அண்டாத நெருப்பு என பாவேந்தர் பாரதிதாசன் பாரதியைப் பாடியுள்ளார்,அன்றைக்கு தகவல் தொடர்பு அதிகம் இல்லாத காலம். ஆனால், ரஷ்யாவில் மாமேதை லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் நடத்திய புரட்சியை இங்கிருந்தே வாழ்த்தி வரவேற்றார் பாரதியார். அதை ஒரு யுகப்புரட்சி என சரியாகக் கணித்தார். இந்தியாவில் இடதுசாரிக் கருத்துக்கள் பெருமளவு பரவாத காலம் அது. எனினும் தாம் அறிந்துகொண்ட செய்திகளிலிருந்தே பொதுவுடைமைக் கொள்கைகளை மகிழ்ந்து கொண்டாடினார் அவர்.“தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்ற பாடலும், “வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும். இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்” என்ற பாடலும், “முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுதுக்கும் பொதுவுடைமை”, “ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை” என்றபாடலும் “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம்” வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்” என்ற பாடலும் பாரதியின் பொதுவுடைமைச் சிந்தனையில் மலர்ந்தவை ஆகும்.

உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்பது இன்றளவும் நிறைவேறாத ஒன்றாக உள்ளது. “காணி நிலம் வேண்டும்” என்று பராசக்தியிடம் அவர் முன்வைத்த கோரிக்கை ஒரு தனி மனிதனின் ஆசை அல்ல. உழுபவருக்கும் உழைப்பவருக்குமே உலகம்  சொந்தமானது என்ற சிந்தனையின் ஒரு பகுதியே ஆகும்.தமிழில் மார்க்சிய நூல்கள் பெரிதும் வந்திருக்காத காலம் அது. இந்தியாவிலும் கூட அந்தக் கருத்துக்கள் பெருமளவு பரவியிருக்கவில்லை. ஆனால், பாரதியின் பல பாடல்கள் இடசாரிக் கருத்தோட்டம் கொண்டவையாகவே இருந்தன. பொதுவுடைமை, புரட்சி என்ற வார்த்தைகளை தமிழுக்கு தந்தது மட்டுமல்ல அந்தக் கருத்துக்களை பரப்புவதிலும் பாரதி முன்னின்று இருக்கிறார். இவரோடு நெருக்கமாக இருந்த மண்டயம் பிரதிவாதி பயங்கரம் திருமலாச்சாரி என்ற எம்.பி.டி. ஆச்சாரியா தாஷ்கண்டில் அமைக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்முதல் கிளையில் உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதி இன்னும் நெடுங்காலம் வாழ்ந்திருந்தால் அவரும் கூட முழுமையான இடதுசாரிசிந்தனையாளராக மாறியிருக்க வாய்ப்புண்டு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.பாரதியார் தேசிய கவியா என்ற விவாதம் எழுந்தபோது தோழர் ஜீவா பாரதியை தோளில் சுமந்து தமிழகம் முழுவதும் சுற்றிச்சுழன்று பாரதியை ஒரு தேசியக் கவி என்றுநிறுவினார். பாரதியாரின் பாடல்கள் ஒருமுதலாளியிடம் சிக்கியிருந்தபோது அதைநாட்டுடைமையாக்க உழைத்ததில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு முக்கியப் பங்குண்டு.மகாகவி பாரதி மறைந்து 100 ஆண்டுகள் ஆனாலும் அவர் விதைத்த விதைகள் இன்றளவும் விளைந்து கொண்டிருக்கின்றன. விடுதலைப் போராட்டத்திற்காக அவர் தந்த கருத்தாயுதங்களை, கவிதை வாள்களை ஏந்தி பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்க போராடுவோம். இதுவே அவருக்குச் செய்யும் உண்மையான மரியாதை. 

கட்டுரையாளர் : கே.பாலகிருஷ்ணன், சிபிஎம் மாநிலச் செயலாளர் 

;